13.01.2002 - 16.01.2002

13.01.2002 ஞாயிறு இரவு 10.30

மனதை இறுக்கிப்பிடித்து ” நில்” என்று சொல்லியும் நின்று கேட்கவில்லை. என்னையும் மீறி பொங்கலின் முதல் நாள் பொழுதுக்கே சென்றுவிட்டது… நாளை விடிந்தால் பொங்கல்.அம்மா சர்க்கரை புக்கைக்கும் வெள்ளைப் புக்கைக்கும் போடுவதற்கு பயறு வறுக்கிறா.வீட்டு விறாந்தையின் முன் வாசற்படியில் குந்திக் கொண்டிருக்கிறேன். அப்பம்மா சாணி அள்ளிப்போட்டு மண் விறாந்தையை மெழுகுறா. சாணி காயமுன் கீழே இறங்க வேண்டாம் என்று வெருட்டி விட்டிட்டு குசினிக்குள் போய்விட்டா அம்மா. அம்மா அப்படி என்னை வெருட்டத் தேவையில்லை. நான் கீழா இறங்கவே மாட்டன். ஒரு முறை அப்படிக் கீழே இறங்கி அரியண்ட சாணி காலில் அப்பிவிட்டது.பிறகு கிணற்றில் கால்களை ஒன்றோடு ஒன்று தேய்த்து கழுவியும் மணம் போகவில்லை. அதனால் படியிலிருந்தே அப்பம்மா மெழுகுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மெழுகி முடிந்த இடங்களில் கைகளால் தடவிய அடயாளங்கள் தெரிகிறது. கோடு போட்டாற்போல அழகாக இருக்கிறது. சில மூலைகள் காய்ந்தும் விட்டன. “சாணி காய்ஞசாப்பிறகு என்ன செய்யவேணும்?” என்று அப்பம்மாவிடம் கேட்டேன். “இண்டைக்கு ஒண்டும் செய்யக்கூடாது. நாளைக்கு விடிய சாணி நல்லாய்க் காய்ஞ்சிடும். பிறகு கோலம் போட்டு கிழக்கு மூலையில் சூரியன் போலக்கீறி அடுப்பு வைச்சு, விறகு அடுக்கி பொங்கல் பானை வைச்சுப் பொங்கவேணும்.” என்று அப்பம்மா சொன்னா.சித்தப்பா வாசலில் கதிரை வைத்து ஏறி கயிறு கட்டுறார். வேறு சில அயல் அண்ணாமார்கள் தோரணமும் மாவிலையும் மாறி மாறி எடுத்துக் கொடுக்க சித்தப்பா அவற்றை ஒவ்வொன்றாகத் தொங்கவிடுகிறார். குருத்துப் பச்சையும் கரும்பச்சையும் மெல்லிய காற்றில் அசைந்தாடுகிறது.மாவிலைகளையும் தோரணங்களையும் எடுத்துக் குடுக்க ஆசைதான். ஆனால் விறாந்தை வழியாகத்தான் வாசலுக்கு போக வேண்டும்.போனால் காலில் சாணி அப்பிவிடும்.வேண்டாம். இந்தப் படிக்கட்டிலேயே குந்தியிருப்போம். வறுத்த பயறின் வாசம் வாசல்வரை மணக்கிறது. அதைக் குத்தி சுளகில் போட்டு பிடைக்கும் சத்தமும் விட்டு விட்டுக் கேக்கிறது. “பிள்ளையள் இனி படுங்கோ. வேளைக்கு எழும்பிக் குளிக்க வேணும்” என்று சொல்லிவிட்டு அப்பம்மா போகிறா. நான் குசினிக்குள் ஓடிப்போகிறேன். தீட்டின சிவத்தப் பச்சைஅரிசி, சர்க்கரை, முந்திரியவத்தல், கஜு, கரும்பு, இஞ்சி இலை, மஞ்சள் இலை, புதுப்பானை, தேங்காய், கற்பூரம், மாவிலை, என்று பொங்கல்பொருள்கள் வித வித வண்ணத்தில் நிறைந்து கிடக்கின்றன. எல்லாவற்றையும் ஒருமுறை தொட்டுத் தொட்டுப் பார்த்தேன், அம்மா என்னைப் படுக்க சொல்லிக் கலைத்துவிட்டா. விறாந்தைக்கு ஓடிப்போய் சாணி காய்ந்து விட்டதா என்று பார்த்தேன். சாணியில் ஈரம் இன்னும் காயவில்லை. காற்றெங்கும் அதன் மணம் கலந்திருந்தது. மூக்கைப் பொத்திக் கொண்டு படுக்கையறைக்கு ஓடிப்போனேன். நாளை விடிந்தால் பொங்கல். ஆனால் இந்தச் சாணியும் அதன் மணமும் தான் என்னை மெல்லக் குழப்புகிறது. “எப்பவாவது ஒரு நாள் சாணிபோட்டு மெழுகாத விறாந்தையில் நான் பொங்க வேணும். படிக்கட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருக்காமல் விறாந்தை முழுதும் நடந்து திரிந்து நானே கதிரை வைச்சி ஏறி தோரணமும் மாவிலையும் கட்டி கிழக்கு மூலையில் பெரிய சூரியன் கீறி அடுப்பு வைச்சு விறகுமூட்டி பொங்கவேணும்.காற்றில் கூட சாணியின் மணம் கலந்திருக்க கூடாது…..

ஆறு வயது சிறுமியாக நான் இப்படி எல்லாம் நினைத்தேனா? அத்தனை வெறுப்பா இந்த சாணிமேல்? அந்த அம்புலியை இப்போது ஒருமுறை பார்க்க வேண்டும். மனதை இறுக்கி பிடித்து “நில்” என்று சொன்னேன். நின்று கேட்டதா? என்னையும் மீறி பொங்கலில் முதல் நாள் பொழுதுக்கே சென்றுவிட்டதே. இனி தூக்கம் எப்படி வரும்?

14.01.2001 திங்கள் காலை 9.10

காலை 5.30 க்கு மணிக்கூடு விடாது கத்தியது. கை நீட்டி நிறுத்தப் போக தானாகவே நின்று கொண்டது. சமையலறையின் வெளிச்சம் என் அறையின் வாசலை மெல்லத் தொட்டது. இன்று பொங்கல் என்று நினைவு வந்தது. அம்மா வேளைக்கே எழும்பித் தோய்ந்து விட்டாபோல. கண்களை கசக்கியபடி சமையலறை போய் நின்றேன். பச்சை சேலையுடன் அம்மா வடைக்கு உழுந்து அரைத்தபடி நின்றா. சர்க்கரைப்புக்கை, வெள்ளைப்புக்கை, இஞ்சிச்சம்பல், கத்தரிக்காய் புளித்த குழம்பு, எல்லாம் மேசையில் தயாராக இருந்தது. “போய் தோய்ந்து விட்டு வா” என்று என்னை விரட்டிவிட்டா. தோய்ந்தேன். அம்மாபோல நானும் சேலை கட்டவேணும் போல ஒரு கணம் தோன்றியது. திராட்சை இரசம் தெரியுமோ உனக்கு? அதன் வண்ணம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு வகை கடும் சிவப்புத்தான். ஆசையாய் அந்த வண்ணத்தில் சேலை உடுத்தேன். அம்மா வடை சுட்டெடுக்க நான் வேறு சின்னச்சின்ன வேலைகள் செய்தேன். அப்பாவும் அண்ணாவும் தம்பியும் தோய்ந்தனர். சுவாமி படத்துக்கு முன் புக்கை வடை வைத்துப் படைத்து கற்பூரம் ஏற்றிக்கும்பிட்டோம். அம்மா சூரியனைத் தேடித்தேடி ஒவ்வொரு திக்காகத் திரிந்தா. வானம் இருண்டு கிடந்தது. 8.30 போல கிழக்கு மெல்ல வெளிக்க அம்மாவின் மனம் மகிழ்வில் நிறைந்தது. 9 மணி வரை எல்லோரும் சேர்ந்து அனைத்தையும் உண்டோம். அதன்பின் அனைவரும். அவரவர் திசையில் புறப்பட்டனர். ஆசையாய் கட்டிய சேலை சில மணித்துளிகள் தான். எனது உடலைச் சுற்றியிருந்தது. இப்போ கதிரையில் குவிந்து கிடக்கிறது.உடையை மாற்றி தேவையான புத்தகங்களை எடுத்து வைத்து பல்கலைக்கழகம் போவதற்காக கதவை இழுத்துச் சாத்துகின்றேன். ஆறு வயதில் சாணி போட்டு மெழுகிய விறாந்தையை வெறுத்தேன். சாணியில்லாத பொங்கல் ஒன்று வராத என்று கனவு கூடக் கண்டேன். ஒன்றை மட்டும் சொல்லவிடு. இன்று மட்டுமல்ல, கடந்த பதினெட்டு வருடமாக பொங்கலுக்கும் சாணிக்கும் எனக்கும் இருந்த நெருக்கம் நீண்ட தூரமாய் போட்டு…. இன்னும் 5 நிமிடத்தில் ரெயின் வந்துவிடும். நடையின் வேகத்தை சற்றுக்கூட்டி ஓடிச்செல்கிறேன். “இதுவாழ்வா?” என்று என்னைக் கேட்டு விடாதே! என் கால்கள் உறைந்துவிடும். நான் நின்றுவிடுவேன்…

16.10.2002 புதன் இரவு 12.20

“The Lord of the Rings: The Fellowship of the Ring” என்று ஒரு திரைப்படம். பல்கலைக்கழகம் முடிந்து அண்ணாவுடனும் தம்பியுடனும் போய்ப் பார்த்து சற்று முன் தான் வீடு வந்தோம். இப்படித்தான். அடிக்கடி நிகழ்கிறது. சில திரைப்படங்கள் பார்த்துவிட்டு மீள முடியாது நிற்கின்றேன். இரண்டு நாட்கள் அல்லது அதற்கும் மேல் அந்தக் கதாப்பாத்திரங்களுடன் வாழ்கின்றேன். பேசுகிறேன். செல்லமாகத் திட்டுகிறேன்…

ந்தத் திரைப்படம் பற்றி சில வார்த்தைகள் சொல்லத்தான் வேண்டும். J.R.R. Tolkien எனும் ஆங்கில எழுத்தாளனின் கற்பனைக்கதை (Fantasy) திரைப்படமாக உருப்பெற்றிருக்கின்றது. சோறோன் (sauron)என்பவன் மிகக் கொடியவன். தனது இரத்தத்தாலும் அழிக்கும் தந்திர சக்தியாலும் ஒரு தங்க மோதிரத்தை உருவாக்குகின்றான். ஒரு நாள் அவனின் கையில் இருந்து அது தொலைந்துபோகிறது.ப்ரோடோ (Frodo) என்ற ஒரு குள்ளனிடம் வந்து சேர்கிறது அந்த மோதிரம். காண்டால்ப் (Gandalf) எனும் மந்திரவாதி அதன் கொடிய சக்தி பற்றி அறிந்து மிகவும் அஞ்சுகிறான்.உலகை அழித்து விடும் சக்தி அந்த மோதிரத்திற்கு உள்ளது. மக்களை அழிப்பில் இருந்து காக்க ஒரு வழி மட்டும் இருந்தது. அது யாராவது ஒருவன் அந்த மோதிரத்தினைக் கொண்டு சென்று சோறோனின் குகைக்குள் உள்ள தீயினுள் போடவேண்டும். அந்தக் கணத்திலிருந்து. நல்லது வாழ தீயது அழியும். எவ்வாறு பல இடர்களையும் மீறி அந்த மோதிரத்தினை ப்ரோடோ என்பவனும் இன்னும் பலரும் கொண்டு செல்கிறார்கள் என்பது கதை. பிரமிக்கத்தக்க படைப்பாக அது மிளிர்ந்தது. தமிழ்த் திரைப்படங்கள் போல் அல்லாது Computer Graphics மற்றும் Animation கதையோடு இயல்பாக ஒன்றிப்போனது. கதைக்கு ஏற்றாற்போல் கச்சிதமாக பொருத்தப்பட்டது.ஒரு கற்பனைக் கதையை திரைப்படமாக்குவதில் வரக்கூடிய இடர்கள். சிரமங்கள் ஆயிரம் உண்டு.ஒரு கதையை வாசித்து முடித்ததும் மனம் நிறையும். அதே உணர்வு அந்தத் திரைப்படம் பார்த்ததும் அல்லது வார்த்தைகள் காட்சியாக விரியும் போதும் ஏற்படவேண்டும். அல்லது அதற்குமேல் ஒரு படி உயர்ந்தாலும் மகிழ்வுதான். இப்போ என் மனம் மகிழ்வில் நனைந்துள்ளது. அது மட்டுமல்ல! ப்ரோடோ என்பவனின் அழகான விழிகளில் அலைந்து திரிகிறது மனம். அதுபோன்ற விழிகளை நான் இத்தனை நாளும் கண்டதில்லை, திரையில் பல முறை நேராக நிமிர்ந்து பார்த்தான்.என்னவோ செய்தன அந்த விழிகள்.

இப்போ நினைத்தால் கூட நெஞ்சில் சிறகுகள் விரிகின்றன. அந்த விழிகளுக்குள் இன்றிரவு தூங்கவேண்டும் போல உள்ளது.

Leave a Reply