அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 25 April 2025

arrowமுகப்பு arrow சலனம் arrow சலனம் arrow தமிழ் சினிமாப்பரப்பில் பருத்திவீரன்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தமிழ் சினிமாப்பரப்பில் பருத்திவீரன்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: த.அகிலன்  
Tuesday, 15 May 2007

தமிழ் சினிமாப்பரப்பில் அதிர்வுகளைக் கிளப்பியிருக்கும் பருத்திவீரன்.

இயக்குநர் அமீருடனான சிறப்பு நேர்காணல். நேர்கண்டவர் த.அகிலன். ஒளிப்படங்கள் அருண்.

நான் எல்லாப்படங்களையும் பார்க்கிறேன். தனிமையும் துயரும் நிரம்பிக்கிடக்கும் நாட்களில் மாற்றீடாக எதையாவது இட்டு நிரப்பிவிடவேண்டியிருக்கிறது. தனியே வாசித்தும், கேட்டும் நாட்களை நகர்த்துவதன் சாத்தியமின்மை, என்னை ஒரு நாளின் 4 மணிநேரத்தை விழுங்கிவிடும் திரையரங்குகளை நோக்கி செல்லவைக்கிறது. முடிவில் சோழப்பொரி சுற்றித்தரப்படும் காகிதங்களை விட்டு வருவதைப்போல திரையரங்கையும், படங்களையும், அதன் நினைவுகளையும் கடந்து வெளியேறிவிடுகிறேன். அதையும் தாண்டி நான் பார்க்க நேர்கிற படங்களில் மனசைப் பிசைகிற அல்லது வலி நிறைந்த நெடிகளுடன் என் கூடவே வந்துவிடுகிறன படங்கள் சில. அப்படி அண்மையில் என் கூட வந்த படம் பருத்திவீரன்.
கிராமத்து மனிதர்களின் வாசனையை மனமெங்கும் ஏன் அரங்குமுழுவதும் நிரப்பிவிடுகிற கதை பருத்திவீரன்.
சினிமா ரசிக மனங்களை தத்துவங்களாலும் குத்துப்பாட்டாலும் நிறைத்துவிட நினைக்கும் கதாநாயகர்களினிடையில் தனது முதல் படத்தையே இவ்வாறு  மண் மணக்கும் பருத்தி வீரனை தேர்ந்தெடுத்ததற்காக நடிகர் கார்த்தியை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
தமிழ் சினிமாவின் பாடற்காட்சிகளில் அழகாக மிக அழகாக மட்டுமே காட்டப்பட்ட நமது கிராமங்களின் இன்னொரு முகத்தை பருத்திவீரன் காட்டுகிறது.
வறண்டு போன பொட்டல் வெளிகளையும் அதனூடே வாழும் பசிய மனங்கொண்ட மனிதர்களையும் நம்மிடையே வாழச்செய்கிறது பருத்தி வீரன். 
நாங்கள் கிராமங்களை விட்டு நிறையத்தூரம் வந்துவிட்டோம். பருத்திவீரனில் வரும் அநேக முகங்கள் மறந்துபோனவை அல்லது அவர்களை நம் சுற்றத்தாராய் புரிந்து கொள்ளாத ஒரு தலைமுறை நம்மிடையே தோன்றியிருக்கிறது. இந்தச் சூழலில் உணர்வும் உயிருமாக நம்மிடையே கிராமத்தையும் அதன் மனிதர்களையும் கொண்டுவருகிறது பருத்திவீரன்.
பெரும்பாலும் வயல் வெளிகளினிடையில் கதாநாயகி நடனம் ஆடுவதை மட்டும் மிக அழகாக பதிவு செய்கிற கமரா, இங்கோ எலும்பும் தோலுமாகிப்போன கிராமத்தை நீர்வற்றிப்போய் தகித்தலையும் ஒருகிராமத்தின் உக்கிரமுகத்தை, நக்கலும் நையாண்டியுமாய் தெனாவெட்டோடு அலையும் மனிதர்களைப் முதல்முறையாகப் பதிவு செய்திருக்கிறது.
படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது எனக்கு தோன்றியது கார்த்தியைவிடவும் சரவணன் நன்றாக நடிக்கிறார் என்று. முடிவில் எல்லோரும் நன்றாகத்தான் நடித்தார்கள் என்கிற முடிவிற்குத்தான் வரவேண்டியிருந்தது. கதாநாயகனையும் கதாநாயகியின் அங்கங்களையும் மட்டுமே சுற்றியலையும் கமரா இந்தப்படத்தில் எல்லோரையும் ஒரே கண்கொண்டு பார்த்திருக்கிறது. அரங்கைவிட்டு வெளியேறுகையில் கதைமாந்தர்கள் அத்தனைபேரும் நம்மிடையே வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
தமிழ் சினிமாப்பரப்பில் அதிர்வுகளைக் கிளப்பியிருக்கும் பருத்திவீரன் திரைப்படத்தின் உருவாக்க கர்த்தா இயக்குநர் அமீர் அவர்களுடன் பருத்திவீரன் படம் குறித்து எமது ஆதங்கங்களை பகிர்ந்து கொண்டோம்.
இயக்குநர் அமீர் 
நாங்கள் இறுதிக்காட்சியிலிருந்தே தொடங்குவோம். படத்தின் அந்த இறுதிக்காட்சி இத்தனை சர்ச்சைகளை கிளப்புகிறதே நீங்கள் அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
 
நான் பாசிட்டிவ்வாகத்தான் எடுத்துக்கொள்கிறேன். ஏன் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது என்றால் யார் அதைக்கிளப்புகிறார்கள் என்று பார்க்கணும். படம் பார்க்கிற ரசிகர்கள் அதை ஏற்றக்கொள்கிறார்கள். ஒரு சினிமாவை யாருக்காக படைக்கிறோம். ரசிகனுக்கும் மக்களுக்கும் தான் படைக்கிறோம் வேறு யாருக்கும் கிடையாது. இங்கு படைப்பாளிகள் தான் சர்ச்சைகள் செய்கிறார்கள். ஒவ்வொரு படைப்பாளியும் ஒவ்வொரு கோணத்தில் சிந்திக்கிறார்கள். இரண்டு படைப்பாளிகள் ஒரே மாதிரி சிந்திக்கமுடியாது. விமர்சகர்கள் கூட இது அப்படியிருந்திருக்கலாம், அது இப்படியிருந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். நான் சொல்கிறேன் அதெல்லாம் உங்களுடைய கருத்து. உங்களுடைய கருத்தை என்னுடைய படத்தில் திணிக்க முடியாது. இது என்னுடைய படம் என்னுடைய கருத்து ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஐடியா சொல்கிறார்கள்.
'அவர்கள் இரண்டு பேரும் சந்தோசமா சேர்ந்து வாழ்ந்திருக்கலாமே' என்கிறார்கள்.  நான் ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் ரோமியொ யூலியட் எப்படி வரலாறாக வந்தது? அவர்கள் சந்தோசமாக இருந்திருந்தால் நீங்கள் அதை வரலாறு என்று சொல்லியிருப்பீர்களா? சில கதைகளுக்கு சிலவகையான முடிவுகள் தான் சரியாக இருக்கும். அதில எந்த சந்தேகமும் எனக்கு கிடையாது. அதைத்தவிர இப்படியிருந்திருக்கலாம் அப்படியிருந்திருக்கலாம் அந்த இறுதியிக் காட்சியில் என்கிறார்கள். நான் சொன்னேன் நீங்கள் உங்களுடைய அறிவை உள்ளே திணிக்கிறீர்கள். உங்களுடைய அறிவு சார்ந்து இந்த கிளைமாக்ஸ் இப்படியிருந்திருக்கலாம் என்கிறீர்கள் ஆனால் நான் என்னுடைய அறிவைக்கூட உள்ளே வைக்கவில்லை. ஒரு இயக்குனராக என்னுடைய அறிவைக்கூட நான் உள்ளே வைக்கவில்லை.  நான் வைச்சிருக்கிற கிளைமாக்ஸ் பருத்திவீரனின் அறிவு சார்ந்தது. பருத்தி வீரன் என்கிற ஒரு படிக்காத ரவுடித்தனம் பண்ணிக்கொண்டிருக்கும் ஒருத்தன் அவன். எப்படி அந்த இடத்தில் சிந்திப்பான் முடிவெடுக்கிறான். இறந்துபோன தன்னுடைய காதலியை எப்படி ஊர்ப்பொதுமக்களிடமிருந்து காப்பறுவது என்று முடிவெடுக்கிறான். அவனுடைய அறிவு என்னவாக வேலைசெய்கிறது என்பதைத்தான் பதிவு செய்திருக்கிறேன். நீங்கள் அதை அப்படித்தான் அணுகவேண்டுமே தவிர இது இப்படியிருந்தா நல்லாயிருந்திருக்கும் அப்படியிருந்தா நல்லாயிருந்திருக்கும் என்பதெல்லாம்  என்னைப் பொறுத்தவரையில் சரியான விமர்சனமாக ஆகாது.

தமிழ்சினிமாவில் இப்போது வரக்கூடிய நல்ல படங்கள் அவற்றிற்கான வெற்றிகள் இவையெல்லாம் ஆரோக்கியமான விசயம் தான் இது தமிழ்சினிமாவின் ரசிகமனம் மாறியதால் ஏற்பட்ட மாற்றமா? அல்லது தமிழ் சினிமாத் தரப்பினரால் ஏற்படுத்தப்பட்ட மாற்றமா?
 
எங்களைப்போன்ற இயக்குனர்கள் ஏற்படுத்துகிற மாற்றம்தான். ரசிகர்களுடைய மாற்றம் எல்லாம் கிடையாது அவர்கள் எப்பொழுதும் ஒரேமாதிரியாத்தான் இருக்கிறார்கள்.ஒரு உணவு எப்படி பல்வேறு வகைவகையாக ரசிகர்களால் ரசிக்கப்படுகிறதோ அது மாதிரித்தான் சினிமாவும் ரசனை சம்மந்தப்பட்ட விசயம் அது நீங்கள் என்னவிதமான படைப்புகளைக் கொடுத்தாலும் அதைப்பார்ப்பதற்கென்று ஒரு கூட்டம் இருந்துகொண்டுதான் இருக்கும்.

அது சரி ஆனா அந்த படைப்பாளிகள், விமர்சகாகள் கூட்டத்தால ஒரு வணிக ரீதியிலான வெற்றியையும் தாண்டி இந்தப்படத்துக்கு ஒரு பெரிய வணிக ரீதியிலான வெற்றியைத் தரமுடிந்திருக்கே அது மாற்றமில்லையா?

மாற்றம் எல்லாம் இல்லை யார் செர்னனா? (கோபமாகிறார்) அவர்கள் கரெக்டா இருக்காங்க சார். வெகுஜன சினிமாவையும் தாண்டி ஒரு வெற்றியை கொடுத்திருக்கிறார்கள் என்றால் அதை ஒரு set of audience  பார்த்திருக்கிறார்கள்.  இதைவேறு சிலரும் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அப்படித்தான் கொள்ளவேண்டும். அவர்கள் அவதானித்துக் கொண்டேயிருக்கிறார்கள் என்னமாதிரியான சினிமாவுக்கு போகணும் அப்படியென்று சொல்லி பார்த்துக் கொண்டேயிருக்காங்க. சிலருக்கு இந்தமாதிரியான படங்கள் பிடிக்குது போறாங்க. யூத் புல்லான சினிமா பிடிக்கும் போது அதுக்கு போறாங்க. சிலர் குடும்பமாக குடும்பபாங்கான படம் வரும்போது அதைப்போய்ப் பார்க்கிறாங்க. இதுல எல்லாம் மொத்தமா இருக்கிறதால எல்லாரும் வந்து பார்க்கிறாங்க. அவர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள் குடுக்கவேண்டியது நம்மட கடைமை.
 
இயக்குனரும் நடிகருமான தங்கர்பச்சான் ஒருபேட்டியில் 'என்னுடைய படங்களை புரிந்துகொள்ளுமளவுக்கு இன்னமும் தமிழ்சினிமா ரசிகமனம் வளர்ச்சி அடையவில்லை" என்றார். (அழகி படம் வெளிவந்த புதிதில்) அதை ஒத்த காரணங்கள் தானா பருத்திவீரன் இறுதிக்காட்சி தொடர்பான சர்ச்சசைகளும்? நீங்கள் எடுத்து வைத்திருப்பதாக சொல்லப்படுகின்ற இன்னொரு பருத்திவீரன் பிரதியை தமிழ் சினிமா தளத்தில் வெளியிடாமல் இருப்பதுவும்?

ரசிகமனம் புரிந்து கொள்ளாது என்பதெல்லாம் கிடையாது வணிக ரீதியிலான வெற்றியைப் பெறமுடியாது. ஏனென்றால் வணிக ரீதியிலான வெற்றி முக்கியமானது. நீங்களே சொல்றீங்க நல்லபடம் குடுத்தா ரசிகன் பார்ப்பான் என்று. திரும்பவும் நீங்களே சொல்றீங்க நல்லபடம் குடுத்தா பார்க்மாட்டான்று என்று. ஆனால் ஒரு படைப்பை கொண்டு போய் அவர்களிடம் சேர்ப்து முக்கியமானது. அதிலே நிறையப் பிரச்சினை இருக்கிறது. எந்த படைப்புகளை எடுத்தாலும் ரசிகரிடம் கொண்டு போய் சேர்ப்பதில் நிறைய தடைகள் இங்கே இருக்கின்றன அது ரொம்ப முக்கியமான விசயம் இல்லையா? ஏன்னா இது வியாபரம் சார்ந்த விசயமாகவும் இருக்கிறது. கலையாக இருந்தாலும் வியாபாரம் சார்ந்து இருப்பதால் எனக்கும் ரசிகருக்கும் பாலமாக இருப்பவர்கள் அனைவரும் இதிலே விருப்புள்ளவர்களாக இருந்தால் மட்டும் தான் இது சாத்தியம். அல்லாவிட்டால் இந்த படைப்புக்களுக்கான உரியவிலை கிடைக்காது இவ்வளவு பிரச்சனைகள் இருக்கில்லையா? அதனால் தான் வெளியிடுவதில் பிரச்சினைகள் இருக்கிறதே தவிர மற்றபடி ரசிகர்களுடைய ரசனையை குறைச்சு மதிப்பிடுவதாகாது.
 
பருத்திவீரன் ஒரு படைப்பாளியாக உங்களுக்குள் திருப்தியை தந்திருக்கிறதா?
 
நான் கொடுத்த அந்த சினிமா சரியான சினிமாவா இருக்கு என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துகள் கிடையாது. ஒரு படைப்பாளியாக நான் அந்த சினிமாவை பருத்திவீரனை முழுமையாக நான் நினைத்தது மாதிரி எடுத்திருக்கனா என்றால் இல்லை. ஏன்னா என்ன யோசித்தேன் அதில் என்னத்தை வெளிப்படுத்திருக்கிறேன் என்பது ரசிகருக்குத் தெரியாது அவர்கள் வெளியிடப்பட்ட பிரதியை மட்டும் தான் பார்க்கிறார்கள். ஆனால் நான் என்ன யோசித்தேன் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த ஒரு விசயம் அல்லது ஒரு ரகசியம் அது.
 
அதைத்தான் கேட்கிறேன் அந்த வகையில் உங்களுக்கு திருப்பதியா?
 
அதில் எனக்கு திருப்பதின்னா ஒரு 70 சதவீதம் திருப்தி அவ்வளவுதான். 100 வீதம் நான் எதிர்பார்த்ததை 70 வீதம் அடைந்திருக்கிறென். ஒரு படம் வெளியே வந்ததற்கு பிறகு எத்தனை திருத்தங்கள் மனதில் தோன்றும். இதை இப்படிச் செய்திருக்கலலாமே அதை அப்படி பண்ணியிருக்கலாமே என்று தோன்றும் அப்படித் தோன்றுகிறவன் தான் படைப்பாளி. நோண்டிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த அனுபவம் ரசிகருக்கு கிடையாது ஏன்னா அவர்கள் பார்க்கும போது ரசிப்பார்கள்  அவ்வளவுதான். அதனால் தான் சொல்கிறேன் முழுவதுமாக திருப்திப்பட்டுக் கொள்ள முடியாது எந்த ஒரு படைப்பாளியுமே அது என்ன படமாக இருக்கட்டும் முழுவதுமாக திருப்திப்பட்டுக் கொள்ளமுடியாது.
மற்றப்படி இந்த படத்தினுடைய மிகப்பெரிய வெற்றியே எனக்கு ஒரு பாரம். இப்பத்தான் முதல்படம் வேலைசெய்வது மாதிரியான எண்ணத்தை மனசில வைச்சிருக்கிறேன். எப்பவுமே அப்படித்தான் வச்சிருக்கிறேன்.
 

இந்தப்படத்தின் இசைபற்றிச் சொல்லுங்கள். கிராமியக் கதைகளுக்கான இசை அதை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்தவர் இளையராஜாதான். ஆனால் இதில் யுவன் அதையும் தாண்டி ஏதோ செய்திருக்கிறார் அதைப்பற்றி?
 
இளையராஜா ஒரு ஜீனியஸ் தமிழ் சினிமாவில் கிராமத்துக்கான அடையாளங்களை சரியான முறையில் வெளிப்படுத்தியவர் அவர்தான். ஒரு கிராமியம்னா எப்படி இருக்கணும் அதற்கான இசை என்றால் எப்படி இருக்கணும் என்பதெல்லாம் தமிழ்சினிமாவில் அவர்தான் விதைச்சு விட்டது. நான் அவருடைய படங்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். இருந்தாலும் எனக்குள்ள தோன்றியது இன்னும் கிராமிய இசை என்று ஒன்று இருக்கிறது. கிராமியப் படங்களுக்கான இசை அமைக்கப்பட்டிருக்கிறதே தவிர கிராமிய இசை என்று ஒன்று புறம்பாக இருக்கிறது. அது இன்னும் சினிமாவில் பயன்படுத்தப்படவில்லை என்று எனக்கு தோன்றியது. நான் அந்த இசையை எல்லாம் தேடி யுவன்சங்கர்ராஜாவின் கையில் கொடுத்தேன் யுவன் அதை அருமையாக பயன்படுத்தியிருக்கிறார் அவ்வளவுதான்.
 
பாரதிராஜா ஒரு இதழுக்கு பருத்திவீரன் படம் பார்த்துவிட்டு சொல்லியிருக்கிறார் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அமீர் கிராமங்கள் குறித்த சில நல்ல விசயங்களையும் காட்டியிருக்கணும் என்று. ஏன் அப்படி? எலும்தோலுமான கிராமத்தை படமாக்கியது குறித்து சொல்லுங்கள்?
 
கேள்வியிலேயே இதற்கான பதிலும் இருக்கிறதே. கிராமத்தை அழகான கிராமமாக காண்பித்தார்கள்,  பாடலுக்கு பின்ணணியாக காண்பித்தார்கள் எல்லாமுமாக கிராமங்கள் காண்பிக்கப்பட்டு விட்டன. எலும்பையும் தோலையும் யார் காண்பிப்பது யாரும் காண்பிக்கவில்லை அதான் நான் காண்பித்தேன். அப்படி அந்த வறண்டு போன பூமியை எடுக்கவேண்டும் என்பதற்காக படத்தை தாமதமாக கொண்டு வரவேண்டிக் கூட இருந்தது. அந்த பூமி சில நாட்களில் அப்படி இருப்பதில்லை. விளைஞ்சு நிக்கிறது ஏதோ ஒரு ஆறு மாசம்தான். மத்தநேரம் எல்லாம் வறண்டு போய்த்தானே கிடக்கு. அப்ப அந்த வறண்ட பூமியைக் காட்டணும் இல்லையா? எல்லாமே பிரேமுக்கு அழகா பச்சைப்பசேல்னு அதை நான் காண்பிக்க முடியுமா நான் இதைத்தான் காண்பிக்கணும் என்று நினைத்தேன். என்னுடைய பூமியின் நிஜமான முகத்தை, நிஜமான மனிதர்களின் முகத்தை அதை அப்படியே பதிவு செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டே பதிவு செய்திருக்கிறேன். இதில் ஆட்சேபனை இருக்கிறது என்றால் இருந்து விட்டுப்போகட்டும். ஒவ்வோருவருடைய கருத்துக்கும் நான் பதில்சொல்ல வேண்டியதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பீல் பண்ணுகிறார்கள் பாரதிராஜா சார் மேல எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. அவர் சில விசயங்கள் சொல்யிருக்காரு அது அவருடைய கருத்து. அவர் சொன்னதும் தப்புன்னு நான் சொல்லமுடியாது அதுக்காக அவர் சொன்னதெல்லாம் சரின்னும் சொல்லமுடியாது.
 

பருத்திவீரன் படம் துவக்கத்தில் அல்லது அதன்மையம் ஒரு சாதிச்சிக்கலை மையமாக வைத்து பின்னப்பட்டிருந்தாலும் இறுதியில் அது கரைந்து காணாமல் போய் ஒரு காதல குறித்த பிரச்சினையாக மாறிவிடுகிறது? அதைப்பற்றி சொல்லுங்கள்? ஒட்டுமொத்தமாக சினிமாவில் சாதி கையாளப்படும் முறை குறித்து என்ன சொல்லுகிறீர்கள்?
 
சாதி நம்ம வாழ்க்கையோட பின்னிப்பிணைஞ்சு கிடக்கு. நம்முடைய ரத்தத்துல நம்முடைய சதையில நம்முடைய மூச்சில நம்முடைய பேச்சில நம்முடைய உணர்வில எல்லாத்திலயுமே சாதி நம்மளோட ஒண்ணோட ஒண்ணா பின்னிப்பிணைஞ்சிருக்கு. நம்ப சமூகத்திலும் நம்மளிடத்திலும் இது இல்லேன்னு சொன்னா அது பொய். ஏன் பொய் சொல்லீட்டு வாழணும்னு நினைக்கிறீங்க? பள்ளிக் கூடத்துல கொண்டு போய் சேர்க்கணும்னு சொல்லும்போதே என்ன ஜாதின்னு கேக்கிறீங்க அங்கே ஆரம்பிக்கிது. தெள்ளத் தெளிவா கேக்கிறீர்கள் அல்லவா? ஜாதிச்சான்றிதழ் வாங்கியிருக்கீங்களா அப்படீன்னு எல்லாத்தையும் சமூகமும் அரசுகளும் சேர்ந்து எங்ககிட்ட கொடுத்துட்டு, இதெல்லாம் வேணும் உனக்கு வைச்சுக்க என்று சொல்லிவிட்டு, அப்புறம் அது சார்ந்த படங்கள் வரும்போது சாதியை முன்னிறுத்தி வராம என்ன செய்யும் அது வரத்தான் செய்யும்.
 

உங்களுடைய தனிப்பட்ட கருத்தென்ன அது சரி என்கிறீர்களா? இல்லை தவறு என்கிறீர்களா?
 
இது சரியா தவறா என்பதல்ல. சாதியை இப்ப இந்த ஜாதிக்காரர்கள் உயர்ந்தவர்கள் இந்த சாதிக்காரர்கள் தாழ்ந்தவர்கள் இவர்கள் தான் அறிவு பூர்வமானவர்கள் என்று சொல்ல முடியாது எல்லோருக்கும் எல்லாம் சொந்தம். அப்படி குறிப்பிட்ட ஒரு சாதியை முன்னிறுத்தி பண்ணினால்தான் தப்பே ஒழிய கதையோட ஓட்டம் போகணும் என்பதற்காக அங்கே சாதியைப் பயன்படுத்துவது தப்புன்னா முதலில் அது சமூகத்தில் இருந்து எடுக்கப்படணும். அதற்கு பிறகு திரைப்படங்களில் இருந்து ஆட்டோமட்டிக்கா வெளிய போயிரும். அதுல வைச்சுகிட்டு இதில இருந்து எடுங்க எடுங்கன்னா எப்படி எடுக்கமுடியும். சொல்லுங்க அதை எடுக்க முடியாது அது முன்னுக்கு பின் முரணாண விசயம் இல்லையா. ஒரு உண்மையை மறைச்சு எப்படி வேலை செய்யமுடியும் அது ஒரு கமர்சியல் சினிமால வேணுமெண்டா ஒன்றும் இல்லாமல் போயிரலாம். ஒரு யதார்த்த பதிவை செய்கிறபோது சொல்லித்தானே ஆகவேண்டியதிருக்கு . யதார்த்தமான பதிவைச் செய்யம் போது அது கட்டாயம் தேவைப்படுகிறது அங்கே அது இல்லாம சொல்லவே முடியாது.
 

திரைப்படங்களில் சாதி வரலாமா வரக்கூடாதா என்பதல்ல பிரச்சினை அது அணுகப்படும் விதம் குறித்துத்தான் கேட்கிறேன்?
 
பிரச்சினைக்கு தீர்வெல்லாம் நான் சொல்ல முடியாது. நான் எப்படி சொல்ல முடியும். நான் எங்களைச் சுற்றியிருக்கக் கூடிய பிரச்சினையை உங்க கண்ணு முன்னால கொண்டு வந்து வைக்கிறன் தீர்வை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். இது சரியா தப்பா. கீழ் ஜாதிப் பெண்ணை திருமணம் செய்து கொள்வது சரியா தப்பா சரின்னு தோணிச்சண்ணா அது தான் தீர்வு. நான் இதைத்தான் செய்யணும் என்று ஒருத்தரிடம் போய் சொல்லமுடியாது. ரசிகனிடமே அந்த தீர்வை விட்டாச்சு. நம்மளைச் சுத்தியிருக்கிற பிரச்சினை ஒரு சின்ன விசயத்துக்காக எத்தனை வருசமா அடிச்சுக்கிறாங்க. 25 வருசமா சாதியை மனசில வைச்சுக்கிட்டு போராடிப்போராடி என்னத்தை கண்ட. சாதி சாதின்னு இழந்தது என்ன. உனக்கு சோறு போட்ட உன்னுடைய மச்சானை இழந்தாய். அவனை நம்பி வந்த ஒரு பெண்ணை இழந்தாய். இருவரும் பலியானார்கள் காலச்சக்கரத்தில அதுக்கப்புறம் இப்ப எதை இழந்தாய் அவர்கள் வயிற்றில் பிறந்த 20 வருசமாய் வளர்க்கப்பட்ட ஒரு பையனை இழந்தாய் உன்னுடைய மகளை இழந்தாய். எதை நீ ஜெயித்தாய் ஜாதி ஜாதின்னு மனசில போட்டு குழப்பிக்கொண்டு என்ன ஜெயித்தாய். இழப்புகளை மட்டுமே நாளுக்கு நாள் சந்தித்துக்கொண்டே யிருக்கிறாய் இதற்குப்பின்னால் உன் குடும்பத்தினரும் பலிகிறார்கள். நீ எதைக்கொண்டு போகப்போற சந்தோசத்தையா? துக்கத்தையா? எதை நீ இனிமே சுவாசிக்கப்போறாய்? எதை சாப்பாடா வைச்சிக்கப்போறாய் சாதியைவா? இத்தனையையும் தான் படத்தில் சொல்லியிருக்கிறேன் நீங்கள் தான் எடுத்துக்கணும். நான் தெள்ளத் தெளிவா கொண்டு வந்து உங்க கண்ணு முன்னால வைச்சிட்டன். ஜாதி ஜாதின்னு ஒருத்தன் போனான் அதனால வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறான் என்று நான் காண்பிக்கவில்லை அதனால் ஏற்பட்ட இழப்புகளை பதிவு செய்திருக்கிறன் பார்வையாளன் எடுத்தக்கொள்ள வேண்டும். இது வேணுமா வேண்டாமா?

அரவாணிகள் தமிழ்சினிமாவில் பயன்படுத்தப்படுவது பற்றி? உங்களுடைய படத்தில் பயன்படுத்தப்பட்ட விதம் பற்றி?

நான் அரவாணிகள் சார்ந்த படங்கள் நிறையப் பார்த்திருக்கிறேன். அவர்களைப் பயன்படுத்திய படங்கள் எல்லாமே பாடலுக்கு காமெடியா பயன்படுத்துவாங்க. நான் அவர்களை அவர்களின் வாழ்க்கையொடு ஒட்டியிருக்க கூடியமாதிரி அவர்களுடைய தொழில் சார்ந்து உபயோகப்படுத்தியிருக்கிறேன். அவர்கள் என்ன செய்கிறார்கள் அவர்களக்கு ஏது வருமானம் குறிப்பாக கிராமங்களில் இருக்கக் கூடிய அரவாணிகள். இந்தமாதிரியான கூத்துக்களுக்கும் ஆடல் பாடல்களுக்கும் திருவிழாக்களுக்கும் போய்த்தான் அவங்கள் வந்து பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் மத்தபடி அவர்களுடைய வாழ்க்கை என்று ஒன்று தனியாக இருக்கிறது. அதை நான் வேறொரு காலகட்டத்தில் பதிவு செய்வேன். ஆனா இப்ப வந்து இந்தப்படத்தில் அவர்களை அவர்கள் தொழில் சார்ந்து பயன்படுத்தியிருக்கிறேன். எந்த மாற்றமும் இல்லாமல் அதில் கலப்படமெல்லாம் கிடையாது. கலப்படமில்லாம கொடுத்திருக்கன் அதால அதில எந்த தப்பும் கிடையாது அல்லது தோணல. திடீர்னு ஒரு பாட்டுக்கு கொண்டு வந்து திணிக்காம அந்த கிராமத்திலயே அவங்களும் இருக்காங்க அந்தப்பக்கம் திருவிழா நடக்கும்போது இருக்காங்க இந்தப்பக்கம் இன்னொரு திருவிழா நடக்கும்போது இருக்காங்க என்னுடைய படத்தில் அவர்களுடைய இயல்போட இருக்காங்க அதனால தப்பா தோணாது. நிஜம் எப்பொழுதும் தோற்பதில்லை.

(பருத்திவீரன் இயக்குநர் அமீருடனான இந்நேர்காணலை மறுபிரசுரம் செய்ய விரும்புவோர் வழிமூலம் அப்பால்தமிழ்-சலனம் என்று குறிப்பிட வேண்டும்.)

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)


கருத்துக்கணிப்பு




செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 25 Apr 2025 23:22
TamilNet
The JVP has recently lent itself to US efforts to consolidate the unitary state and realise its long-held ambition to capture state power in Colombo. In this regard, they have also engaged with a range of actors, from the IMF, Washington, and New Delhi, as well as attempted to woo Eezham Tamils and other Tamil-speaking people to opt for the NPP in the 2024 SL Presidential Elections. Norway-based Eezham Tamil anthropology scholar Dr Athithan Jayapalan writes that the NPP and Lionel Bopage speak of equality without addressing the right of an oppressed nation to secession in the face of national oppression and genocide. Instead, the NPP, aligned with the US position, vows to neutralise the Eezham Tamil political struggle for self-determination.
Sri Lanka: JVP always denied Eezham Tamils?inalienable self-determination: Anthropology scholar


BBC: உலகச் செய்திகள்
Fri, 25 Apr 2025 23:22


புதினம்
Fri, 25 Apr 2025 22:41
















     இதுவரை:  26915428 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6464 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com