அம்புலி பற்றி

புதிய பத்தி எழுத்தொன்று இவ்விதழில் இருந்து ஆரம்பிக்கின்றது. அம்புலி எனும் இளைய பெண் எழுதுகிற நேசமொழியில் பேசவிடு எனும் பத்திதான் இது. அம்புலி தனது ஏழாவது வயதில் தேசம் விட்டு இங்கு வந்து இப்பொழுது பல்கலைக்கழக மாணவியாக இருக்கின்றவர். தனது நாளாந்த அனுபவத்தை இந்தப் பத்தியின் ஊடாகப் பகிர்கிறார். புலம் பெயர்ந்த இளைய தலைமுறையின் அனுபவமும் இதனை ஒத்ததுதான் என்பதனால் இந்தப் பத்தி எழுத்தை அம்புலியிடம் உவந்து பெற்று வெளியிடுகிறோம். இந்தப் பத்தி தொடர்பாக உங்கள் ஊக்கத்தை கவனத்தை எதிர்பார்க்கிறோம்.

நன்றியுடன்
ஈழமுரசு
11.10.2001



மண்ணின் துகள்
மழையின் சாறல்
மலரின் இதழ்
அலையின் அசைவு
கவியின் காதல்
யாவுமே எழில்தகு மண் எம்மண். ஈழத்தின் அழகு போல் அவள் கூறாம் இவளின் மொழியும் அழகே. செந்தமிழை உடைத்து உடைத்து செப்பெனச் செதுக்கியவள். சொற்களால் அகராதி உதிர்த்தவள். அவளின் ஊற்றை வரம்பின்றி வாய்க்கால் வெட்டி ஓடவிடு எம் நேசமொழியே!

:: இந்து



அவுஸ்திரேலியா, டென்மார்க் பல்கலைக்கழகங்களில் விவசாயத்துறையில் விரிவுரையாளராக பணியாற்றிவரும், இள வயதினருக்கான மேம்பாட்டுத் திட்டங்களையும் அவர்களுக்கான பயிற்சிப்பட்டறைகளையும் நடைமுறைப்படுத்தி வருபவரும், சிறந்த சிந்தனையாளருமாகிய பேராசிரியர் சிறீஸ் கந்தராசா அவர்களுடனான நேர்காணல். -பரணி

புதிய தலைமுறை பற்றிய எமது புரிதல்கள்

ஈழமுரசு: ஈழமுரசில் வெளிவரும் நேசமொழியில் பேசவிடு எனும் பத்தியை எழுதுபவர் ஒரு இளம் பல்கலைக்கழக மாணவி. அது பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

பதில்:
அதை வாசிக்கும்போதே அவர் ஒரு பல்கலைக்கழக மாணவி என்பதை உணர முடிகிறது. அவர் பயன்படுத்துகிற மொழியும், மேற்கொண்டு வருகின்ற சிந்தனைகளும் ஒரு வளர்ந்த இயல்பாகத் தமிழ் எழுதுகிற ஒரு முதிர்ந்த எழுத்தாளருடைய தன்மையைப் பிரதிபலிக்கின்றது. அவரை நீங்கள் ஒரு சமூகவியல் மாணவி என்று குறிப்பிட்டீர்கள். கேட்கவே சந்தோசமாக இருக்கின்றது. ஏனென்றால் இந்தத் துறையைக் கற்பவர்கள் குறைவாக உள்ள புலம்பெயர் தமிழ்ச் சூழலில் வெளிநாடுகளில் இதைக் கற்றுத் தெளிந்தவர்கள் எதிர்கால சமுதாயத்திற்கு அவசியம் தேவைப்படுகிறார்கள்.

:: சிறீஸ் கந்தராசா