05.01.2002 - 09.01.2002
05.01.2002 சனி காலை 8.30
சனிக்கிழமையென்றால் சின்னச் சின்ன மகிழ்வுகள் நிறைய உள்ளன. விழித்ததும் மணிக்கூடு “கீக்கீ” என்று கத்தும். ஆனால் இன்றுதான் பல்கலைக்கழகம் போகத் தேவையில்லையே என்ற மகிழ்வில் திரும்பிப்படுத்து ஒரு குட்டித்தூக்கம் போடுவேன். பத்துத் தரம் கத்திவிட்டு ஓய்ந்துபோகும் மணிக்கூடு. பயங்கரமான குட்டிக்கனவுகள் கூட அந்தக் காலையில்தான் வரும். கதைவைப் பூட்டும்போது கள்ளன் உள்ளே வந்து கழுத்தை நெரிப்பது போல திடுக்கிட்டு கண்விழிப்பேன். பல்துலக்கியவுடன் அம்மா தேநீர் போடுவா. அளவான பாலில் அதிகம் கசக்காத தேயிலைச் சாயத்தில் சீனீ போட்டு கலக்கிய தேநீர் ஆவி பறக்கும்.உதடு குவித்து ஊதி ஊதிக்குடிக்க இருளான காலை கூட இனிக்கும். இனித்த காலையில் இன்னுமொன்றும் சேர்ந்து கொள்ளும். அது அம்மாவும் அண்ணாவும் நானும் சேர்ந்து காரில் கடைக்குப் போவது. பனிபெய்தால் பனியைத் தட்டி மழை பெய்தால் நீரைத் துடைத்து காரைச் சூடாக்கி காத்திருப்பார் அண்ணா. காருக்குள் ஏறும் போது “சீர்காழி கோவிந்தராஜனின்” பக்திப்பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும். வெளியே காரிருள் உள்ளே வள்ளிக்கணவன் பெயரைத் தினமும் சொல்லடாதம்பி ” அல்லது தாமரை மலர்கள் ஆறு தவழ்ந்தன குழந்தைகள் ஆறு” என்று குழைந்து பாடும் அந்தக் குரல். கேட்கும் போது குழைத்த சந்தனமும் கற்பூரமும் மணப்பது போலிருக்கும். வீட்டுக் கேற்றைத் தாண்டி செல்லும் கார். கடையருகே நிறுத்திவிட்டு உள்ளே சென்றவுடன் விரும்பியதை வண்டிலுக்குள் தூக்கித்தூக்கி போடுவோம்.ஒவ்வொரு முறையும் அம்மா வாங்குவதற்கென அலுத்துப் போன சில பொருள்கள் உள்ளன. பால், பாண்,மா, சீனீ, உப்பு, மரக்கறி, பழங்கள்… ஆனால் அண்ணாவினதும் எனதும் பட்டியல் வேறு மாதிரி இருக்கும். விளம்பரத்தில் புதிதாக அறிமுகப்படுத்திய சொக்லேட், ஜாம், கோப்பி, கேக், ஐஸ்கிரீம்…. சில வேளைகளில் ஆசையாய் தேர்ந்தெடுத்து வண்டிலுக்குள் போடும்போது அம்மா மெல்ல நச்சரிப்பா,”சாப்பிடுவதென்றால் மட்டும் எடுங்கோ, அல்லது கிடந்து இழுபடும்” அண்ணாவுக்குக் கோபம் வந்துவிடும்.எடுத்ததை அப்படியே இருந்த எடுத்தில் வைத்துவிடுவார். பிறகு அம்மாவும் நானும், அண்ணாவை சமாதானப்படுத்தி விரும்பியதை வாங்க வைத்து வீடு வர காலை பத்து பத்தரையாகிவிடும். தம்பியும் எழும்பிவிடுவான். சண்டைபிடித்தபடி போட்டி போட்டுக்கொண்டு வாங்கியதை நாவில் போட்டு ருசிக்க காலை இன்னும் இனிக்கும்.இன்று அப்படி அல்ல. அண்ணாவும் தம்பியும் இரண்டு நாட்களுக்கு முன்னே தமது நண்பர்களின் வீட்டுக்குப் போய்விட்டார்கள். ஊர் சுற்றி உண்டு மகிழ்வார்கள். தனித்தபடி யாருடன் நான் சண்டைபோட? கார் ஏறி கடைக்குப் போகவில்லை. சந்தனமும் கற்பூரமும் மணக்கவில்லை. விரும்பியதை வாங்கவுமில்லை. சண்டை போட்டு மகிழ முடியா ஒரு சனிக்கிழமை இது. விடிந்தும் விடியாததுமாக இருண்டு கிடக்கிறது காலை. தேநீர் குடித்தும் இனிக்கவில்லை. வாசித்து குறிப்பெடுக்க வேண்டிய கட்டுரைகளுடன் சலித்தபடி மேசையருகே அமர்ந்தேன்…
07.01.2002 திங்கள் இரவு 9.00
ரெயின் இடையில் நின்று நின்று சென்று கொண்டிருக்கிறது. நன்றாக களைத்துவிட்டேன், “புலம் பெயர்வு, வேலை, அடையாளம் (Migration,Work &Identity) எனும் கருத்தரங்கிற்காக செவ்வி ஒன்று எடுக்க வேண்டியிருந்தது. ஆறு ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நகரங்களில் இது போன்ற கருத்தரங்கு நடைபெறுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரமாயிரம் புலம் பெயர்ந்தோரின் வாழ்வினை செவ்வியினூடாக (Biographical Interview) அறிந்து ஒரு கண்காட்சியில் விவரிக்க வேண்டுமென்பதே அதன் இலக்கு அவ்வாறு விவரிக்கும் போது வெவ்வேறு நாட்டில் வாழும் புலம் பெயந்த மக்களின் ஒன்றித்த உணர்வுகள், வேற்பட்ட கருத்துக்கள்,தனிப்பட்ட அனுபவங்கள் ஒப்பிடப்படும். உதாரணத்திற்க்கு சுவீடன் (Sweden) நகரில் வாழும் ஒரு துருக்கி இனப்பெண்ணின் அனுபவமும் இங்கிலாந்தில் ( England) வாழும் அதே இனப்பெண்ணின் அனுபவமும் ஒப்பிடப்படும். இனம் ஒன்று.ஆனால் வாழும் நிலம்வேறு. எனது நகரிலும் வெவ்வேறு இன மக்களின் புலம் பெயர்ந்த அனுபவங்களை அறியும் முகமாக எனது மண்ணைச் சேர்ந்த ஒரு தமிழ் ஆசிரியையை நானும் எனது தோழி கத்ரீனும் (Katrin) சந்திக்கச் சென்றோம். கத்ரீன் இந்த நாட்டைச் சேர்ந்தவள். ஒரு சொல் கூட தமிழ் தெரியாத நிலையில் என்னோடு இந்த வேலையில் விரும்பி இணைந்தவள். தமிழ் சமூகத்தில் அவளுக்கு மிகுந்த ஈடுபாடு. என்னை கதைக்கச் சொல்லிவிட்டு கண்வெட்டாது கேட்பாள். நான் சொன்னேன்: நான் செவ்வி காணும் போது உனக்கு ஒன்றும் புரியாதே! என்ன செய்வாய்?” தமிழ் எனக்கு புரியாதுதான். ஆனால் நீங்கள் பேசுவதைப் பார்ர்க்க வேண்டும். நானும் வருகிறேன்.என்று கெஞ்சினாள். “சரி வா” என்று கூட்டிச் சென்றேன். மாலை ஐந்து மணிபோல் ஒரு பூங்கொத்துடன் வீட்டுக் கதவைத் தட்டினோம். வடி கட்டிய பால் கோப்பியுடன் எமை வரவேற்று இருக்கச் சொன்னார். வீட்டின் அனைத்து பகுதியும் திருத்த வேலைகளுக்கு உட்பட்டதால் ஒரு மூலையில் நாற்காலி போட்டு அமர்ந்தோம். புலம் பெயர்விற்க்கு முன்னான காலப்பகுதியுடன் கேள்விகள் ஆரம்பித்து புலம்பெயர் காரணங்கள், கால்பதித்த நாட்டில்முதல் நாள்,அதன்மொழி, வாழ்வுமுறை,சூழல், வெறுத்து ஒதுக்கும் விரும்பி ஏற்கும் விடயங்கள், குடும்பம், நண்பர்கள் இறுதியாக மீண்டும் தாயகம் நோக்கிய பயணத்துடன் கேள்விகள் நிறைவுபெற்றன. சுமார் 2 1/2 மணிநேரம் கலந்துரையாடினோம். கத்ரீன் அனைத்தையும் பதிவு செய்தபடி இடையிடை தூங்கியும் விழுந்தாள். சிலவற்றை மட்டும் தான் நான் கேட்டேன். ஆனால் அவரோ ஒரு விடயத்தினுள் ஆழ்ந்து சென்று பலதை தொட்டுச்சொன்னார். அடிக்கடி “தமிழ் ஆசிரியை” என்பதை தேர்ந்தெடுத்த சொற்களினூடாக உணரவைத்தார். புலம் பெயர்வுக்கு முன்னான காலப்பகுதியை மிக அழகுறச் சொன்னார். உயிர்ப்புள்ள வார்த்தைகள் அவை. நேர்த்தியாக கோர்க்கப்பட்டு வெளிப்பட்டது. புலம் பெயர்ந்த வாழ்வைச் சொல்லும் போது கண்கள் பனித்தன. வார்த்தைகளைத் தேடி தடுமாறினார். நான் மனதால் மிகுந்த கஸ்ரப்பட்டேன். நெஞ்சு கனத்தது. ஒருமுறை அவர் சொன்னார்” வாழ்வு முறிந்து முறிந்து விழுகிறது. கைகளில் ஏந்தி நிமிரவைக்கிறேன். ஒரு கணம் நிமிர்ந்து நிலையாய் நிற்கின்றது. மறுகணம் நடுவில் பிளவு பட்டு முறிந்து விழுகிறது…” என்று என்னமாய் சொன்னார்! புலம் பெயந்த வாழ்வின் வலி இதுதான். வாழ்வு முறிந்து முறிந்து விழுகிறது.
09.01.2002 புதன் மாலை 4.20
பகலும் இரவும் இருளில் கரைய நாட்களும் தலை நிறைந்த வேலைகளில் தேய்ந்து போகின்றன. திங்கள் விடிவதும் ஞாயிறு இருள்வதும் மட்டும் தெரிகிறது. இடையிலான நாட்கள் புள்ளியாய் சிறுத்துப்போகின்றன. பல்கலைக்கழகம் போவதும், படிப்பதும், வீடுவந்து மீண்டும் படித்துப் படுப்பதும் வாழ்வாகி விடுகிறது. புத்தகங்களுடனும் கட்டுரைகளுடனும் காலம் காய்ந்து போகிறது. விரிவுரைகளும் கருத்தரங்குகளும் ஆழமான பார்வையை என்னுள் விதைத்து ஆரோக்கியமான தேடலுக்கு என்னை இட்டுச் செல்கின்றன. இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் அறிவு மட்டும் என்னை இயந்திரமாக்கிவிடும். நான்கு சுவருக்குள் சிறையிட்டுவிடும். வாழ்வு அவ்வாறு ஆகிவிடக்கூடாது. அத்துடன் மட்டும் நின்று விடக்கூடாது. பறந்து பறந்து வாழ விரும்புகிறேன். வாழ்வின் ஒவ்வொரு கணங்களையும் உணர்வால் நெய்து உயிர்ப்புடன் இயங்க விரும்புகின்றேன்…மரத்தைப் பார்! மொட்டு ஒன்று விரிந்து மலரும். சிவந்து உதிரும்.புதிய மொட்டு முளைவிடும். கடலைப்பார்! மழை பெய்ய கடல் கலங்கும். அலை எழும். நுரைததும்ப கரை மணலை கிட்ட வந்து தொட்டுச் செல்லும்.கடலுடன் கலக்கும்.மீண்டும் அலையாய் எழும்.வானைப்பார்! காலை வெளிக்கும். கண் கூசும். மாலை சிவக்க கண் மயங்கும். நிலா வரும். முகிலுக்குள் மறையும். காலை மீண்டும் வெளிக்கும். மரத்தைப்போல, கடலைப்போல, வானைப்போல, வாழ விரும்புகின்றேன். மகிழ்வெனில் மனதால் சிரிக்கவேண்டும். துயரெனில் வாய்விட்டு அழவேண்டும். கோவமெனில் திட்டித்தீர்க்க வேண்டும். வேதனையெனில் சொல்லிப் பகிரவேண்டும். சிரித்தபோதும், அழுதபொதும், திட்டியபோதும். சொல்லிப்பகிந்த போதும், வாழவேண்டும். யன்னல் திறந்தபடி கிடக்கிறது. வெளியே பார்க்கிறேன்…
சிட்டடுக்குருவி ஒன்று என் வாழ்வில் பறந்து வந்து சிறகடித்துச் செல்லாதா?
நீரில் குளித்த காகம் ஒன்று என் மனதோரம் வந்தமர்ந்து சிலிர்த்துவிட்டுச் செல்லாதா?
மொட்டொன்று விரியாதா?
அலையொன்று எழாதா?
நிலவொன்று வராதா?