13.01.2002 - 16.01.2002
Sunday, November 26th, 200613.01.2002 ஞாயிறு இரவு 10.30
மனதை இறுக்கிப்பிடித்து ” நில்” என்று சொல்லியும் நின்று கேட்கவில்லை. என்னையும் மீறி பொங்கலின் முதல் நாள் பொழுதுக்கே சென்றுவிட்டது… நாளை விடிந்தால் பொங்கல்.அம்மா சர்க்கரை புக்கைக்கும் வெள்ளைப் புக்கைக்கும் போடுவதற்கு பயறு வறுக்கிறா.வீட்டு விறாந்தையின் முன் வாசற்படியில் குந்திக் கொண்டிருக்கிறேன். அப்பம்மா சாணி அள்ளிப்போட்டு மண் விறாந்தையை மெழுகுறா. சாணி காயமுன் கீழே இறங்க வேண்டாம் என்று வெருட்டி விட்டிட்டு குசினிக்குள் போய்விட்டா அம்மா. அம்மா அப்படி என்னை வெருட்டத் தேவையில்லை. நான் கீழா இறங்கவே மாட்டன். ஒரு முறை அப்படிக் கீழே இறங்கி அரியண்ட சாணி காலில் அப்பிவிட்டது.பிறகு கிணற்றில் கால்களை ஒன்றோடு ஒன்று தேய்த்து கழுவியும் மணம் போகவில்லை. அதனால் படியிலிருந்தே அப்பம்மா மெழுகுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மெழுகி முடிந்த இடங்களில் கைகளால் தடவிய அடயாளங்கள் தெரிகிறது. கோடு போட்டாற்போல அழகாக இருக்கிறது. சில மூலைகள் காய்ந்தும் விட்டன. “சாணி காய்ஞசாப்பிறகு என்ன செய்யவேணும்?” என்று அப்பம்மாவிடம் கேட்டேன். “இண்டைக்கு ஒண்டும் செய்யக்கூடாது. நாளைக்கு விடிய சாணி நல்லாய்க் காய்ஞ்சிடும். பிறகு கோலம் போட்டு கிழக்கு மூலையில் சூரியன் போலக்கீறி அடுப்பு வைச்சு, விறகு அடுக்கி பொங்கல் பானை வைச்சுப் பொங்கவேணும்.” என்று அப்பம்மா சொன்னா. (more…)