30.12.2001 - 01.01.2002
30.12.2001 ஞாயிறு மாலை 5.40
அடிக்கடி நான் இப்படி உணர்ந்ததுண்டு.எனக்குள் ஒரு சிறுமி மிக உயிர்ப்புடன் வாழ்வது போல திருதிருவென்ற விழியுடன் இரட்டைப் பின்னலுடன், சின்னச் சட்டை போட்டு, விறுக்குவிறுக்கென்று அவள் உலவித்திரிவது போல. பனிமபெய்த போதும் பால் நிலா வந்தபோதும் துள்ளிக் குதித்து அவள் வெளியே வந்து விடுகிறாள். அம்புலி சிறுமியாகி விடுகிறாள். கன்னமிரண்டையும் கைகளால் அணைத்தபடி ஆசையாய் கதை பேசுகிறாள்.பாட்டுப்பாடி ஆட்டம் போடுகிறாள். மகிழ்கிறாள். பால் குடித்து அம்மாவின் மடியில் தூங்குகிறாள்…
“The Road to EI Dorado” என்ற திரைப்படம். The Lion King, Aladdin, Pinocchio பாத்திருப்பாய். அது போல சிறுவர்களுக்கான திரைப்படம் இது (Animated Motion Picture). 16ம் நூற்றாண்டு, ஸ்பானிய நாடு , இரு நண்பர்கள்.ரூலியோ (Tulio) மிகெல் (Miguel) என்ற இருவரின் பயணக் கவிதை அது. El Dorado எனும் தங்கம் நிரைந்த நகரிற்கு வாழ்வை வளம்படுத்தச் சென்று போடாடி மீண்டு வருகிறார்கள். காய்ந்துபோன கதையல்ல. நீரில் சின்னச் சின்னப் பூக்கள் மலரும். அப்படித்தான். ஈரமாய் வண்ண வண்ணமாய் விரிந்திரிந்தது கதை. கண்ணீர் இல்லை அந்த உலகில். தட்டிவிடும் தூசியைப் போல சின்னச் சின்ன சோகம்தான் இருந்தது. கதை முழுதும் பாட்டும் ஆட்டமும் சிரிப்பொலியும் எல்லையற்ற மகிழ்வும் நிறைந்திருந்தது.ரூலியோ வாய் வலிக்கப் பாடினாள். மிகெல் கால் வலிக்க ஆடினான். இருவரின் நண்பன் ஒரு வெள்ளைக் குதிரை.இனிக்க இனிக்க பேசியது. இது மட்டும் போதும், பனி பெய்யத் தேவையில்லை, பால் நிலா கூட உலா வரத்தேவையில்லை. எனக்குள் விறுக்விறுக்கென்று உலவித் திரிந்த சிறுமி துள்ளிக் குதித்து வெளியே வந்தாள். கால்களை கதிரைமேல் தூக்கிப் போட்டாள். கையில் கிடைத்ததை வாயில் போட்டாள். கன்னமிரண்டையும் கைகளால் அணைத்தபடி ஆசையாய் கதை பேசினாள். பாட்டுப்பாடி ஆட்டம் போட்டாள். El Dorado எனும் தங்க நகரில் வெள்ளைக் குதிரைமேல் ரூலியோ மிலெல்லுடன் இவளும் உலா வந்தாள். அம்புலி சிறுமியாகி விட்டாள்.
31.12.2001 திங்கள் மாலை 5.10
இன்றைய நாளுடன் இந்த ஆண்டு முடிந்துவிடும். நாளை காலை எழுதும் போது 2002 என்று எழுத வேண்டும் அவ்வளவுதான். வேறெந்த மாற்றமும் இல்லை. நாட்கள் என்றும் போல தொடர்ந்து நகரத்தான் போகின்றன. மகிழ்வும் துயரும் மாறி மாறி வரத்தான் போகிறது. இன்று நான் என்ன செய்யப் போகிறேன் தெரியுமா? உன்னைப்போல ,அவனைப்போல, பக்கத்து வீட்டு மார்க்குஸ் (Markus), எதிர் வீட்டு அனா (Anna) போல நானும் வெடி கொளுத்தப்போகிறேன். அப்பா வெடி வாங்கிவிட்டார். ஆனால் எனக்கு திருப்தி இல்லை. அப்பா வாங்கியது எல்லாம் தரையில் இருந்து வானில் சென்று வண்ணா வண்ணமாய் விரியும் மத்தாப்பு, சீறுவானம் மட்டுமே. ஆனால் வெடி என்றால் இரண்டு கைகளாலும் காதைப் பொத்த வேண்டும். அத்தகைய சத்தம் இருக்க வேண்டும். “வாங்கோ வெடி வங்கிக் கொண்டு வருவம்” என்று அப்பாவையும் தம்பியையும் கூட்டிக் கொண்டு போனேன். வீதியெல்லாம் பனியிறுகி வழவழப்பாக இருந்தது. ஒரு கடை மட்டும் திறந்திருந்தது. “சீன வெடி இருக்கா” என்று கேட்டேன். ‘B’ ‘D’ என்ற எழுத்துப் பதித்த இரண்டு வெடிகளை மேசையில் வைத்தான் ஒருவன்.’B’ ‘D’ என்ன வித்தியாசம்? என்று கேட்டேன். அவன் ஒரு முறை என்னை மேலிருந்து கீழ்வரை பார்த்தான். அப்பாவையும், தம்பியையும் பார்த்துவிட்டு மெல்லச் சிரித்தான். (இருவரும் மௌனமாக நிற்க நான் மட்டும் வெடுக்கென்று கேட்டதில் அவன் சிரித்திருக்க வேண்டும்) ‘D’ வெடி அளவில் பெரியது சத்தமும் இருக்கும். ‘B’ சற்று சிறியது. “சத்தமும் சற்று குறைவாக இருக்கும் ” என்றான். நான் அப்பாவைப் பார்த்தேன். அப்பா இரண்டு பெட்டிகளையும் வாங்கினார். வீடு வந்தவுடன் நானும் தம்பியும் வெடிகளை மூன்று சுற்றுகளுக்கு ஏற்றது போல பிரித்து வைத்தோம். 7.30 க்கு முதல் சுற்று.10.30 க்கு இரண்டாம் சுற்று. சாமம் 12 மணிக்கு மூன்றாம் சுற்று.
இரவி 7.30
வீட்டில் வாசல் படியில் அமர்ந்திருந்தேன்.உண்மையைச் சொல்கிறேன்.அப்பா வாங்கிய வண்ண வண்ணமாய் மின்னும் மத்தாப்புக்கள் மிக அழகாகத்தான் இருக்கின்றன்.கறுத்த வானில் ஒளி பரவி வருகின்றன. நீள் கோடாய் வட்ட வட்டமாய் சிறு சிறு நட்சத்திரமாய் மின்னுகின்றன. இத்தனை வண்ணமா என்று வியந்து நின்றேன். சீன வெடி ஒன்றைக் கொளுத்தி தூர எறிந்தேன். காது ஒரு முறை அதிர்ந்தது. அம்மா தூர சென்றா.அம்மாவுக்கு வெடி என்றால் மிகுந்த பயம்.பூந்திரி மட்டும் சுற்றி சுற்றி கொளுத்துவா. சிரித்துவிட்டு கை நிறைய வெடிகளை அள்ளி பொக்கற்றுக்குள் போட்டேன். இப்போ காது அதிரவில்லை. “சத்தம் காணாது” என்று சொன்னேன். அம்மா என்னைத் திட்டிவிட்டு வீட்டுக்குள் சென்றா. ஆசை தீர கொளுத்தினேன். அதுக்குள் ஒரு சுற்று முடிந்து விட்டது.
இரவு 9.10
கையில் கிடைத்ததையெல்லாம் வாயில் போட்டபடி தொலைக்காட்சி பார்க்கிறோம். ஒன்றாக அமர்ந்து விரும்பிய பாடல்களைக் கேட்டபடி பலதை மீட்டிப்பாக்கிறோம் வருடத்தின் இந்த இறுதி நிமிடங்களில் இத்தனை சுகம் உள்ளதா? தம்பி சொன்னான்: “அம்மா எங்கட ஊரில் பொங்கலுக்கு இப்படித்தான் இருக்கும் என்ன ” அம்மாவும் , அப்பாவும் மௌனமாக போனார்கள். எனக்கு நன்றாக புரிந்தது. மகிழ்வான நாட்களை அவர்கள் தொலைத்து நீண்ட காலம் ஆகிவிட்டது…
நள்ளிரவு 12.40
வெடிச்சத்தத்தின் உச்சத்தில். புதுவருடம் மலர்ந்துவிட்டது. யன்னாலால் வெளியே பார்க்கிறேன்.வீதியில் நண்பர்கள் கூடி நின்று வெடி கொளுத்துகிறார்கள்.புதுவருட வாழ்த்துக்கள் கூறி ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக் கொள்கிறார்கள். என்னைச் சுற்றிய உலகு மகிழ்வில் மூழ்கியிருக்கிறது வேறென்ன வேண்டும்?
01.01.2002
செவ்வாய் இரவு 11.40 பால் மிகவும் சுடுகிறது. ஒரு மிடறு அருந்தி நாவில் சுட்டுவிட்ட்து. கோபம் வந்தது. சுட்ட பால் மேல் அல்ல! கோவிப்பதற்கு வேறொன்றும் உண்டு. 12 ஐரோப்பிய நாடுகளில் இன்றிலிருந்து யூரோ நாணயம் கையில் புரள்கிறது. ஏன் அதிக தூரம் போகவேண்டும்? எனது மேசையில் கூட 10 யூரோ தாள் புத்தகத்திற்கு அடியில் இருந்து எட்டிப்பார்க்கிறது. கோபம் என்று சொன்னேனே? அது இந்த யூரோ மேல்தான். ஆத்திரமாக வருகிறது. நள்ளிரவே பலர் தமது வங்கிகளுக்குச் சென்று யூரோ நாணயத்தை எடுத்தும் தொட்டும் புரட்டியும் பார்த்து மகிழ்ந்தனர். பத்திரிகைகளில் கூட தடித்த எழுத்துக்களில் புதிய நாணயம் மனம் மலர்ந்து பலரால் வரவேற்கப்படுகிறது. ஐரோப்பிய சரித்திரத்தின் மைல்கல் யூரோ நாணயம். அதற்கும் அப்பால் இப்புது நாணயம் ஐரோப்பாவின் ஒன்றிணைந்த நாடுகளில் பொரும் வெற்றியாக அடையாளமாக கருதப்படுகிறது.பொருளாதாரம் உச்சங்களை தொடவுள்ளதாம். தடைகளின்றி மக்கள் தமது வாழ்க்கைத்தரத்தினை உயர்த்த புதிய நாணயம் வழி திறந்து வைக்கிறதாம். கேட்பதற்கு காதிற்கு இனிமையாகத்தான் இருக்கிறது. பார்ப்பதற்கும் யூரோ தாள்கள் வண்ணமாய் அழகாய்த்தான் இருக்கின்றன. சில்லறை நாணயம் கூட தங்கமும் வெள்ளியுமாக மின்னுகிறதுதான். ஆனால் உண்மை அதுவல்ல. ஐரோப்பா எங்கு உள்ளது என்று உலக வரைபடத்தை சற்று விரித்துப்பார். வலது பக்கம் சோவித் யூனியன். இடது பக்கம் அமெரிக்கா. நடுவில் ஐரோப்பா. இந்த நிலையிலிருந்து புதிய நாணயத்தின் வரவைப் பார். அப்போது உனக்குப் புரியும். ஒருபக்கம் பெரும் நிலத்தில் பரந்து விரிந்து கிடக்கும் சோவியத் யூனியன்க்கு எதிராக உருவானது ஐரோப்பிய ஒன்றியம். இன்னொரு பக்கம் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க டொலருக்கு ( Dollar ) எதிராக புதுப்பலத்துடன் புகுத்தப்பட்டுள்ளது யூரோ நாணயம். பெரும் நிலத்தாலும் ஒன்றித்த் நாணயத்தின் புதுப்பலத்தாலும் ஐரோப்பா தனது அரசியல் அதிகாரத்தை ஆதிக்கத்தை நிலை நிறுத்த இப் புது நாணயம் முதற்படி. அதுவே உண்மை. பொருளாதாரம் வளர வேண்டும். மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும் என்று கூறும் வார்த்தைகளனைத்தும் பொய்யென்று நான் சொல்லித்தான் நீ அறியவேண்டுமோ?