Archive for October, 2006

05.01.2002 - 09.01.2002

Wednesday, October 25th, 2006

05.01.2002 சனி காலை 8.30

சனிக்கிழமையென்றால் சின்னச் சின்ன மகிழ்வுகள் நிறைய உள்ளன. விழித்ததும் மணிக்கூடு “கீக்கீ” என்று கத்தும். ஆனால் இன்றுதான் பல்கலைக்கழகம் போகத் தேவையில்லையே என்ற மகிழ்வில் திரும்பிப்படுத்து ஒரு குட்டித்தூக்கம் போடுவேன். பத்துத் தரம் கத்திவிட்டு ஓய்ந்துபோகும் மணிக்கூடு. பயங்கரமான குட்டிக்கனவுகள் கூட அந்தக் காலையில்தான் வரும். கதைவைப் பூட்டும்போது கள்ளன் உள்ளே வந்து கழுத்தை நெரிப்பது போல திடுக்கிட்டு கண்விழிப்பேன். பல்துலக்கியவுடன் அம்மா தேநீர் போடுவா. அளவான பாலில் அதிகம் கசக்காத தேயிலைச் சாயத்தில் சீனீ போட்டு கலக்கிய தேநீர் ஆவி பறக்கும்.உதடு குவித்து ஊதி ஊதிக்குடிக்க இருளான காலை கூட இனிக்கும். இனித்த காலையில் இன்னுமொன்றும் சேர்ந்து கொள்ளும். அது அம்மாவும் அண்ணாவும் நானும் சேர்ந்து காரில் கடைக்குப் போவது. பனிபெய்தால் பனியைத் தட்டி மழை பெய்தால் நீரைத் துடைத்து காரைச் சூடாக்கி காத்திருப்பார் அண்ணா. காருக்குள் ஏறும் போது “சீர்காழி கோவிந்தராஜனின்” பக்திப்பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும். வெளியே காரிருள் உள்ளே வள்ளிக்கணவன் பெயரைத் தினமும் சொல்லடாதம்பி ” அல்லது தாமரை மலர்கள் ஆறு தவழ்ந்தன குழந்தைகள் ஆறு” என்று குழைந்து பாடும் அந்தக் குரல். கேட்கும் போது குழைத்த சந்தனமும் கற்பூரமும் மணப்பது போலிருக்கும். வீட்டுக் கேற்றைத் தாண்டி செல்லும் கார். கடையருகே நிறுத்திவிட்டு உள்ளே சென்றவுடன் விரும்பியதை வண்டிலுக்குள் தூக்கித்தூக்கி போடுவோம். (more…)

30.12.2001 - 01.01.2002

Monday, October 9th, 2006

30.12.2001 ஞாயிறு மாலை 5.40

அடிக்கடி நான் இப்படி உணர்ந்ததுண்டு.எனக்குள் ஒரு சிறுமி மிக உயிர்ப்புடன் வாழ்வது போல திருதிருவென்ற விழியுடன் இரட்டைப் பின்னலுடன், சின்னச் சட்டை போட்டு, விறுக்குவிறுக்கென்று அவள் உலவித்திரிவது போல. பனிமபெய்த போதும் பால் நிலா வந்தபோதும் துள்ளிக் குதித்து அவள் வெளியே வந்து விடுகிறாள். அம்புலி சிறுமியாகி விடுகிறாள். கன்னமிரண்டையும் கைகளால் அணைத்தபடி ஆசையாய் கதை பேசுகிறாள்.பாட்டுப்பாடி ஆட்டம் போடுகிறாள். மகிழ்கிறாள். பால் குடித்து அம்மாவின் மடியில் தூங்குகிறாள்… (more…)