07.02.2002 - 13.02.2002

07.02.2002 வியாழன் இரவு 11.50

அது ஆப்கானின் காபுல் (Kabul) நகரம். கட்டிடங்களின் இடிந்த குவியல். வீசும் காற்றில் பறக்கும் தூசி. பிளந்த நிலத்தில் வெடித்த நீண்ட நாள் வறட்சி. மழையில்லை. தசைக்குள் ஊடுருவி எலும்புக்குள் ஊசியாய் குத்தும் குளிர் உண்டு. மெல்லிய பருத்தி உடை அணிந்த இந்த சிறுவர் சிறுமிகள் அதனை நன்றாக உணர்ந்திருக்கவேண்டும். அல்லாவிடில் கைகளை ஒன்றோடு ஒன்று தேய்த்தபடி தேகம் நடுங்க திகைத்து நின்றிருக்கமாட்டார்கள். இன்று காலை யூனிசெப் (UNICEF) நிறுவனத்தின் ஆப்கான் நிருபர்களுடன் காபுல் நகர பாடசாலைக்கு சென்றிருந்தபோது நான் கண்ட காட்சி அவ்வாறு இருந்தது. அதுமட்டுமல்ல. (more…)

பின்னூட்டம் இடுக April 9th, 2007

17.01.2002 - 23.01.2002

17.01.2002 வியாழன் காலை 8.45

இத்தனை அழகான விடியலை நான் பார்த்து நீண்ட காலம் ஆயிற்று. மனம் மகிழ்ந்தது. தலையில் தண்ணீர் ஊற்றினேன். வெண்முகில்களை ஊதித்துடைத்தாற்போல வானின் நீலம். நிமிர்ந்து பார்த்தேன். கண்கள் கூச கைகளால் கண்களைப் பொத்தினேன். கடல் கடந்து பறந்து சென்ற சிட்டுக்குருவிகளெல்லாம் மீண்டும் சிறகடித்து மரங்களில் அமர்ந்திருக்கின்றன. “உய்க் உய்க்” என்று ஒலியெழுப்பியபடி மரங்களில் தாவித்திரிகின்றன. யன்னல்களை அகலத்திறந்துவிட்டேன். வீசிய காற்று முகத்தில் அறையவில்லை. இதமாக வருடிச் சென்றது. எனது யன்னலோர மரத்தில் கூட ஆயிரம் மொட்டுகள் முளைவிட்டிருக்கின்றன. எனது நண்பன் சொல்வான். “ஆசிய நாட்டு மக்களுக்கு தோலைச் சுட்டெரித்த சூரியன் பின் வரும் மழைக்காலம் மிகவும் பிடித்ததொன்று. ஐரோப்பியர்களுக்கு காதுகளை பிய்த்தெடுக்கும் பனிக்குப் பின் முளைவிடும் மொட்டுக்காலம் இருக்கிறதே! மரங்களுக்கு மட்டுமல்ல மனிதருக்கும் உயிர் வந்து சேரும் காலம் அது. கலைந்த மனதிற்கு மருந்து அது.” (more…)

பின்னூட்டம் இடுக January 14th, 2007

13.01.2002 - 16.01.2002

13.01.2002 ஞாயிறு இரவு 10.30

மனதை இறுக்கிப்பிடித்து ” நில்” என்று சொல்லியும் நின்று கேட்கவில்லை. என்னையும் மீறி பொங்கலின் முதல் நாள் பொழுதுக்கே சென்றுவிட்டது… நாளை விடிந்தால் பொங்கல்.அம்மா சர்க்கரை புக்கைக்கும் வெள்ளைப் புக்கைக்கும் போடுவதற்கு பயறு வறுக்கிறா.வீட்டு விறாந்தையின் முன் வாசற்படியில் குந்திக் கொண்டிருக்கிறேன். அப்பம்மா சாணி அள்ளிப்போட்டு மண் விறாந்தையை மெழுகுறா. சாணி காயமுன் கீழே இறங்க வேண்டாம் என்று வெருட்டி விட்டிட்டு குசினிக்குள் போய்விட்டா அம்மா. அம்மா அப்படி என்னை வெருட்டத் தேவையில்லை. நான் கீழா இறங்கவே மாட்டன். ஒரு முறை அப்படிக் கீழே இறங்கி அரியண்ட சாணி காலில் அப்பிவிட்டது.பிறகு கிணற்றில் கால்களை ஒன்றோடு ஒன்று தேய்த்து கழுவியும் மணம் போகவில்லை. அதனால் படியிலிருந்தே அப்பம்மா மெழுகுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மெழுகி முடிந்த இடங்களில் கைகளால் தடவிய அடயாளங்கள் தெரிகிறது. கோடு போட்டாற்போல அழகாக இருக்கிறது. சில மூலைகள் காய்ந்தும் விட்டன. “சாணி காய்ஞசாப்பிறகு என்ன செய்யவேணும்?” என்று அப்பம்மாவிடம் கேட்டேன். “இண்டைக்கு ஒண்டும் செய்யக்கூடாது. நாளைக்கு விடிய சாணி நல்லாய்க் காய்ஞ்சிடும். பிறகு கோலம் போட்டு கிழக்கு மூலையில் சூரியன் போலக்கீறி அடுப்பு வைச்சு, விறகு அடுக்கி பொங்கல் பானை வைச்சுப் பொங்கவேணும்.” என்று அப்பம்மா சொன்னா. (more…)

பின்னூட்டம் இடுக November 26th, 2006

05.01.2002 - 09.01.2002

05.01.2002 சனி காலை 8.30

சனிக்கிழமையென்றால் சின்னச் சின்ன மகிழ்வுகள் நிறைய உள்ளன. விழித்ததும் மணிக்கூடு “கீக்கீ” என்று கத்தும். ஆனால் இன்றுதான் பல்கலைக்கழகம் போகத் தேவையில்லையே என்ற மகிழ்வில் திரும்பிப்படுத்து ஒரு குட்டித்தூக்கம் போடுவேன். பத்துத் தரம் கத்திவிட்டு ஓய்ந்துபோகும் மணிக்கூடு. பயங்கரமான குட்டிக்கனவுகள் கூட அந்தக் காலையில்தான் வரும். கதைவைப் பூட்டும்போது கள்ளன் உள்ளே வந்து கழுத்தை நெரிப்பது போல திடுக்கிட்டு கண்விழிப்பேன். பல்துலக்கியவுடன் அம்மா தேநீர் போடுவா. அளவான பாலில் அதிகம் கசக்காத தேயிலைச் சாயத்தில் சீனீ போட்டு கலக்கிய தேநீர் ஆவி பறக்கும்.உதடு குவித்து ஊதி ஊதிக்குடிக்க இருளான காலை கூட இனிக்கும். இனித்த காலையில் இன்னுமொன்றும் சேர்ந்து கொள்ளும். அது அம்மாவும் அண்ணாவும் நானும் சேர்ந்து காரில் கடைக்குப் போவது. பனிபெய்தால் பனியைத் தட்டி மழை பெய்தால் நீரைத் துடைத்து காரைச் சூடாக்கி காத்திருப்பார் அண்ணா. காருக்குள் ஏறும் போது “சீர்காழி கோவிந்தராஜனின்” பக்திப்பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும். வெளியே காரிருள் உள்ளே வள்ளிக்கணவன் பெயரைத் தினமும் சொல்லடாதம்பி ” அல்லது தாமரை மலர்கள் ஆறு தவழ்ந்தன குழந்தைகள் ஆறு” என்று குழைந்து பாடும் அந்தக் குரல். கேட்கும் போது குழைத்த சந்தனமும் கற்பூரமும் மணப்பது போலிருக்கும். வீட்டுக் கேற்றைத் தாண்டி செல்லும் கார். கடையருகே நிறுத்திவிட்டு உள்ளே சென்றவுடன் விரும்பியதை வண்டிலுக்குள் தூக்கித்தூக்கி போடுவோம். (more…)

பின்னூட்டம் இடுக October 25th, 2006

30.12.2001 - 01.01.2002

30.12.2001 ஞாயிறு மாலை 5.40

அடிக்கடி நான் இப்படி உணர்ந்ததுண்டு.எனக்குள் ஒரு சிறுமி மிக உயிர்ப்புடன் வாழ்வது போல திருதிருவென்ற விழியுடன் இரட்டைப் பின்னலுடன், சின்னச் சட்டை போட்டு, விறுக்குவிறுக்கென்று அவள் உலவித்திரிவது போல. பனிமபெய்த போதும் பால் நிலா வந்தபோதும் துள்ளிக் குதித்து அவள் வெளியே வந்து விடுகிறாள். அம்புலி சிறுமியாகி விடுகிறாள். கன்னமிரண்டையும் கைகளால் அணைத்தபடி ஆசையாய் கதை பேசுகிறாள்.பாட்டுப்பாடி ஆட்டம் போடுகிறாள். மகிழ்கிறாள். பால் குடித்து அம்மாவின் மடியில் தூங்குகிறாள்… (more…)

பின்னூட்டம் இடுக October 9th, 2006

முன்னைய பதிவு



அறிமுகம்

    புதிய பத்தி எழுத்தொன்று இவ்விதழில் இருந்து ஆரம்பிக்கின்றது. அம்புலி எனும் இளைய பெண் எழுதுகிற நேசமொழியில் பேசவிடு எனும் பத்திதான் இது. அம்புலி தனது ஏழாவது வயதில் தேசம் விட்டு இங்கு வந்து இப்பொழுது பல்கலைக்கழக மாணவியாக இருக்கின்றவர். தனது நாளாந்த அனுபவத்தை இந்தப் பத்தியின் ஊடாகப் பகிர்கிறார். புலம் பெயர்ந்த இளைய தலைமுறையின் அனுபவமும் இதனை ஒத்ததுதான் என்பதனால் இந்தப் பத்தி எழுத்தை அம்புலியிடம் உவந்து பெற்று வெளியிடுகிறோம். இந்தப் பத்தி தொடர்பாக உங்கள் ஊக்கத்தை கவனத்தை எதிர்பார்க்கிறோம்.

    நன்றியுடன் ஈழமுரசு 11.10.2001

தொடுப்புகள்

செய்தியோடை