அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 20 April 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 36 arrow மனக்குகை உரையாடல்கள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


மனக்குகை உரையாடல்கள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மெலிஞ்சி முத்தன்  
Friday, 22 June 2007

என் நாட்குறிப்பேட்டில் எதையோ எழுதிக்கொண்டிருந்தது அந்தச் சாம்பல் நிற உருவம்.
இருட்டாயிருந்த என் அறையின் விளக்கை எரியச் செய்தபோது கலையாத இருட்டாய் அந்த உருவம் மட்டும் எஞ்சியிருந்தது.
'இதுவரை நேரமும் எங்கே போயிருந்தாய்'  என்று என்னையது வினவியது.
'என் தாய் வயசுக்கு வந்தபோது நான் எங்கேயிருந்தேன் என்பதையறிய வெளியே போயிருந்தேன்' என்றேன்.
'அறிந்துவிட்டாயா?'
'இல்லையில்லை பாதியிலேயே திரும்பி விட்டேன். என் மனக் குகைக்குள் பொத்திப் பொத்தி வளர்த்த என் கவிதைப் பூனையை கொலை செய்ததிலிருந்து என்னால் எதையும் சரிவரச் செய்ய முடியவில்லை'
'அப்படியானால் தனியாகவா போனாய்?'
'இல்லையில்லை, தொலைவிலிருந்து என் தோழனொருவனும் தன் சுருக்குப்பை நிறைய கொஞ்சம் தத்துவமும், மண்கும்பான் பிள்ளையார் கோயிலடியில் வாங்கிய உழுந்து வடைகள் சிலவும் கொண்டு வந்திருந்தான். அவன் வடையில் ஓட்டை விழுந்தது ஓர் அபததம் என்று சொல்லி்க்கொண்டே வந்தான். இருவருமாக ஓர் இலையுதிர் காலத்து மொட்டை மரத்தின் கீழமர்ந்து அவற்றை உண்டோம். அவன் என் பூனையை விசாரிததான். நான் அதனைக் கொன்றுவிட்ட கதையைச் சொன்னேன்'.
நான் வேலை பார்க்கும் உணவகத்தில் ஒருநாள் உணவுத் தட்டுகளில் எஞ்சியிருந்த உணவுகளை குப்பைக்கூடையில் கொட்டி கழுவுவதற்காக அடுக்கிக் கொண்டிருந்தேன்.
என் மனக்குகையில் பதுங்கிக்கிடந்த பூனைக்கோ சில மணங்களை மிகவும் பிடிக்கும்.
மண்ணெண்ணெய் மணம், முகத்திற்கு பூசும் ஒருவகை பசை மணம், புழுதி மணம் போலவே பீற்சா மணமும் அதற்கு நன்றாகப் பிடிக்கும்.
இவையெல்லாம் அதற்குப் பிடித்ததற்கான காரணம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களின் தாக்கத்தில் அந்த மணங்களும் கலந்திருக்கலாம்.
அப்போது பீற்சா தட்டினை கையில் வைத்திருந்தேன்.
பூனை வெளியில் வந்தபோது நான் அதைக் கடிந்து குகையினுள் திணி்த்தேன்.
ஏனெனில் யாரும் உண்டு கழித்த எச்சிலுணவை என் பூனை உண்டுவிடக்கூடாது என்பதில் அக்கறையாக இருக்கிறேன்.
ஆனால் அது பிடிவாதமாக வெளியே வந்தது என்ன செய்வது?  என் செல்லப் பூனையல்லவோ என்று அதனை கையில் எடுத்து தடவிக் கொடுத்தேன்.
'ஏய் பூனையே நீ ரொறன்ரோ வீதிகளில் நேரம் தெரியாமல் கடந்து வாகனங்களில் அடிபட்டு துர்வாடை வீசிக்கிடக்கும் ஸ்கங்கு விலங்குகளைப்போல் ஆகிவிடாதே' என்று சொல்லிக் கொண்டே மீண்டும் அதனை குகையினுள் போட்டேன்.
அதுவோ என் சொல் கேட்கவில்லை.
என்னைப் பழிவாங்குவதாய் நினைத்துக்கொண்டே என் முன்னே வந்து குட்டிகளைப் போட்டு தின்றுகொண்டிருந்தது.
எனக்கு மிகவும் துயரமாகவும் கோபமாகவும் இருந்தது.
உணவகத்தின் விருந்தினர் பகுதியில் வேலைபார்க்கும் நீலக்கண் பெண் வந்து என்னிடம் முள்ளுக் கரண்டிகளை விரைவாய் கழுவித் தரும்படி கேட்டாள்.
'பொறு நான் பூனையோடு பேசிக்கொண்டிருக்கிறேன்' என்றேன்.
அவள் வாயைச் சுழித்தவாறு என்னைச் சிலகணம் பார்த்தாள்.
பின் என் முதலாளியிடம் போய் எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாச் சொல்லியிருக்க வேண்டும்.
அவன் வந்து என்னைப் பார்த்தபோது கழுவாத உணவுத் தட்டுகள் குவிந்திருந்த தகர அட்டாளையின் முன் நின்று நான் பூனையோடு பேசிக்கொண்டிருந்தேன்.
முதலாளி வாய்க்கு வந்தவாறு என்னை ஏசினான். உடனடியாக முள்ளுக் கரண்டிகளைக் கழுவித் தரும்படி என்னிடம் கூறிவிட்டுச் சென்றான்.
நான் முள்ளுக் கரண்டிகளை அடுக்கி கழுவும் இயந்திரத்துக்குள் தள்ளும்போது, என் கையை பிராண்டிய என் பூனையையும் அதற்குள் தள்ளிவிட்டேன்.
இயந்திரம் இயங்கி முடிந்தபின் திறந்தபோது முள்ளுக் கரண்டிகள் மட்டுமே என் கைக்குக் கிடைத்தன.
என் பூனையை அதன்பின் நான் காணவே இல்லை.
வேலை முடியும்போது என் முதலாளி ' இனி நீ வேலைக்கு வரவேண்டாம்' என்றான்.
உணவகத்தை விட்டு வெளியேறி தெருவில் நடந்தேன்.
கங்ஸ் விலங்குகள் செத்தவாடை தெருவெங்கும் பரவியிருந்தது. வீடு வந்து என் அறைக்குள் படுத்திருக்க முடியவில்லை.
வெகுநாள் எனக்குள் குடைந்து கொண்டிருக்கும் கேள்விகளுக்கு விடைகாணும் உத்தேசத்தில் எழுந்து வெளியே வந்தேன். வந்த வழியில் உன்னைக் கண்டேன்.
வடைகளைத் தின்றவாறு நண்பன் தலையசைத்துக் கொண்டிருந்தான். அவனது கண்களோ மரத்தின் ஒரு கிளையிலிருந்த வண்ணத்துப் பூச்சியினை நோக்கியவாறு இருந்தன.
வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளோ சூரியனையும் சந்திரனையும் குழைத்து பூவின் இதழ்களில் வர்ணம் தீட்டியதுபோல் மிகவும் அழகாயிருந்தது. அது வண்ணத்துப் பூச்சிகளின் பாடல்களை இசைத்தவாறு வர்ணங்கள் கரைந்த வெளிக்கு பறந்து போவதாகச் சொல்லியது. நாங்களும் எழுந்து நடக்கலானோம்.
தெருவினில் தங்கள் தங்கள் எழுந்தமானங்களை தலைகளில் கிரீடங்களாய் அணிந்து கொண்டு பல இளைஞர்கள் கடந்து போவதைக் கண்டோம்.
அவர்களுக்குள் கறுப்பி நிறந்தினரும், வெள்ளை நிறத்தினரும், மர நிறத்தினருமிருந்தனர்.
கறுப்பர்களுக்குள்ளும் வெள்ளையர்களுக்குள்ளும் புதிய நாகரீக முன்னெடுப்புக்கான பனிப்போரொன்று நடந்து கொண்டிருப்பதுபோல உணர்ந்தோம்.
மர வர்ணத்தினரோ இரண்டுக்கும் நடுவில் திணறிக் கொண்டு நடப்பது போலத் தெரிந்தது.
முழங்கால்கள் வரை இறங்கயிருந்த அவர்களின் கவடுகளின் மேல் பின்புறங்களில் அரூபமான கோவேறு கழுதைகளின் வால்கள் முளைத்திருப்பதைக் கண்டோம்.
இவர்களை நாம் நிதானப்படுத்த வேண்டும் என்றான் நண்பன். நானும் தலையசைத்தேன்.
கையிலிருந்த வடைத் துண்டொன்றினை இடையில் சந்தித்த மர வர்ண மனிதனிடம் நீட்டினேன்.
அவனோ தன் குளிரங்கியில் அந்த மணம் அப்பிக்கொண்டு தன் செளகரியத்தை குறைத்துவிடுமாதலால் அதை வேண்டாமென்று மறுத்துவிட்டான்.
முதலில் எங்கள் கேள்விகளுக்கு பதில் தேடிக்கொள்வோமென்று மறுகரை நோக்கி நடந்தோம்.
அந்தக் கரையில் ஓர் அழகான ஆடவன் தன் பூனைகளுக்கு நகம் வெட்டிக்கொண்டிருந்தான்.
என்னைக் கண்டதும் வா நண்பனே இவற்றில் ஒன்றை எடுத்துக் கொள் என்றான். அவை மிகவும் அழகானவை.
அப்பால் ஒரு கரையில் கனவுகளுக்கு விளக்கம் சொல்லும் சூசையின் பேரனும் விளக்கம் சொல்லப்படாத தன் கனவின் மீதியை ஒரு பொட்டளியில் போட்டுக்கொண்டு வருவதாக சொன்னான்.
எங்கள் எல்லாரிடமும் கேள்விகள் இருப்பதால் நாங்களெல்லோரும் ஒன்றாய்ச் சேர்ந்து ஒரு அமவாசைத் தினத்தில் பயணிக்கலாம் எனத் தீர்மானித்தோம்.
தொலைவிலிருந்து வந்த நண்பன் தான் கட்டாயமாய் சனிக்கிழமை தன்வீட்டுத் தோட்டத்தில் பூக்கண்டுகளை நட்டுவிடவேண்டுமென்று அவசரப்பட்டதால் நானும் திரும்பிவிட்டேன். மறுமுறை பயணிப்பதற்குள் நான் எனது பூனையினை உயிர்ப்பித்து விடுவேன் என்றேன்.
'ஆமாம் மறுகரைக்குப் போய் வந்தாயே அங்கே இப்போ என்ன நேரம்' எனக் கேட்டது அவ்வுருவம்.
'நான் காலத்திற்கு கட்டுப்பட்டவன் இல்லையே' என்றேன்.
அது சிரித்தது பின் அது என்னுடனேயே உறங்கிப் போனது.
ஏனெனில் அது என் உயிர் நிழல்.

நன்றி: அலை ஒசை -

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 20 Apr 2024 10:53
TamilNet
HASH(0x56341efe5058)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 20 Apr 2024 10:53


புதினம்
Sat, 20 Apr 2024 10:53
















     இதுவரை:  24784999 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2476 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com