07.02.2002 - 13.02.2002
07.02.2002 வியாழன் இரவு 11.50
அது ஆப்கானின் காபுல் (Kabul) நகரம். கட்டிடங்களின் இடிந்த குவியல். வீசும் காற்றில் பறக்கும் தூசி. பிளந்த நிலத்தில் வெடித்த நீண்ட நாள் வறட்சி. மழையில்லை. தசைக்குள் ஊடுருவி எலும்புக்குள் ஊசியாய் குத்தும் குளிர் உண்டு. மெல்லிய பருத்தி உடை அணிந்த இந்த சிறுவர் சிறுமிகள் அதனை நன்றாக உணர்ந்திருக்கவேண்டும். அல்லாவிடில் கைகளை ஒன்றோடு ஒன்று தேய்த்தபடி தேகம் நடுங்க திகைத்து நின்றிருக்கமாட்டார்கள். இன்று காலை யூனிசெப் (UNICEF) நிறுவனத்தின் ஆப்கான் நிருபர்களுடன் காபுல் நகர பாடசாலைக்கு சென்றிருந்தபோது நான் கண்ட காட்சி அவ்வாறு இருந்தது. அதுமட்டுமல்ல.காலை ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் வகுப்புகளுக்கு எட்டு மணிக்கு வாசலில் காத்து நின்றன. அந்த பிஞ்சுக்கால்கள்.துருதுருவென்று விரித்து மூடும் விழிகளில் படிக்க வேண்டும் என்ற துடிப்பு இருந்தது. நண்பர்களின் தோள்களைத் தொட்ட கைகளில் தோழமை தெரிந்தது. அப்போது என் மனம் கலங்கவும் செய்தது.கல்விக்காக ஏங்கும் இந்தச் சிறுவர்களுக்கு அமர்ந்து படிக்க மேசை இல்லை. கதிரை இல்லை. பாடப்புத்தகங்கள் இல்லை. ஊசியாய் குத்தும் குளிரைத் தடுக்க சின்னதாயேனும் ஒரு யன்னல் இல்லை. எழுதிப் புரியவைக்க ஒரு கரும்பலகை இல்லை.தண்ணீர் குழாயில் குடிக்க நீர் இல்லை.வகுப்புகள் தொடர்ச்சியாக நடைபெறும் சூழல் இல்லை. கடந்த ஐந்து வருடமாக பெண்களுக்கு படிப்பதற்கு தடை… இப்படி ஆயிரம் இடர்களையும் மீறி காலை வேளையில் இந்தச் சிறுவர் சிறுமிகள் காத்திருந்தார்கள். என்பதற்கு ஒரு காரணம் மட்டும் இருந்தது. அது யுனிசெப் நிறுவனத்தின் “அனைத்து மாணவர்களும் பாடசாலைக்கு திரும்புங்கள்” (“All Children Back to School”) எனும் செயற்திட்டம். மார்ச் மாதம் 21ம் திகதி ஆப்கானின் அனைத்து நகரங்களிலும் அதிகார பூர்வமாக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்போது அனைத்து மாணவர் மாணவிகளையும் இணைத்து தகுந்த ஆசிரியர்கள் மூலம் தயார் படுத்துவதே இந்தச் செயற்திட்டத்தின் முக்கிய இலக்கு.தயார் படுத்தும் பாடங்களினூடாக (Catch-up Classes) ஒவ்வொரு மாணவரின் தரம் அறியப்பட்டு அதற்கேற்ப அவர்கள் பிரிக்கப்படுவார்கள். இன்று காலை ஆப்கானின் காபுல் நகரில் இதுபோன்ற தயார் படுத்தல் வகுப்புகளில் தம்மைப் பதிவு செய்வதற்காக காத்திருந்தனர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள். அதில் ஒருத்தி பத்து வயது நிரம்பிய நூர்ஜஹான். துள்ளிக்குதித்தவாறு நிரம்ப உற்சாகத்துடன் இருந்தாள். கொஞ்சம் ஆங்கிலம் பேசி வகுப்பை ஆரம்பிக்கச் சொல்லி எம்மை ஆக்கினைப்படுத்தி இழுத்துச் சென்றாள். நூர்ஜஹான் நீ மட்டுமல்ல உன்னைப் போன்ற அனைத்து மாணவர்களின் முகத்திலும் அறிவுப் பசி ஆறாய் ஓடியது. அது அழகாய் இருந்தது…” அது யுனிசெப் நிறுவனத்தின் அமெரிக்க பிரதிநிதி சாள்ஸ் ஜே லயன்ஸ் (Charles J.Lions) தனது மூன்று நாள் ஆப்கானின் காபுல் நகர விஜயத்தின்போது எழுதிய நாட்குறிப்பில் இருந்து எடுக்கப்பட்டது. ஆப்கானின் பல பாடசாலைகளுக்குச் சென்று பார்வையிட்டபோது ஏற்பட்ட அனுபவங்களை யுனிசெப் நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்டார் அந்த அமெரிக்க பிரதிநிதி .மின்னஞ்சல் மூலமாக எனக்கு கிட்டியது.அந்த நாட்குறிப்பு.வாசித்தவுடன் நான் திகைத்துப்போகவில்லை மெல்ல சிரிக்கச் செய்தேன்… வானில் இருந்து ஆப்கான் மீது குண்டு எறிந்தது அமெரிக்கா.அப்போது எத்தனை மாணவர்கள் உடல் சிதறி செத்துப் போயிருப்பார்கள்? படிப்பு இல்லை அந்த மாணவர்களிடம்.ஆனால் அவர்களுக்கென்று சொந்தமான உயிர் இருந்தது.அதைக்கூட அமெரிக்கா பறித்துவிட்டது.இன்று யூனிசெப் நிறுவனத்தின் அமெரிக்க நாட்டின் பிரதிநிதி அந்த மாணவர்களுக்கு அமர்ந்து படிக்க மேசை இல்லை. கதிரை இல்லை. என்று மனம் கலங்குகிறார்!
09.02.2002 சனி மதியம் 13.55
உலகத்திரைப்பட விழா (International Film Festival) நிகழும் நகரில் நானும் வாழ்கிறேன். என்பது ஒவ்வொரு வருடமும் நான் நினைத்து நினைத்து மகிழும் விடயம். இவ்வருடமும் திரைப்பட இயக்குனர் மீரா நாயருடன் (Mira Nair) பேச ஒரு வாய்ப்பு கிடைத்ததில் அந்த மகிழ்வு இரட்டித்தது.சிறந்த திரைப்படங்களைத் தெரிவு செய்யும் குழுவில் தலமை வகுக்க அவர் அழைக்கப்பட்டிருந்தார். பரீட்சைக்கு படிக்கும் காலம் இது.இருந்தபோதும் ஒரு மாலை மீரா நாயருடன் பேசலாம் என்று நினைக்கும் போது மனதிற்கு சுகமாக இருக்கிறது. ரெயின் இன்னும் விரைந்து செல்லாதா? அவரிடம் என்ன கேட்கலாம் என்று மனதிற்குள் ஒரு சட்டகம் போடுகிறேன். Salaam Bomboy! Missippi Masala, Kamasutra, Fire, Monsoon Wedding போன்ற மிகச் சிறந்த திரைப்படங்களைத் தயாரித்து இயக்கியவர் மீரா நாயர். சமூகத்தில் பலர் பேச மறுக்கும் விடயங்களுக்கு ஒளி கொடுத்து திரையில் விரித்த ஒரு துணிச்சலான பெண்ணாக, Monsoon Wedding லம் Venice திரைப்பட விழாவில் கோல்டன் லயனை (Golden Lion) தட்டிக்கொண்ட ஒரு தரமான இயக்குனராக நான் அவரை அறிந்திருக்கின்றேன். அதற்கும் அப்பால் சென்று பேச எனக்குத் தெரியவில்லை நான் இறங்க வேண்டிய தரிப்பிடம் வந்து விட்டது….
மாலை 4.20
சிவந்த மஞ்சள் நிறத்தில் ஆடை.தோள்வரை வெட்டிய தலைமுடி, அங்கும் இங்கும் அலைந்த கறுத்த விழிகள், மெலிதான புன்னகை அல்ல, கண்கள் விரிய பற்கள் தெரிய வெளிப்படையான சிரிப்பு. இவ்வாறு நான் மீரா நாயரைக் கண்டேன். கலையாழுமை கொண்ட தன்னடக்கமுள்ள ஒரு இயக்குனரைச் சந்தித்துப் பேசியதில் என்னுள் எஞ்சியது மகிழ்வு, வியப்பு, மனநிறைவு கலந்த ஓர் உணர்வு . இங்கிலாந்தின் மிகச் சிறந்த திரைப்படப் பிரதிகளை (Screenplay) உருவாக்கும் “The Script Factory” என்ற நிறுவனம் இந்த நிகழ்வினை சாத்தியமாக்கியது. மீரா நாயருடன் Kamasutra வின் ஒளிப்பதிவாளர் (Cinematographer) Declan Quinn என்பவரும் Salaam Bombay! Mississippl Masala வின் திரைக்கதை ஆசிரியர் (Screenplay Artist) Sooni Taraporavala என்பவரும் கலந்து கொண்டனர்.புதிய முறையில் அமைந்த அழகான திரையரங்கினில் நடந்தது அந்த நிகழ்வு.அரங்கம் நிறையவில்லை.எனினும் ஆர்வலர்கள் பலர் அமர்ந்திருந்தனர். ஒரு முறை கேள்வி ஒன்று எழுந்தது. “Declan Quinn ஐ நீங்கள் எவ்வாறு சந்தித்தீர்கள்?” அருகில் இருந்த Quinn னுடைய கண்களைப் பார்த்துவிட்டு மீரா நாயர் இவ்வாறு கேட்டார். Quinn உன்னை நான் எப்படிச் சந்தித்தேன்? எந்த வீதியில் நாம் சந்தித்தோம்? சட்டென வெளிப்பட்டது அந்தக் குறும்பு. பலர் அதனை இரசித்தனர். இன்னொருமுறை அவர் இப்படிச் சொன்னார்: “அழகான விடயங்களில் எனக்கு அதிக ஆர்வம் இல்லை.வாழ்வினை ஆழ்ந்து நோக்குகின்றேன். அதிலிருந்து பிறக்கின்றன எனது எண்ணங்கள். சமுதாயத்தில் இருளான பக்கங்களை திரையாக்குவதில் நான் பயப்பிடுவதில்லை. (I’m not interested in pretty things,My inspiration Comes from the observation of life and I’m not afraid to show the darkness of our Society) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த ஒரு பெண் இயக்குனர் இவ்வாறு சொன்னது பலருக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. “ஒரு எண்ணக்கரு எப்போது எவ்வாறு திரைப்படமாகும்?” அது என்னுள் விழுந்த கேள்வி. “சில எண்ணங்கள் என்னையும் மீறி என் தோலிற்குள் சென்றுவிடும். எப்போது அவை என்னை விட்டகலாமல் எனது உடலிலேயே சீவிக்கத் தொடங்குமோ அப்போது நான் அவற்றுக்குப் பதில் அளிப்பேன். அது ஒரு திரைப்படமாக உருப்பெறும்.” அதுபோக அவரின் திரைப்படங்கள் உருவாகுவதன் பின்னணியை அறியக் கூடியதாக இருந்தது. “ஒவ்வொரு திரைப்படமும் காட்சியாக ஒளிப்பதிவு செய்யமுன் இரண்டு வார பயிற்சிப்பட்டறை நடைபெறும் திரைப்படத்தின் அனைத்துக் கலைஞர்களும் அமர்ந்திருக்க திரைக்கதை வாசிக்கப்படும்.ஒவ்வொரு வாக்கியமாக கலந்து ஆலோசிக்கப்பட்டு தேவை ஏற்படின் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். அந்தக் குறிப்பிட்ட வாக்கியம் ஒரு நடிகரால் பேசப்படும் போது ஒலியளவு ஒளியமைப்பு, சூழல், உடையலங்காரம் எவ்வாறு அமையவேண்டும் என்பதும் பேசப்படும். உதாரணத்திற்கு Monsoon Wedding என்ற திரைப்படத்தின் பல காட்சிகளை இருளினிலேயே ஒளிப்பதிவு செய்தோம்.உலகு இருளும் போது உண்மை வெளிவரும் இல்லையா?”
13.02.2002 புதன் இரவு 10.45
நெஞ்சுக்குள் கூடு கட்டி குமையும் வலி இது. சொல்லிப் புரியவைப்பது மிகவும் கடினம்.எனது பல்கலைக்கழகத்தில் படிக்கும் சகமாணவி தனது பிறந்தநாளிற்கு நாளை மறுநாள் என்னை வரும்படி அழைத்திருந்தாள். “வருவாய்தானே” என்று அவள் கேட்டபோது “நாளை தொடர்பு கொள்கிறேன்” என்று மட்டும் என்னால் சொல்ல முடிந்தது. கேள்விகள் என்னைப் போட்டு உலுப்பியெடுத்தன. எத்தனை முறை என்னோடு படிக்கும் மாணவர்களுக்கு இவ்வாறு சொல்லி பின்னர் தொடர்பு கொண்டு “என்னால் வரமுடியாது” என்று கூறியிருக்கின்றேன். மனம் வலித்தது. வீடு வந்தவுடன், அப்பா, அம்மாவுக்கு சொன்னேன். உடனே போனால் எத்தனை மணிக்கு வீட்டை வருவாய்” என்ற கேள்வி வந்தது. அவள் என்னை விடியும்வரை நிற்கச் சொன்னாள். ஆனால் இரவு 12 மணிக்கு என்னை வந்து கூப்பிடுங்கோ. அதுவரைக்கும் நிற்கின்றேன்” என்று சொன்னேன். நீண்ட உரையாடல்களுக்குப் பின் “சரி போய்ட்டு வா” என்றனர். அப்பா அம்மாவினதும் கலக்கம் எனக்கு நன்றாகப் புரியக் கூடியது.இது எமது நாடல்ல, வியாபார நோக்கம் கொண்ட முதலாளித்துவ சமூகத்தில் புலம் பெயர்ந்து போய் வாழ்வது மிகுந்த கடினம். இருந்தும் என் மனம் நோகக் கூடாது என்பதற்காக “சரி” என்று சொல்லிவிட்டார்கள். கேட்டவுடன் துள்ளிக்குதித்து மகிழ மறுத்தது என் மனம்.எனக்கு தெரியும் அவளின் பிறந்த நாளுக்கு நான் அறியப்படாத பலர் வருவார்கள். எனக்கு சுட்டுபோட்டாலும் அவர்களுடனும், அவர்களின் கருத்துக்களுடனும் ஒட்ட முடியாமல் போகும். அந்தச் சில மணி நேரத்திற்காக அவர்களுக்கு ஏற்றபடி என்னை மாற்றிக்கொள்ளமுடியாமல் தவிப்பேன். சிலருக்கு என் உலகு பற்றி புரியவைக்க முயன்று தோற்றுப்போவதே அதிகம் நிகழும் ஒன்று. “இறுதியில் ஏன் இங்கு வந்தேன்” என்ற கேள்வி என்னைக் குடைந்தெடுக்கும். நாளை மறுநாள் அவ்வாறுதான் நிகழப்போகிறது. அவளின் பிறந்தநாளிற்குப் போனால் மனம் அங்கு ஒட்டமுடியாமல் கஸ்ரப்படும். போகாவிடில் மனம் விலகி இருந்து கஸ்ரப்படும். விரிவுரைகளில் மீண்டும் அவளைக்கண்டால் நிமிர்ந்து பார்த்து பேசமுடியாது. அது அனைத்தையும் மீறிய வலி. இவை அனைத்திற்கும் இடையிலான எனது வாழ்வை எனது உலகும் புரியாது. அவளின் உலகும் புரியாது. இந்த வாழ்வு போர் அன்றி வேறேது?