17.01.2002 - 23.01.2002
17.01.2002 வியாழன் காலை 8.45
இத்தனை அழகான விடியலை நான் பார்த்து நீண்ட காலம் ஆயிற்று. மனம் மகிழ்ந்தது. தலையில் தண்ணீர் ஊற்றினேன். வெண்முகில்களை ஊதித்துடைத்தாற்போல வானின் நீலம். நிமிர்ந்து பார்த்தேன். கண்கள் கூச கைகளால் கண்களைப் பொத்தினேன். கடல் கடந்து பறந்து சென்ற சிட்டுக்குருவிகளெல்லாம் மீண்டும் சிறகடித்து மரங்களில் அமர்ந்திருக்கின்றன. “உய்க் உய்க்” என்று ஒலியெழுப்பியபடி மரங்களில் தாவித்திரிகின்றன. யன்னல்களை அகலத்திறந்துவிட்டேன். வீசிய காற்று முகத்தில் அறையவில்லை. இதமாக வருடிச் சென்றது. எனது யன்னலோர மரத்தில் கூட ஆயிரம் மொட்டுகள் முளைவிட்டிருக்கின்றன. எனது நண்பன் சொல்வான். “ஆசிய நாட்டு மக்களுக்கு தோலைச் சுட்டெரித்த சூரியன் பின் வரும் மழைக்காலம் மிகவும் பிடித்ததொன்று. ஐரோப்பியர்களுக்கு காதுகளை பிய்த்தெடுக்கும் பனிக்குப் பின் முளைவிடும் மொட்டுக்காலம் இருக்கிறதே! மரங்களுக்கு மட்டுமல்ல மனிதருக்கும் உயிர் வந்து சேரும் காலம் அது. கலைந்த மனதிற்கு மருந்து அது.”
மொட்டுகள் நிறைந்த கிளையொன்றை எட்டிக் கைகளால் வளைத்து பிடுங்கி எனது நாட்குறிப்பின் இன்றைய பக்கத்தில் செருகினேன்.வாழ்வில் மிகுந்த நம்பிக்கையை ஊட்டியது அந்த கிளை.கருகிய வாழ்வுகூட பூத்துக்காய்க்கும் என்று மனம் சொன்னது. வேறு மரங்களில் அமர்ந்திருந்த குருவிகள் ஒன்றாகக்கூடி சிறகடித்து தூரப் பறக்கின்றன. நீலவானில் கறுத்தப்புள்ளிகளாக அசைந்து திரிகின்றன. நீண்ட நேரம் அவற்றைக் கண்களால் தொடர்ந்தேன். இப்போ கட்டங்களுக்குப் பின் மறைந்திவிட்டன. பறந்து பறந்து திரியும் இந்தக் குருவிகளைப் பார்த்து வியக்காத நாளில்லை . ஒவ்வொரு சிறகடிப்பிலும் விடுதலையின் உச்சம் தெரிகிறது.பாரதி நீ சொன்னது சரிதான். “சிட்டுக்குருவியை போல விட்டு விடுதலையாகி…” உன்னோடு நிறையப் பேச வேண்டும் போலுள்ளது. உடலில் மூச்சாய் உலவும் காற்று வார்த்தையாய் வெளியே வராதா?
18.01.2002 வெள்ளி மதியம் 12.40
“நான் 90 வயதுவரை வாழ்வேன். நீங்கள் 80 வயதில் அல்லது அதற்கு முன்னே இறந்திவிடுவீர்கள்” என்று அடிக்கடி சொல்லியும் என் நண்பர்கள் கேட்பதாக இல்லை. தொடர்ந்தும் புகைபிடித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். சற்று முன் கருத்தரங்கின் நடுவில் சிறு இடைவேளை விட்டது.உடனே புகைபிடிப்பதற்காக வெளியே வந்ததுமட்டுமல்ல கூடவே பேசுவதற்கு என்னையும் இழுத்து வந்துவிட்டார்கள். ஆனால் புகைபிடிக்கும் இந்த ஐந்து நிமிடத்தில் ஆரோக்கியமான கருத்துக்கள் பரிமாறப்படும்…
நண்பர் 1: பெர்ரோல்ற் ப்ரேக்ட் (Bertolt Brecht) பற்றிய ஒரு கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. ஆனால் ஆழமான பார்வைகள் ஒன்றும் முன்வைக்கப்படவில்லை.
நான்: ப்ரேக் பற்றி பேசும்போது Epic Theatre என்பது மிகவும் முக்கியமானதொன்று. இல்லையா? அவரின் நாடகங்களில் இரண்டு வேறுபட்ட உக்திகள் இணைக்கப்படும். ஒன்று நாடகத்திற்கே உரிய உக்திகள் (Dranatic Strategies). மற்றொன்று நாவலின் விவரிக்கும் தன்மை உடைய உக்திகள் (Narrative Stategies). இவை இரண்டும் மிகவும் அழகாக சேர்த்துக் கோர்க்கப்பட்ட நாடகம் தான் Mothe Courage and the Children.
நண்பர் 2: மிகவும் சரி. அதற்கும் அப்பால் அவரது நாடகங்களில் பார்வையாளார்களின் முக்கியத்துவம் பற்றிச் சொல்லவேண்டும். மற்றைய நாடகங்கள் போல் அல்லாது இங்கு பார்வையாளார்கள் கதையின் சூழலுடன் கதாப்பாத்திரங்களுடன் ஒன்றிப்போகாதபடி சில உக்திகளை கையாளுவார் (Alienation Effect)
நண்பர் 1: அதனைத்தான் சொல்ல வந்தேன். பார்வையாளார்கள் தம்மைத் தூரவைத்து விமர்சனக் கண்ணோடு கதாப்பாத்திரங்களைப் பார்ப்பார்கள். நாடகத்துறையில் இதுபோன்ற புதுமைகளை புகுத்தியவர் ப்ரெக்ட் என்று தான் சொல்லவேண்டும் .
நான்: அதனால் தான் பின் நவீனத்துவத்தின் (Post Modernism ) பிரதிநிதியாக ப்ரெக்ட் கருதப்படுகிறார்.
நண்பர் 2: “Oh What a lovely war” எனும் தலைப்பில் ஒரு நாடகப் பயிற்சிப்பட்டறை (Workshop) இன்னும் சில வாரங்களில் நடைபெற இருக்கிறது. நாம் மூவரும் ஒருமுறை சென்று பார்க்க வேண்டும். ப்ரெக்ட் பற்றி அறிய இன்னும் நிறைய இருக்கிறது…
23.01.2002 புதன்காலை 9.05
விரைந்து செல்லும் ரெயினில் நின்றபடி பயணிப்பதும் ஓர் அனுபவம்தான். யன்னலோரம் மட்டுமல்ல அனைத்து இருக்கைகளும் நிரம்பிவிட்டன. எனக்கும் முன்னும் பின்னும் மனிதர் கூட்டம். நெடுந்தூரம் நேராகச் சென்ற தண்டவாளம் இப்போ ஒரு பக்கமாக வளைந்து செல்கிறது. ஒருவர்மேல் ஒருவர் சாய்ந்து விடாமல் ரெயின் கம்பிகளை இறுகப்பிடித்தபடி உறைந்து போய் நிக்கிறார்கள். வேலைக்குச் செல்லும் பலர், ஊர் உலாத்தப்போகும் இன்னும் சிலர், பாடசாலை அல்லது பல்கலைக்கழகம் போகும் வேறும் பலர், கடைகளுக்குச் செல்லும் சிலர்… ஏன் அதிகம் எட்டிப்பார்க்கவேண்டும்? எனக்கு முன்னே புத்தகங்களுடன் ஓடும் ரெயினில் மரங்களை பார்த்தபடி பயணிக்கும் ஒரு பெண். ரெயினுக்குள் ஏறியவுடன் எனது விழிகளுடன் அவளது விழிகள் தொட்டுக்கொண்டன. உடனே அவளது முகத்தில் ஒருவகை அவவெருப்பு தெரிந்தது. முகத்தைத் திருப்பி மரங்களைப் பார்த்தாள். எனக்கு புரிந்தது.அவளின் பால் நிறம் போல அல்ல எனது தோல் நிறம்.எனது விழிகள் அவளில் விழிகளைத் தொட்டால்கூட எனது தோல் நிறம் ஒட்டிவிடும் என்று அஞ்சுகிறாள் போல.
அவளுக்கு சொல்ல என மனதுக்குள் ஆயிரம் வார்த்தைகள் உள்ளன். உதடுவிரிக்காமலே அவளோடு பேசுகிறேன். “நான் யார் என்று உனக்குத் தெரியுமா? அல்லது நீ யா என்று எனக்குத் தெரியுமா? எம் இருவருக்கும் இடையில் என்ன உறவு.உன்னைப்போல நானும் இந்த மனிதக் கூட்டத்தில் பயணிக்கும் ஒருத்திதான் எனது தரிப்பிடம் வரும்வரை வாழ்வின் இந்த சில நிமிடங்களை உன்னோடும் இன்னும் என்னைச் சுற்றிப் பயணிக்கும் பலரோடும் பகிரும் ஒருத்தி. அலைந்து திரியும் முகில்களை உனது விழிகள் எவ்வாறு தொடந்தனவோ அவ்வாறே எனது விழிகளும் தொடர்ந்தன. மூசிப்பெய்த மழையில் உனது உடல் எவ்வாறு சிலிர்த்ததோ அவ்வாறே எனது உடலும் சிலிர்த்தது. வருடிச் செல்லும் காற்றில் எவ்வாறு உன் மனம் தொலைந்து போனதோ அவ்வாறே என் மனமும் தொலைந்து போனது. அல்லது இப்படியும் சொல்லலாம்.பறந்து வந்த தூசி எனது உடையில் மட்டுமல்ல உனது உடையிலும் ஒட்டிக்கொள்கிறது. சிலவேளை இன்றிரவு நீ வீடு செல்லும் பாதையில் எனது முகம் உன் கண்ணில் வந்து மறையும். அல்லது நான் தூங்கும் போது உனது விழிகள் என்னில் வந்து மறையும். வாழ்வில் இந்த சில நிமிடங்களில் அருகில் நின்றபடி பயணிக்கிறோம். நீ உணர்வதை நானும் உணர்கிறேன். நான் பார்ப்பதை நீயும் பார்க்கிறாய். உனது மூச்சுக்காற்று எனது நெற்றியில் சுடுகிறது. எனது உடை உன் உடையை உரசுகிறது. முகில்கள் அலைந்து திரியட்டும்.மழையும் மூசிப்பெய்யட்டும். தூசியும் பறக்கட்டும். காற்றும் வருடட்டும். ஆனால் “அவளைப்போல நானும் இந்த மனிதக்கூட்டத்தில் பயணிக்கும். ஒரு பெண்தான்.” என்பதை அவளின் காதில் போய் ஓதட்டும்.