அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 15 December 2025

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கிச்சான்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: யதீந்திரா  
Tuesday, 30 August 2005


கிச்சான் - குறும்படம்
ஓர் அவதானநிலைப் பகிர்வு 

கிச்சான்
1.

கிச்சான், நமது சூழலில் நமது பிரச்சனைகளைப் பேசுபொருளாகக் கொண்டு வெளிவந்திருக்கும் ஒரு குறும்படம். இதனை கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திரு.விமலராஜ் இயக்கியிருக்கின்றார். முதலில் திரு.விமலராசஜுக்கு எனது பாராட்டுக்களைச் சொல்லிக் கொள்கின்றேன். பொதுவாக ஈழத்து தமிழ்ச் சூழலில் நமது அடையாளங்களுடன் கூடியதொரு சினிமா நம்மிடமில்லை. ஆங்காங்கே சில முயற்சிகள் மேற்கொள்ளபட்டிருந்தாலும் உலக அளவில் இது ஈழத் தமிழ் சினிமா என்று அடையாளப்படுத்தக் கூடியளவிற்கு நாம் வளரவில்லை. ஏன் எங்களால் அவ்வாறு வளரமுடியாமல் போனது என்பதற்கு அரசியல் சார்ந்தும் அரசியல் சாராமலும் காரணங்கள் உண்டு. பொதுவாக அரசியல் சாராத காரணங்களே பலராலும் முதன்மைப்படுத்துவது உண்டு. அவ்வாறானவர்கள் இப்படிச் சொல்லுவார்கள் தென்னிந்திய சினிமாவின் தாக்கம் எங்களுக்கானதொரு சினிமாவிற்கான தேடலை இல்லாமல் செய்துவிட்டது. இது நிராகரிக்கக் கூடிய கூற்றல்ல. (இது பற்றி நான் முன்னர் எழுதிய கட்டுரையொன்றில் விரிவாக பேசியிருக்கின்றேன். பார்க்க எங்களுக்கானதொரு சினிமா வளராமை குறித்து ஒரு தமிழ் நிலைப் பார்வை ) உண்மையில் தென்னிந்திய தமிழ் சினிமா நமக்கான சினிமா வளர்ச்சியை தடுக்கும் ஒரு காரணியாக தொழிற்பட்டிருப்பது மறுக்க முடியாத உண்மைதான். ஆனால் அரை நூற்றாண்டிற்கும் மேலாக தமிழர் தேசத்தின் மீது தொடர்ந்து வரும் சிங்களத்தின் இன அழித்தொழிப்பை கருத்தில்கொள்ளாமல் நமது சூழலின் வளர்ச்சி வளர்ச்சியின்மைபற்றி பேச முடியாது.
இன்று சிங்கள சினிமா உலகளவில் தனக்கானதொரு அடையாளத்தைக் கொண்டிருக்கின்றது. காத்திரமான சிங்கள சினிமாவோடு ஒப்பிட்டால் தென்னிந்திய தமிழ் சினிமா ஒரு சினிமாவே அல்ல. ஆனால் அரைநூற்றான்டிற்கும் மேலாக தமிழர் தேசம் ஒரு கலாசார சுரண்டலுக்கு ஆடபட்டுவந்தது என்பதை மனதில் இருத்தித்தான் நாம் சிங்கள சினிமாவின் வளர்ச்சியை பார்க்கவேண்டும். தமிழர் தேசமோ, சிங்கள மேலாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் தனது முழுக்கவனத்தையும் குவித்துநிற்க, சிங்களம் எங்களைச் சுரண்டி தன்னை வளர்த்துக் கொண்டது. நான் காத்திரமான சிங்கள சினிமாக் கலைஞர்களை குறைத்து மதிப்பிடுவதாக எவரும் கருதவேண்டியதில்லை. தமிழ் மக்களின் நியாயத்திற்காக குரல் கொடுக்கும் சில சினிமாக் கலைஞர்களையும் நானறிவேன்.

2.
ஈழத்து தமிழ்ச் சூழலில் எங்களுக்கானதொரு சினிமாவிற்கான தேவையை உணரச் செய்த, அதற்கான அடித்தளத்தை இட்ட பெருமை விடுதலைப்புலிகளின் திரைப்படப்பிரிவான நிதர்சனத்தையே சாரும். நிதர்சனத்தின் வருகைக்கு பின்னர்தான் எங்களுக்கானதொரு சினிமாவிற்கான தேவை பலராலும் உணரப்பட்டது. நிதர்சனம் பல காத்திரமான குறும்படங்களை வெளியிட்டிருக்கின்றது. சில கதைப் படங்களையும் வெளியிட்டிருக்கின்றது. அவை பெருமளவு போரியல் அனுபவத்தளம் சார்ந்ததாகவே இருக்கின்றன. தவிர ஸ்கிறிப்ட்நெட் பயிற்சியின் முலமும் சில காத்திரமான குறும்படங்கள் வெளிவந்திருக்கின்றன. சமீபகாலமாக புலம்பெயர் சூழலிலும் பல நல்ல குறும்படங்கள் வெளியாகியிருப்பதை அறிய முடிகிறது. இத்தகையதொரு பின்னணியில்தான் திரு.விமலராஜின் கிச்சான்- குறும்படம் வெளிவந்திருக்கின்றது. இது அவரது முதலாவது முயற்சி என்பதைக் கருத்தில் கொண்டே நான் சில அபிப்பிராயங்களை பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

 

கிச்சான்அரை மணித்தியாலத்தைக் கொண்ட இந்த குறும்படத்தின் கதை இதுதான்.
யுத்தகாலத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் சிறுவனின் தந்தை கொல்லப்படுகிறார். குடும்பச்சுமையிலிருந்து விடுபட வெளிநாடு (மத்திய கிழக்கு) சென்ற தாய் தொடர்பற்றுப் போக சிறுவன் அனாதரவாகின்றான். சிறுவர் உரிமைகள் பற்றி பேசும் பல்கலைகழகச் சூழலில் இருக்கும் சிற்றுண்டிச் சாலையிலேயே பணிபுரிகின்றான். எந்த சிறுவர் உரிமையாளரின் கவனமும் அவன் மீது படவில்லை. மற்ற சிறுவர்கள் போலத் தானும் பாடசாலைக்குப் போக வேண்டும், விளையாட வேண்டும் என்றெல்லாம் அவன் ஆசைப்படுகிறான். அந்த சிறுவனின் கனவுகளும் அவனது எதிர்காலமும்; சிறுவர் உரிமை பற்றிய உரத்த பேச்சுக்களுக்கு மத்தியில் எவ்வாறு அமிழ்ந்து அழிந்து போகிறது என்பதுதான் கிச்சான். படத்தில் சிறப்பான முறையில் வந்தாறுமுலைப் படுகொலைகயையும் பதிவு செய்திருக்கின்றார் திரு.விமலராஜ்.


3.
சினிமா என்பது பல கூறுகளின் கலவை கெமரா,எடிட்டிங்,இசை,கதை எனப் பல விடயங்களுடன் இணைந்ததே சினிமா நெறியாள்கை. இதில் ஒன்று பிழைத்துப்போனாலும் சினிமாவின் காத்திரம் கேள்விக்குறியாகிவிடும். அந்த அடிப்படையில் பார்த்தால் கிச்சானில் சில குறைபாடுகள் தெரியவே செய்கின்றன. உதாரணமாக கெமராவை கையாண்டதில் சில குறைபாடுகள் வெளிப்படையாகவே தெரிகின்றது. ஆனால் கருத்தியல்ரீதியில் கிச்சான், சிறுவர் உரிமையின் அரசியலை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பதாகவே நான் கருதுகின்றேன். இந்தப் படத்தைப் பார்த்ததும் எனக்கு திருகோணமலையில் UNHER அலுவலகத்திற்கு முன்னாலுள்ள, கூல்ஸ்பொட்தான் நினைவுக்கு வந்தது. அந்தக் கடையில்தான் பெரிய கொடிகள் சகிதம் திரியும் பல INGOS  களைச் சேர்ந்தவர்கள் தேனீர் அருந்துவதும் ஜஸ்கிறீம் சாப்பிடுவதும். சனி,ஞாயிறு தினங்களில் இவர்களையெல்லாம் உபசரிப்பது ஒரு 13க்கும் 15ற்கும் இடைப்பட்ட இரு சிறுவர்கள்தான். தம்பலகாமம் புதுக்குடியிருப்பில் தெலுங்கு நகரென்ற இடமொன்று உண்டு. சமீபத்தில் அந்தப்பகுதியைச் சேர்ந்த 8வயது மதிக்கத்தக்க இரு சிறுமிகள், 14வயது மதிக்கத்தக்க இரு சிறுமிகளின் துனையுடன் பிச்சை எடுத்துத் திரிந்ததைப் பார்த்தேன். ஆனால் நமது சர்வதேச சிறுவர் உரிமைவாதிகளுக்கும் அவர்களுக்கு காவடி தூக்கித்திரியும் நம்மவர் சிலருக்கும் சிறுவர்கள் பிச்சை எடுக்கலாம், கடைகளில் குழந்தைத் தொழிலாளர்களாக பணிபுரியலாம். அவையெல்லாம் ஒரு பிரச்சனையே அல்ல. ஆனால் தப்பித்தவறியும் விடுதலைப்புலிகளில் சேர்ந்து விடக்கூடாது. அது மட்டும்தான் சிறுவர் உரிமை மீறல். சிறுவர் உரிமை வாயத்தில் சிறுவர் பாதுகாப்புத் தொடர்பாக 54 சரத்துக்கள் இருக்கின்றன. ஆனால் நமது சிறுவர்உரிமை ஜாம்பவான்கள் பேசிவருவதோ சிறுவர்களை படையில் சேர்ப்பதை மட்டும்தான். இத்தனைக்கும் சிறுவர்களை படையில் சேர்ப்பது தொடர்பான விடயம் சிறுவர் உரிமை சாசனத்தின் 38வது சரத்திலுள்ள ஒரு உபபிரிவாகும். 1989இல் செய்யப்பட்ட சிறுவர் உரிமைகளுக்கான உடன்படிக்கையானது, 15 வயதிற்கு குறைந்த சிறுவர்கள் பகைமுரண்பாடுகளில் நேரடியாக ஈடபடாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்” எனக் கூறுகிறது. இவ்வுடன்படிக்கையின் கீழ் சிறுவர் என வரையறுக்கப்படுவர்கள் 18 வயக்கும் குறைந்தவர்களாவர் ஆனால் படையில் சேர்வதற்கான எல்லை 15ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
                                
இங்கு சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்போம் என்ற பேரில் விடுதலைப்புலிகளை ஒரு பொறிக்குள் சிக்கவைக்கும் முயற்சியிலேயே பெருமளவிலான சிறுவர் உரிமைவாதிகளும் அவர்கள் சார்ந்த நிறுவனங்களும் ஈடுபட்டுவருகின்றன. இது தொடர்பில் எல்லோருக்கும் தலைமை தாங்கும் நிறுவனமே UNITED NATIONS CHILDREN’S FUND - UNICEF  ஆகும். இதில் உள்ளஆச்சரியமும் அசிங்கமும் என்னவென்றால் உலகத்திற்கு சனநாயகம், நீதி என்பவற்றைப் போதித்துவரும் அமெரிக்கா இவ் உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை என்பதே. ஆனால் அதுபற்றி UNICEF வாய்திறப்பதில்லை. இதைவைத்தே யுனிசெப்பின் அரசியலை நாம் விளங்கிக்கொள்ள முடியும். இதில் கவனம் கொள்ளவேண்டியது சிறுவர் உரிமைபற்றி அதிகம் பிரஸ்தாபிக்கும் எவரும் தமிழ் மக்களின் தேசிய உரிமைகளுக்காகப் பேசியதில்லை. தவிர விடுதலைப்புலிகளை பொறிக்குள் அகப்படுத்துவது என்பதும் தமிழர் தேசத்தின் விடுதலையை சிதைப்பது என்பதும் வேறுவேறானதல்ல.
இந்த பின்னணியில் பார்த்தால்; தமிழ்நிலை அரசியலில், கிச்சான் கவனிப்புக்குரிய ஒரு திரை வெளிப்பாடாகும். இக்குறும்படம் சினிமாவிற்குரிய குணாம்சரீதியில் சில குறைபாடுகளைக் கொண்டிருந்தாலும் கருத்தியல்ரீதியில் காத்திரமானதொரு படைப்பாகும். நான் மேற்குறிப்பிட்ட விடயங்கள் கிச்சானில் நேரடியாக பேசப்படாவிட்டாலும் அவ்வாறானதொரு உரையாடலுக்குரிய களமாக இப்படம் இருக்கின்றது. அதுவே இப்படத்தின் வெற்றியும் எனலாம். 

 

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(3 posts)


     இதுவரை:  27951803 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 25974 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com