அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வாசுதேவனுக்கு ஒரு பதில்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கருணாகரன்  
Saturday, 14 April 2007

பரதேசிகளின் பாடல்கள்:
மேலதிக புரிதல்களுக்காக சிலகுறிப்புகள்

பரதேசிகளின் பாடல்களுக்கு நான் எழுதிய விமர்சனம்  வாசுதேவனால் தவறாகக் கொள்ளப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன்.
வாசுதேவன் தவறான கோணத்திலிருந்தே அந்த விமரிசனத்தைப்  பார்க்கிறார். புலம்பெயர்வாழ்வு சந்தித்துள்ள நெருக்கடிகளை நான்  புரிந்துகொள்ளத் தவறுவதாகவும் அவற்றைப் பொருட்படுத்த நான்  விரும்பவில்லை என்றும் குறறம்சாட்ட முனைகிறார். இது எந்த  ஆதாரமுமற்ற குற்றச்சாட்டு.

புலம்பெயரிகளின் துயரம்பற்றியும் அவர்கள் தினமும் படுகின்ற  அவலங்களைப்பற்றியும் ஏற்கனவே பல வெவ்வேறு  சந்தர்ப்பங்களில் எழுதியிருக்கிறேன். அவற்றை வாசுதேவன்  அறியவேண்டும். தவிர பரதேசிகளின் பாடல்கள் பற்றிய  என்னுடைய விமரிசனத்திலும்கூட எந்தச்சந்தர்ப்பத்திலும் அப்படி  புலம்பெயரிகளின துயரத்தைப் புறக்கணித்து எந்தக்குறிப்பும்  எழுதப்படவில்லை.

பதிலாக பரதேசிகளின் பாடல் என்றபெயரில்  முன்வைக்கப்பட்டிருக்கும் படைப்புகளைக் குறித்த  அபிப்பிராயங்களே பேசப்பட்டுள்ளன.

அந்த விமரிசனத்தை எழுதும்போதும் இப்பொழுது  வாசுதேவனுக்கான இந்தப்பதிலை எழுதுகின்றபோதும்  புலம்பெயரிகளுக்கும் தாயத்தில் உள்ளோருக்கும் இடையில்  எந்தக்காயங்களோ தப்பபிப்பிராயங்களோ ஏற்படக்கூடாது என்ற  ஆகக்கூடிய   பொறுப்புணர்ச்சி மனங்கொள்ளப்பட்டுள்ளது.

சூழ்நிலைகளின் நிமித்தம் வாழ்களம் இங்கும் அங்குமாக  வேறுபட்டிருக்கிறதே என்ற உணர்வு எல்லோருக்கும் வேண்டும்.  ஆனால் இத்தகைய புரிதல் பலருக்கும் இல்லை என்பதை இங்கே  கவனிக்கவேண்டும்.

புலம்பெயர்தல மிகக்கடினமானதுதான். புலம்பெயரும்போது  அனுபவிக்கின்ற அவமானங்களும் வலிகளும் மிக அதிகம்தான்.  புலம்பெயர்ந்து வாழ்கின்ற அந்த வாழ்களத்தில் சந்திக்க வேண்டிய  பிரச்சினைகளும் சாதாரணமனவையல்லத்தான். வாசுதேவன்  சொல்லியுள்ளதையும்விட மிக ஆழமானவை. அந்தபபுரிதல்  நம்மிடம் உண்டு.   இதையெல்லாம் கணக்கிலெடுத்துக்கொண்டே  பரதேசிகளின் பாடலுக்கு அந்த விமரிசனம் எழுதப்பட்டுள்ளது  என்பதை ஏன் வாசுதேவனால் புரிந்துகொள்ளமுடியாமல்போனது.

ஆகவே   இவற்றுக்கப்பால் அடிப்படையில் எங்கோ ஒரு தவறு  நிகழ்ந்திருக்கிறது என்றே கொள்ள முடியும்.  புரிந்து கொள்ளுதலில் நிகழ்கிறது ஏதோ ஒரு சறுக்கல். அல்லது தடை. அல்லது குறை.  உண்மையில் அதற்கான காரணமென்ன.     அந்தக்காரணமோ  அல்லது அந்தக்காரணங்களோ நியாயமானவைதானா.

மனிதனுக்கிருக்கிற பல பிரச்சினைகளில் முக்கியமானவை புரிதல் பற்றியதும் அங்கீகரித்தல் பற்றிதுமே. புரிந்து கொள்ளலில்  ஏற்படுகின்ற தடைகளும் குறைபாடுகளும் தயக்கங்களும்  சிக்கல்களும்தான் பல பிரச்சினைகளுக்குக் காரணம்.  அதேபோலத்தான் அங்கீகரித்தலில் நிகழ்கிற பிரச்சினைகளும் பல  எதிர்விளைவுகளை உருவாக்கிவிடுகின்றன.

பரதேசிகளின் பாடல்கள் பற்றிய என்னுடைய விமர்சனத்தில்  முன்வைக்கப்பட்டிருக்கும் பிரதான புள்ளி புலம்பெயர் இலக்கியம்  அதன் அடுத்த நிலையைக்காண வேண்டும் என்பதும் ஏற்கனவே  வெளிவந்த புலம்பெயரிலக்கியத்தின் சாயலைக்கடந்து இந்தப்  பரதேசிகளின் பாடல்கள் வரவில்லை என்பதுமே. அதாவது  பரதேசிகள் என்ற அடையாளத்துக்கு ஏற்றமாதிரி நவீன தமிழ்ப்பரப்பு இதுவரை அறிந்திராத புதிய பொருட்பரப்பு என்ன என்பதுமே.  ஏனெனில் பரதேசி என்ற சொல்லுணர்த்தும் பொருள் அந்தளவுக்கு  ஆழமானது. இயல்பு வாழ்வை இழந்த அவலத்தின் கொதிநிலையும்  வேரிழந்த மனிதரின் கொந்தளிப்பும் குமுறிவெளிப்படும்  ஆழ்பரப்பையும் நிலைகொள்ளா வாழ்வில் பெறுகின்ற அனுபவ  முதிர்ச்சியின் திரட்சியையும் பரதேசிகளில் காணவிளைந்தேன்.

ஆனால் ஏற்கனவே புலம்பெயர் இலக்கியம் காட்டிய  அவலப்பரப்பிற்குள் அதே சாயல்களுடன்தான் பரதேசிகளின்  பாடல்களும் இருக்கின்றன. அதற்காக இந்த அவலம்  சாதாரணமானது என்றோ பொருட்படுத்தத்தக்கதல்ல என்றோ  அல்ல. அவலம் தொடரும்வரையில் அதனுடைய முறையீடும்  கொந்தளிப்பும் இருந்தே தீரும். ஆனாலும் அதை உணரும்  முறையிலும் உணர்த்தும் அல்லது வெளிப்படுத்தும் விதத்திலும்  மாற்றங்களும் வேறுபாடுகளும் இருக்கும். அப்படி இருக்க  வேண்டும். அது அவசியமானது. படைப்பின் அடிப்படை அதுதானே.  புதிது புதுமை வேறுபாடு வித்தியாசம் என்பதாக.

பரதேசிகளின் பாடல்கள் என்ற அர்த்தப்படுத்தலை ஏன்  இந்தத்தொகுதிக்கு பதிப்பாளர்கள் வழங்க வேண்டியிருந்தது  என்பதிலிருந்தே இதனை விளங்கிக்கொள்ளலாம். ஏற்கனவே  வெளிவந்த புலம்பெயர் இலக்கியத்தொகுப்புகளிலிருந்து இதை  வேறுபடுத்தி அழுத்தம் பெறவைக்கும் அக்கறைதானே அது.  அதேவேளை இதற்குள் இதுவரை வெளிவந்திராத புதிய  பொருட்பரப்பு உண்டென்றும்தானே அர்த்தம். அந்தப்புதிய  பொருட்பரப்பு என்ன என்பதுதான் என்னுடைய கேள்வி.

இப்போது மீண்டும்  மரணத்துள் வாழ்வோம் காலகட்டகவிதைகளை யாராவது எழுதினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இதுவும்.  ஏனெனில் அந்தக்கவிதைகள் தமிழ்ச்சூழலில் ஏற்கனவே   எழுதப்பட்டாயிற்று.  அதற்காக மரணத்துள் வாழும் சூழல்  மாறிவிட்டதாக அர்த்தமில்லை. அது மாறிவிடவும் இல்லை. இந்த  மாறாச்சூழலின் யதார்த்தத்தை எழுதவும் வேண்டும்.  அதேவேளையில் அது முந்திய படைப்புகளின் மறுபிரதியாகவும்  இருக்கக்கூடாது. இதுதான் படைப்புச்சவால். இல்லையெனில்  திரும்பத்திரும்ப ஒவ்வொருவரும் சக்கரத்தைக் கண்டுபிடித்தால்  எப்படி இருக்குமோ அப்படியே இதன் பெறுமதியும் அமைந்து  விடும்.

பரதேசிகளின் பாடல்கள் இதற்குமுன் வந்த புலம்பெயர்  இலக்கியத்திலிருந்தும் அதன் மரபிலிருந்தும் சிந்தனையிலிருந்தும்  எந்த வகையில் வேறுபடுகின்றது. இருபதாண்டுகாலத்துக்கும்  அதிகமான புலம்பெயரிலக்கியத்தின் வளப்பாரம்பரியத்திலிருந்து    பரதேசிகளின் பாடல்கள் வேறுபடுகின்ற இடமென்ன என்ற கேள்வி  தவிர்க்கமுடியாதது. பரதேசிகளின் பாடல்கள் என்ற அடையாளம்  அப்படியொரு நிலையில்தானே உருவாகியிருக்கவும் முடியும்.

குறிப்பாக புலம்பெயரிகள் தொடக்கநிலையில் தனிமனிதர்களாக  இருந்து பட்ட அவலமும் அனுபவமும் ஒருவகை. பின்னர்  குடும்பம் என்ற வகையில் புதிய பண்பாட்டுச்சூழலிலும்  நிலப்பரப்பிலும் வாழ்வை நகர்த்துவது இன்னொரு வகை. அதில்  பிள்ளைகள் என்ற அடுத்த தலைமுறையை எந்த நிலையிலும்  அமைப்பிலும் ஒழுங்கு படுத்துவது என்பது வேறொரு வகை.

இதன்படி பரதேசிகள் என்ற  வகையில் இந்தப்படைப்பாளிகளின்  வாழ்க்கை அமைந்திருக்கிறதா புலம்பெயர் ஈழத்தமிழர்களின்  முதல்தலைமுறை தாய்நிலத்திலிருந்து தான் பிடுங்கியெறியப்பட்ட  கொடுமையில் துவழ்கிறது. இது உண்மையில் கொடுமையானதே.  அதேவேளை அதன் இரண்டாவது மூன்றாவது தலைமுறைகள்  அல்லது அதன்பின்வரும் தலைமுறைகள் இந்த  உணர்வலைகளிலிருந்தும் யதார்த்தத்திலிருந்தும் மெல்ல மெல்ல  கழன்று விலகிச்செல்கின்றன.

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வாழும் ஒரு நண்பர்  பிள்ளைகளின் விடுமுறைக்காலத்தில் தன்னுடைய ஊர்க்கோவில்  திருவிழாவிற்கு வருவதற்காக விடுமுறை எடுத்துக்கொண்டு  குடும்பத்துடன் பயணம் செய்ய ஆயத்தப்படுத்தினார். அப்போது  அவருடைய பிள்ளைகள் கேட்டார்களாம் அப்பா நீங்கள் எதற்காக  ஊருக்குப்போக விரும்புகிறீர்கள் என்று.

ஊரில் எப்படி திருவிழா நடக்கிறது என்று நீங்களும் பார்க்வேணும்.  அங்கே திருவிழாவின்போது எல்லோரும் ஒன்று கூடுவார்கள். பிற  இடங்களில் இருக்கிற ஆட்கள்கூட திருவிழாவின்போது  ஒன்றாகச்சேருவார்கள். அங்கே எல்லோரையும் சந்திக்கலாம்.  அந்தப்பண்பாட்டு நிகழ்வை நீங்கள் கட்டாயம் பார்ப்பது தேவை  என்று தன்னுடைய பிள்ளைகளிடம் அவர் சொல்லியிருக்கிறார்.

ஊரில் தன்னுடன் படித்த நண்பர்கள் பழகியவர்கள் தெரிந்தவர்கள்  எல்லோரையும் ஒன்றாகப்பார்க்கலாம். தான் படித்த பள்ளியிலிருந்து வாழ்ந்த இடங்கள் வரையிலும் மீண்டும் அவற்றை காணலாம்  என்றெல்லாம் அந்த நண்பர் தன்னுடைய பிள்ளைகளுக்கு  விளக்கியிருக்கிறார்.

அதற்கு அந்தப்பிள்ளைகள் சொன்ன பதில்; என்ன தெரியுமா. நீங்களும் அம்மாவும் ஊருக்குப் போய் வாருங்கள். நாங்கள்  ஜேர்மனிக்குப் போகிறோம் என்று.

அந்தப்பிள்ளைகள்  ஜேர்மனியில்தான் பிறந்து வளர்ந்தன. பின்னரே  அவை லண்டனுக்குச் சென்றிருந்தன. ஜேர்மனியில் அவர்கள்  சிறுவயதுக் கல்வியைப் படித்தார்கள். அதனால் அவர்களுக்கு  இளவயதின் ஞாபகங்களும் இளவயதுத் தோழர் தோழியரும்  ஜேர்மனியில்தான் உண்டு. எனவே அவர்கள் தங்களின்  விடுமுறைக்காலத்தில் தாஙகள் முன்னர் வாழ்ந்த இடத்துக்கும்  தங்களின் பால்ய நண்பர்களிடமும்தான் போக விரும்புகிறார்கள்.  இதொன்றும் ஆச்சரியமான சங்கதியல்ல.

அடையாளம் என்பது ஒருவகையில் நினைவுகளின்  தொகுப்புத்தான். பண்பாடும் ஒருவகையில் அப்படித்தான்  தொழிற்படுகிறது. இந்த நினைவுகளைக் கடப்பதுதான சவால்.

பரதேசிகளின் அடையாளம் தமிழ்ச்சூழலிலும் தமிழ் வரலாற்றிலும்  பதியப்பெற்றுள்ள முறையையும் அது எந்தெந்தத்தளங்களினூடாக  ஊற்றெடுத்துள்ளது என்று நான் குறிப்பிட்டுள்தையும் புரியத்தவறி  ஏன் பரதேசிகளைச் சித்தர்களுடன் இணைத்து நான் பார்ப்பதாக  வாசுதேவன் தொடர்பு படுத்துகிறார் என்று தெரியவில்லை.

பரதேசிகளுக்கு வாசுதேவன் சொல்கிற அதே விளக்கத்தையே  என்னுடைய விமரிசனமும் குறிப்பிடுகிறது. காலமும் இடமும்  வெவ்வேறு தன்மைகளை ஏற்படுத்துகிறதே தவிர அடிப்படை  ஒன்றுதான்.

பரதேசிகள் முதிர்நிலையொன்றில் பெறுகின்ற அனுபவம் சித்தர்கள் பெறுகின்ற அனுபவத்துக்கு ஒத்ததாக வருகின்றது. வேர்களை  இழந்த நிலை இருவருக்கும் ஓன்று. ஆனால் அவற்றை இழந்த  விதம் இருவருக்கும் வேறானது. பரதேசியை நிர்ப்பந்தம்  உருவாக்குகிறது. அதுதான் சித்தர்களிலிருந்து பரதேசியை  வேறாக்கிக் காட்டுகிறது. சித்தர்கள் வேர்களை தீர்மானமாக கழற்றி  விடுகிறார்கள்.

இங்கே புலம்பெயரிகள் படுகின்ற அவலத்தையும் அந்தரிப்பையும்  மனங்கொண்டே இந்தக்குறிப்பு எழுதப்படுகிறது. துயரம்  எல்லோருக்கும் பொதுவானது.  உள்ளுரில்  இடம்பெயர்கிறவர்களுக்கும் துயரமுண்டு. புலம் பெயர்ந்து  போகிறவர்களுக்கும் துயரமுண்டு. இரு துயரங்களும் வேறுவேறாக  இருந்தாலும் அடிப்படையில் ஒன்றே. இரண்டிலும் வேர்கள்  பிடுங்கப்படுகின்றன. அல்லது வேர்கள் இல்லை. இன்னும்  சரியாகச்சொன்னால் ஒன்றில் வேர்கள் கழற்றப்படுகின்றன.  மற்றதில் வேர்கள் பிடுங்கப்படுகின்றன.

தாய்நாட்டிற்குள் அகதியாக்கப்படுவோர் சந்திக்கின்ற அவலம்  புலம்பெயரி சந்திக்கினற அவலத்திற்கு நிகரானது. அதேபோல  புலம்பெயரிகள் சந்திக்கின்ற அவலத்திற்கும் அந்தரிப்புக்கும்  சமமானது உள்நாட்டகதி சந்திப்பதும்.    இதில் நாம் வேறுபாட்டைக் காணுவதும் அப்படிக்காட்ட முற்படுவதும் அபத்தமானது.  அதேவேளையில் அது எதிர்விளைவுகளுக்கும்  வழியேற்படுத்திவிடும். தாயகத்தில் வாழ்வோரைவிடவும்  புலம்பெர்ந்தோர் குறைந்தவர்களென்று ஒருபோதும் அர்த்தம்  கொள்ளமுடியாது. துயரம் எல்லோருக்கும் பொதுவானது. இதில்  யாருடைய துயரம் பெரிது என்று விவாதத்தை எழுப்புவது  அபத்தமானது.

உண்மையில் தாய்நாட்டில் இருந்தாலும் சரி  புலம்பெயர்ந்திருந்தாலும்சரி பொதுவாக ஈழத்தமிழர்கள்  அவலத்திலதான் வாழ்கிறார்கள். தாய்நாட்டில் வீட்டைவிட்டு  வெளியேறி மரநிழல்களின் கீழே அகதியாக வாழும் மனிதனும்  வேர்பிடுங்கப்பட்டேயிருக்ககிறான். காணி உறுதியை  பெட்டிக்குள்வைத்துக்கொண்டு மரங்களின் கீழும்  பள்ளிக்கூடத்தாழ்வாரங்களிலும் அலைந்து கொண்டிருப்பவனுக்கு  அவன் உழைத்துக்கட்டிய வீடு ஒன்றில் படையினரால்  இடிக்கப்பட்டிருக்கும். அல்லது படை அதை  பிடித்துவைத்துக்கொண்டு அவனை வெளியேற்றியிருக்கும்.  பக்கத்திலிருக்கும் தன்னுடைய வீட்டுக்கோ அருகிலிருக்கும்  ஊருக்கோ  போகமுடியாமற்தானிருக்கிறான். ஆக இதில் நிலப்பரப்பு  மட்டும்தான் பழகியது. மற்றும்படி வாழ்க்கையின் நெருக்கடியும்  உத்தரவாதமின்மையும் மிகக் கொடியதே.

இந்தநிலைமையென்பது எவ்வளவு துயரத்துக்குரியது.  இதேபொன்றே புலம்பெயர்ந்து போவோரின் பாடுகளுமிருக்கின்றன.  இவற்றை ஒற்றை வரிகளில் விவரித்துவிட முடியாது. இந்தத்  துயரங்களையும் அவலங்களையும் புரிந்து கொள்ளவே முடியும்.

இவ்வாறே இருதரப்பும் தங்களின்  சுதந்திரத்துக்காக  பாடுபடுகின்றன. இதில் யாருடைய பங்களிப்பு பெரியது எவருடைய பங்கேற்பு உயர்வானது என்று  விவாதத்தைக் கிளப்புவது பெரும்  மனநெருக்கடிகளுக்கே வழியேற்படுத்தும்.

வாசுதேவன் ஒன்றாக உணரவேண்டிய பிரச்சினைகளை பிரித்து  இடைவெளிகளை ஏற்படுத்த முனைகிறார். இதனை அவர்  புரியமலே செய்யலாம். ஆனால் இவ்வாறு செய்யப்படுவதன்  விளைவுகள் எதிர்நிலை அம்சங்களையே ஏற்படுத்திவிடும்  என்பதைப்புரிந்து கொள்ளவேண்டும்.

புலம்பெயரிகளின் பிரச்சினை என்பதும் புலம் பெயராதோரின்  பிரச்சினைகள் என்பதும் அடிப்படையில் ஒன்றுதான்.  தன்மைகளில்தான் வேறுபாடு.

வேரிழத்தலின் கொடுமை சாதாரணமானதல்ல. அந்நியச்சூழலில்  தன்னைத்தினமும் இழக்கவேண்டியேற்படும் அவலத்தையும்  இரண்டாம் மூன்றாம் நிலை மனிதராக மற்றவர்கள் கருதி  நடத்தப்படும் போது ஏற்படுகின்ற மனநிலையையும்  புரிந்துகொள்ளப்பட்டே என்னுடைய விமரிசனம்  எழுதப்பட்டிருக்கிறது. இதைப்புரிந்து கொள்ளாமல் கன்னைபிரித்;து  அரசியலாக்க முனைவது வருத்தத்துக்குரியதும்  கண்டனத்துக்குரியதுமாகும்.

பரதேசிகளின் பாடல்கள் ஏற்கனவே நமக்குப்பழக்கப்பட்டுப்போன  புலம்பெயரிகளின் ஆதங்கம் கவலைகளுக்கப்பால் புதிய  அனுபவங்களைத்தரவில்லை என்ற என்னுடைய அவதானம் ஏன்  திசைதிருப்பப்படுகின்றது என்று புரியவில்லை. வாசுதேவனின்  தொலைவில் என்ற தொகுப்பிலுள்ள சில கவிதைகள் எழுப்புகின்ற  அதிர்வுகளளவுக்கு பரதேசிகளின் பாடல்கள் இருக்கவில்லை  என்பதே என்னுடைய அனுபவம். இது ஒன்றும் குற்றமல்ல.  தவறுமல்ல. அவததானத்துக்குரியது என்பதே என்னுடைய    நிலைப்பாடு. அடுத்த கட்டச்செயற்பாட்டை சரியாக  ஒழுங்கமைப்பதற்குரிய கவனத்தை உருவாக்கவேண்டும் என்ற  அக்கறையே இதன் அடிப்படை. பரதேசிகள் எனப்படுவோரின்  பாடல்களை புறக்கணிப்பதோ அலட்சியப்படுத்துவதோ நோக்கமல்ல. இதனை என்னுடைய விமரிசனத்தை ஆழ்ந்து படிக்கும்போது  புரிந்து கொள்ளலாம்.

இந்தப்பரதேசிகளின் பாடல்கள் தொகுப்பில்  பரதேசிகளாகக்காட்டப்பட்டிருக்கும் விதம்குறித்து எழுந்த  கேள்விகளுக்கு அந்தத்தொகுப்பில் எழுதப்பட்டிருக்கும்  பதிப்புரையை ஆதாரப்படுத்தியிருந்தேன்.

வாசுதேவன் புலம்பெயர் இலக்கியத்துக்கான நியாயத்தை உயர்த்தி  எழுப்பப்பார்க்கிறார். புலம்பெயரிகள் புலம்பெயரும்போது படுகின்ற  பாடுகள் வரையில்அவர் அவலங்களைச்சொல்கிறார். அவர்  சொல்வது உண்மைதான். புலம்பெயர்ந்த இடங்களில் சநந்திக்கின்ற  அவலங்களும் கொடுமைகளும் உண்மையே.

இவ்வளவு அவலங்கள் துயரங்கள் கொடுமைகள் நிறைந்ததுதான்  புலம்பெயர் வாழ்வென்று தெரிந்தபோதும் இன்னும் சனங்கள்  புலம்பெயரத்தான் காத்திருக்கிறார்களே தவிர யாரும்  புலத்திலிருந்து அதாவது அந்தக்கொடுமைகளிலிருந்து மீண்டு  பரதேசித்தனத்திலிருந்து விடுபட்டு தாய்நாடு  திரும்பத்தயாரில்லையே. ஏனென்றால் அவல வாழ்க்கைதான் அது  என்றாலும் அதற்கு உத்தரவாதமுண்டு. உயிருக்கு உத்தரவாதம்.  பொருளாதாரத்துக்கு உத்தரவாதம். சிரமங்கள்   அவமானங்கள்தான் என்றாலும் எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் என அதற்கு  நிலைத்தன்மை இருக்கிறது. இது போர் நடக்கும் தாய்நாட்டில்  இல்லை. எவ்வளவுதான் தாய்மண்ணின் சுவை அதிகம் என்றாலும்  யதார்த்தத்தில் அந்தச்சுவையை அனுபவிகக்க எத்தனை பேருக்கு  விருப்பம். எத்தனை பேர் அதற்காக மீண்டும் இப்போது  விரும்பிவரத்தயார். இப்படி யாரும் வரவேண்டும் என்று இங்கே  கேட்கவில்லை. அப்படிக்கேட்பது சுத்த அபத்தமானது. இதை யாரும் தவறாக விளங்கி விடவேண்டாம். அது பல எதிர்விளைவுகளையே  ஏற்படுத்தும் என்பதை மீண்டும் இங்கே நினைவுபடுத்துகிறேன். நான் சொல்லவருவது யதார்த்;தத்தை நாம் கணக்கிலெடுக்காமல் வெறும் கற்பனாவாதத்தில் சிலிர்க்கக்கூடாது. உணர்ச்சி வசப்பட்டு ஆவேசம்  கொண்டுவிடவும் கூடாது.

புலத்திலிருந்து வருகிற காசு தேவை. ஆனால் அவர்கள் புலத்தில்  அதற்காகப் படுகிற சுமைகளையும் வலிகளையும் புரிந்து  கொள்ளத்தான் முடியவில்லையா என்று வாசுதேவன் வருந்துகிறார். அவருடைய வருத்தம்  நியாயமானதே. பரதேசிகளின் சோகங்களை புரிந்துகொள்ள மறுக்கும் மனநிலையுடன் என்னுடைய விமரிசனம் எழுதப்படவில்லை என்பதை வாசுதேவன் அறியவேண்டும்.  போனவர்களைப்புறக்கணிக்கும் போக்கு வளர்வதாகவும்  அவர்கவலைப்படுகிறார். இதெல்லாம் அதீதமான கற்பனை.  இவ்வாறு கருதுவதும் அச்சமடைவதும்   குறகிய மன  வெளிப்பாடுகளே. போனவர்கள் இருப்பவர்கள் என்ற  வேறுபாட்டையோ பிரிப்பையோ தேவையற்றவகையில் வாசுதேவன் கிளப்புகிறார். என்னுடைய கட்டுரை அத்தகைய தொனியை  எந்தச்சந்தர்ப்பத்திலும் கொள்ளவில்லை. அப்படியிருக்கும்போது ஏன் அப்படியொரு வியாக்கியானத்தை வாசுதேவன்  முன்வைக்கமுனைகிறார் என்று தெரியவில்லை.

பரதேசிகளின் பாடல்கள் குறித்து புலத்திலுள்ள ஒருவர்   நான்வைத்த விமரிசனத்தைப்போல முன்வைத்திருந்தால் அது  எப்படி அணுகப்பட்டிருக்கும் என்றொரு நண்பர் கேட்டது இங்கே  குறிப்படத்தக்கது. ஆக விமரிசனத்தில் என்ன கருத்;து  முன்வைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கப்பால் யாரால் அது  சொல்லப்படுகிறது எந்தத்தரப்பால் சொல்லப்படுகிறது என்றே  பார்க்கப்பட்டுள்ளது என்பது புரிகிறது. இது அடிப்படையில்  தவறானதுடன் வீணான அர்ர்த்தமற்ற விளைவுகளுக்குமே  இட்டுச்செல்லும்.

ஒருவருடைய துயரத்தைக் கண்டுகொள்ளாதிருக்கும் உரிமை  யாருக்கும் இல்லை. ஒருவருடைய துயரத்தையும்  பிரச்சினைகளையும் கண்டுகொள்ள மறுத்ததன் விளைவுகள்தான்  மனிதகுலம் சந்தித்திருக்கிற ஆகப்பெரிய பிரச்சினையாகவும்  இருக்கிறது என்ற புரிதல் என்னிடமுண்டு. பரதேசிகள் தங்களின்  தீராச்சுமையை நம்மீது இறக்கிவிட முனைகின்றன  எனக்குறிப்பிடப்படுவது புலத்திலுள்ளோரின்துயரத்தை  தாய்நிலத்திலுள்ளோர் புரிந்துகொள்ளத்தயாராக இல்லை  எனவிளங்கிக்கொள்வதன் அபத்தத்தை என்னவென்பது. நம்மீது  என்பது வாசகன் மீது என்றே பொருள் கொள்ளப் படவேண்டும்.  அந்த வாசகன் ஓர் பொதுத்தளத்துக்குரியவன். அது தமிழகத்தைச்  சேர்ந்த ஒருவராகவும் இருக்கக்கூடும். ஏன் இதனை வாசுதேவனால் புரிந்து கொள்ளமுடியாமற் போனது.   தேவையற்ற விதத்ததில்  அதிகமாக வாசுதேவன் கலவரமடைகிறார் என்றே தோன்றுகிறது.

இனி என்னுடைய முதற் கட்டுரையிலிருந்து தேவை கருதி சில  பகுதிகள் மீளவும் இங்கே இணைக்கப்படுகின்றன. இது மேலதிக  புரிதல்களுக்காகவே. வாசகர்கள் இந்தச்சிரமத்துக்கு மன்னிக்கவும்.
 
நாடோடிப்பாடல்களை நவீன மொழியில் சொல்வதனால்  முகமற்றவர்களின் குரல் எனலாம். முகமற்றவர்கள் உலகெங்கும்  இருக்கின்றார்கள் முகமற்றவர்களின் வரலாறு நீண்டது. இந்த  வணிக உலகத்தில் மட்டும் மனிதன் முகமற்று போகவில்லை.  இதற்கு முன்பு மிக முன்னரே மனிதன் முகமற்றுவிட்டான். மனித  நாகரீகத்தின் வளர்ச்சியின் மறுபக்கம் என்பது முகமற்றுப்போன  மனிதர்களின் வாழ்க்கையே
 
முகமற்றவர்கள் உலகெங்கும் இருக்கின்றார்கள் முகமற்றவர்களின் வரலாறு நீண்டது. இந்த வணிக உலகத்தில் மட்டும் மனிதன்  முகமற்று போகவில்லை. இதற்கு முன்பு மிக முன்னரே மனிதன்  முகமற்றுவிட்டான். மனித நாகரீகத்தின் வளர்ச்சியின் மறுபக்கம்  என்பது முகமற்றுப்போன மனிதர்களின் வாழ்க்கையே
 
முகமற்ற படைப்பாளிகள் எப்போதும் மனதை தருகிறார்கள்  காலத்திற்கும் சமுகத்திற்குமாக. ஆனால், அவர்களுக்கு  தங்களுடைய முகம் அவசியமில்லை. முகத்திற்கான போராட்டம்  அவர்களுக்கு இல்லை. இங்கே ஒரு முரண் உண்டு. உண்மையில்  அவர்களுடைய முகம் சிதைக்கப்பட்டதன் வலிதான் அவர்களின்  படைப்புலகம். முகத்தை இழந்ததின் வலி என்பது மறு நிலையில்  என்ன? முகத்துக்கான எத்தனமல்லவா.... காலத்தின் எல்லா  இடுக்குகளிலும், பரப்புகளிலும் முகமற்ற மனிதர்களின் வலி  நிரம்பிக்கிடக்கின்றது. உலகம் இந்த வலியையும் கொண்டுதான்  சுழல்கிறது.
 
இங்கே 'பரதேசிகளின் பாடல்கள்' எழுதிய காலத்திலேயே  எழுதியவர்கள் இருக்கும் போதே தொகுக்கப்பட்டுள்ளன. இன்னும்  சொல்லப் போனால் இவற்றைத் தொகுக்கும் போது எழுதிய  படைப்பாளிகள் அல்லது பரதேசிகள் தொகுப்புக்கு  அனுசரணையளித்திருக்கிறார்கள். தங்களின் கவிதைகளைக்  கொடுத்திருக்கிறார்கள்.
 
தொகுப்பின் பதிப்புரையில் பதிப்பாளரே இதனை வேறு விதமாக  வெளிப்படுத்துகிறார். 'பரதேசிகளின் பாடல்கள்' என்ற இந்த  வகையான தொகுப்பினை ஆண்டுதோறும் கொண்டுவரும் எண்ணம் உண்டு. இம்முயற்சியில் ஆர்வம்கொண்டவர்கள் தங்கள்  படைப்புக்களை இவ்வாறான தொகுப்பில் இணைத்துக்கொள்ளலாம்.  படைப்புக்களை அனுப்புவோர் 'பரதேசிகளின் பாடல்கள்'  தொகுப்புக்களது என்று தலைப்பிட்டு அனுப்பவேண்டும் என்கிறார்.
நாடோடி மரபினடிப்படையில் இந்தத் தொகுப்பை அணுகும் போது  இந்த அறிவிப்பு சுற்றுச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன்  இந்த தொகுப்பில் வெளிப்படையில் ஒரு புதுமைத்தன்மையும்  அதனடியில் மெல்லிய போலித்தனமும் தெரிகிறது.  செயற்கையாகவே பரதேசிகள் என்று பிரகடனப்படுத்திக்கொள்வது  போன்ற தோற்றம் இது. இது ஒரு வகையான பச்சை குத்துதலே.
 
கவிதைத் தொகுப்பின் புறம் குறித்த விமர்சனங்களுக்கப்பால் அதன் அகம் தீவிர கவனத்திற்குரியது.
 
நாடோடிகளின் குறிப்புகள் வரலாற்றில் முக்கியமானவை.  நாடோடிகள் இரண்டுவகையில் இனங்கணாப்படுகின்றனர்.  ஒருவகையினர் 'பயணிகள்'. மற்றவகையினர் "சராசரியான  வாழ்க்கைக்கு கீழும் மேலுமாக அலைந்து திரிபவர்கள்".
 
சில நாடோடிகள் முகங்களோடுள்ளனர். பலருக்கு முகமில்லை.  ஆனால், பொதுவாகவே நாடோடி என்னும் போது மனதில் விழும்  சித்திரம் அவன் முகமற்றவன் - வேரற்றவன் என்பதே. அது  ஆணோ, பெண்ணோ இதுதான் அடையாளம்.
 
பரதேசி வேரில்லாத மனிதர் அடையாளங்கள் அற்றவர். சமூக,  பண்பாட்டு, வரலாற்று அடையாளங்கள் தீர்மானிக்கின்ற வாழ்வின்  ஒழுங்கமைவுகள் பரதேசிகளைக் கட்டுப்படுத்துவதுமில்லை,  அச்சுறுத்துவதுமில்லை. அடிப்படையில் 'கட்டற்ற சுதந்திரத்தின்  குரல்களாக' பரதேசிகளின் குரல்களை அடையாளம் காணலாம்.  விருப்பு வெறுப்புக்கள் தகர்ந்த வெளியிலேயே பரதேசிகளின் தளம்  இயங்குகிறது. தீர்மானங்களில்லாத வெளி அவர்களுடடையது.
 
'பரதேசிகளின் பாடல்கள்' அல்லது 'நாடோடிகளின் பாடல்கள்' சமூக  அரசியல் பண்பாட்டுத்தளத்தில் 'கலகக்குரல்களாகவே'  எப்போதுமிருக்கின்றன. கட்டற்ற சுதந்திரம் என்பது 'கலகத்துக்கான'  வெளியை பரதேசிகளுக்கு அளிக்கிறது தவிர சமூக  பண்பாட்டுத்தளங்களின் பிணைப்பு இல்லை எனவே, அவற்றின்  நெருக்குவாரங்களும் அச்சுறுத்தல்களும் அவர்களுக்கு இல்லாமற்  போகிறது நாடோடி பண்பாட்டின் மீது எதிர்க்குரலை  கண்டனக்குரலாக வைக்கிறார்கள்.
 
'பரதேசிகளின் பாடல்கள்' காயங்களின் வலியாகவே இருக்கின்றன.  பரதேசி துயரத்தின் அடையாளமாக மட்டும் இருக்கமுடியாது.  பரதேசி தன்னளவில் முழுமைகொண்ட ஒரு உயிரி. சலிப்பு, துயரம், மகிழ்ச்சி, ஏக்கம், தவிப்பு, கனவு, நிறைவு, நிறைவின்மை,  அலட்சியம், அக்கறை எனச்சகலமும் கொண்ட ஒரு யதார்த்தவாதி.  'நாடோடிப்பாடல்களில் இதனை நாம் தெளிவுறக்காணமுடியும்.  சித்தர்களின் கோணம்கூட பரதேசித்தன்மையுடையதே.  சித்தர்களிடத்தில் அனுபவ முதிர்ச்சியின் திரட்சியுண்டு. 'நாடோடிப்  பாடல்களில்' இது இன்னும் ஆழமாகவும், விரிவாகவும் ,  முழுமையை நோக்கியிருக்கிறது. துயரத்தைக்கடப்பதற்கு  நாடோடிப்பாடல்கள் அநேகமாக எள்ளலைக் கையாள்கின்றன. அந்த எள்ளல் நமக்கு அதிர்ச்சியளிப்பது. அது ஒருவகையிலான  ஆற்றுப்படுத்தும் உளவியலே அது. அது ஒருவகையில் மேன்  இலக்கியமாகிறது. அதன் விரிவானதும், ஆழமானதும்,  யாதார்த்தமானதும் அடிப்படையில். தீரமுடியாத தவிப்பையும்  அந்தரிப்பையும் காயத்தையும் வலியையும் கடப்பதற்கு எள்ளலை  ஒரு உபாயமாகவும் மார்க்கமாகவும் கொள்கின்றன  'நாடோடிப்பாடல்கள்.' நாடோடிப்பாடல்களின் செல்வாக்கு மண்டலம் அநேகமாக இத்தன்மையினால் நிர்மாணிக்கப்பட்டதாகவே  தெரிகிறது.
 
இங்கே 'பரதேசிகளின் பாடல்கள்' தீராச்சுமையை நம்மீது  இறக்கிவிட முனைகின்றன. வலியை நம்முகத்தில் அறைகிறமாதிரி பரிமாற இநதப்பரதேசிகள் முனைகின்றனர். இந்தப் பரதேசிகளுக்கு  எல்லாமே உறுத்தலாக இருக்கிறது. எல்லாமே காயமாகவே  படுகின்றன . எல்லாவற்றிலிருந்தும் வலிதெரிகிறது. பரதேதசி  காணாமற் போவது இங்கேதான். அதாவது சமநிலை காணமுடியாது தத்தளிக்கினறபோது பரதேசியால் மெய்யான ஒரு பரதேசி  நிலையை எட்டமுடியாது. என்பதால்தான் இங்கேயுள்ள பரதேசிக்கு  சாதி தீராமுடியாத வலியாகிறது.
 
நாடோடியினது அல்லது பரதேசியின் உலகம் ஒருகட்டத்தில்  எல்லாச்சலனங்களையும் கடந்தவிடுகிறது. வாழ்வின் அனுபவங்கள் சாதாரண மனிதர்களுக்கு கிடைப்பதைப்போல இவர்களுக்கு  இருப்பதில்லை. இவர்களின் வாழ்தளம் முற்றிலும் வேறானது.  ஏறக்குறைய ஒரு கட்டத்தில் அது 'யாதும் ஊரே யாவரும் கேளீர்'  என்ற நிலைக்கு வந்துவிடும்.
 
இவ்வாறு திரட்சிபெற்றுவரும் 'பரதேசிகளின் பாடல்கள்'  முழுமைகொண்டு விடுகின்றன. இது சமரசமல்ல. தோல்வியும்  அல்ல. எல்லை கடத்தல். 'வாழ்வின் அனுபவச்சாரத்தை உறிஞ்சும்  பரதேசி' அதனை நமக்கே மீண்டும் பரிசளித்துவிட்டுப் போகிறார்.  நமது மதிப்பீடுகளையும் எண்ணவுலகையும் தகர்த்துவிட்டு  எளிமையாகக்கடந்து போகிறார் அவர். எதனைப்பற்றியும்,  யாரைப்பற்றியும் பொருட்டில்லாத உலகம் அவருடையது.  ஒருவகையில இந்தச் சமுகத்தால்; புறக்கணிக்கப்பட்ட  வாழ்க்கையும்கூட. இந்தப்புறக்கணிப்பு முதலில் காயத்தையும்  தீராக்கோபத்தையும் ஏற்படுத்தினாலும் தொடர்ந்தும் அது மனதில்  அவ்வாறு தங்கி விடுவதில்லை. அது பரதேசிகளுக்கு வாய்த்த  வாழ்க்கை அமைப்பின்படி உரு சமனிலைக்கு வந்துவிடுகிறது.  இதனால், முழுமையான பரதேசி அல்லது நாடோடியிடம் வன்மம்  இருப்பதில்லை. இந்த வன்மத்தைக் கடக்கவே பரதேசி எள்ளலை  முன்னிலைப்படுத்துகிறார். வன்மம் ஒன்றைப் பெயர்ப்படுத்துவதால்  வருவது. ஒருவரை ஒருதரப்பை பொருட்டெனக்கருதுவதால்  ஏற்படுவது. இதனால், இந்தப் புதிய பரதேசிகளின் பாடல்களில்  வன்மம் கொப்பளிக்கிறது. இந்தவன்மம் அடிப்படையில் அவர்களை  'பரதேசிகளாக்காது' மீண்டும் மீண்டும் மரபுகள் மற்றும் சமுக  மதிப்புகளின் எல்லையினுள் நின்று தத்தளிக்கும் மனிதர்களின்  இயலாமைக்குள்ளேயே முழக்கமிடுவன
 
பரதேசி என்றும் தன்னை பரதேசியாக உணர்ந்தகொள்வதோ  பிரகடனப்படுத்துவதோ இல்லை. அடையாளம் இல்லாதவரே  பரதேசி. பிறகெப்படி பரதேசிக்கு அடையாளம் வரும். ஏதொன்று  பற்றிய பிரக்ஞையும் பரதேசியாக்காது. ஒரு அடையாளம்,  அடையாளத்திற்கான விழுமியம் வந்து அவர் வாழத்  தொடங்கும்போது பரதேசி என்ற அர்த்தம் தொலைந்து போகிறது.  ஏதொன்றின்படியும் வாழமுடியாத அவலநிலை. அந்தரிப்பே  பரதேசியின் முதற்படிமம். பிறகு அந்த அந்தரிப்பைக்கடந்த  சகலதும் ஒன்றேயென்றதும் அதற்குமப்பால் எந்த நிலையிலும்  தளம்பாத சமநிலையோடிருக்கும் தன்மையும்தான் பரதேசியின்  முழுஅடையளமாகிறது.
 
எந்த அந்தரிப்பும் ஒருகட்டத்ததில் இல்லாமற்போய்விடுகிறது.  அதுவொரு இயல்பாகி அந்தரிப்பின்றி அது முழுமைக்கு  சென்றுவிடுகிறது. அந்த முழுமையின் ஞானம் பெரியது. அது  வாழ்வை அதன் முழுப் பரிமாணங்களில் வைத்து  விசாரணைக்குப்படுத்துகிறது.அந்த ஞானம் எல்லாவற்றையும் மிக  இலகுவாக கடந்துபோய் விடுகிறது.
 
பரதேசிக்கு நிறங்கள் தெரியாது. நிறங்கள் தெரியவரும்போது  அடையாளம் பிறக்கிறது. பரதேசியை நாம்தான்  வேறுபடுத்துகின்றோம். அடையாளம் காணுகின்றோம்.  தனிமைப்படுத்துகின்றோம்.
 
பரதேசிக்கோ எதுவுமில்லை. அதனால்தான் அந்தவாழ்வை அவரால்  அப்படி வாழமுடிகிறது. அப்படிப் பரதேசிகள் வாழ்வதற்கு அவர்கள்  முதலில் நினைவை இழக்கிறார்கள். இந்த நினைவிழப்பின் போது  அடையாளங்களை இழந்துவிடுதல் நிகழ்ந்துவிடுகிறது. இழத்தலும்,  தொலைத்தலும்தான் பரதேசியின் இயல்பு, அது ஒரு சமூகத்தில்  சமூக நிர்ப்பந்தத்தால் நிகழ்கிறது. இன்னொரு இது விதத்தில்  மனமுதிர்ச்சியால் விளைகிறது. பரதேசியிடம் துக்கமில்லை.  துக்கத்தை ஒரு பொருட்டென அவர்கள் கருதுவதில்லை. எதுவும்  பெரிதாக தோன்றாதவரிடம் எப்படித்துக்கம் பிறக்கும்? அதனால்  வன்மமோ வலியோ ஏற்படுதில்லை. இதனால் கட்டுகள்,  எதிர்பார்ப்புகள் எதுவுமிருப்பதில்லை. சமூக விழுமியங்கள் குறித்த  பதிவுகள் கட்டுப்பாடுகள் எல்லாவற்றையும் கடந்துவிட்டதனால்  அவை குறித்த மனப்பதிவுகளோ துயர்களோ இல்லை. குடும்பம்  குறித்த கவலைகளும் இல்லாமலும் போய்விடுகிறது.  அப்படிக்குடும்பம் இருந்தாலும் அந்தக்குடும்பமும் பரதேசி  நிலையிலேயே ஒரு வாழ்கிறது. வாழ்ந்து கழிகிறது.
 
ஆனால், அதில் பல இடறுப்பாடுகள் இருக்கின்றன. அதனால்,  அதற்குள் வலியும் சீழும் நிரம்பி இருப்பதுண்டு என்ற போதும்  அவை பரதேசிகளுக்கு உறுத்தலாக இருப்பதில்லை.
 
நான் பரதேசிகளின் பாடல்களில் ஜிப்சிகளின் கலவையான  பரதேசிகளையே எதிர்பார்த்தேன். மேற்கில் பரதேசிகளான  புலம்பெயரிகள் அங்குள்ள ஜிப்சிகளின் கலவையாகுதல்  தவிர்க்கமுடியாது போகுதல் சாத்தியம். அதனையே எதிர்பார்த்தேன்.  அது தவிர்க்கமுடியாத ஒரு நிலை.
 
இருத்தல் சவாலான போது அதனை பரதேசிகள் இன்னொரு  வாழ்நிலையினூடாக கடந்துபோகிறார்கள். தீர்மானமின்றியே  பரதேசிகளின் வாழ்க்கை நிகழ்கிறது. தீர்மானங்களில்லாத  முறைமை அல்லது பயணம் எத்தனை இனியதும்,  சுதந்திரமானதும். அது எல்லோருக்கும் எளிதில் வாய்க்காதது.
பரதேசிகளின் இதயம் பேரியற்கையுடன் இணைந்தது. இயற்கைக்கு  என்றும் முதுமை இல்லை. வானம் என்றும் புதியதாகவே  இருக்கிறது. கூடவே அழகாகவும். கடலும் அப்படித்தான்.  மலைகளும், நதிகளும் - சூரியனும், நிலவுமகூட. இவை ஒன்றுடன்  ஒன்று இணையும் போதும் அழகு. விலகும்போதும் அழகு. எந்த  நிலையிலும் அழகு என்பதே இயற்கையின் புதுமை. பரதேசிகளின்  இதயமும் அப்படித்தான். அது எந்தநிலையிலும் தளம்பாதது.  நிறைந்தது. முழுமையுடையது. அத்துடன் அது ஆதிமனிதனின்  மனக் கூறுகளையுடையது. திரிதல் என்பதே அதன் அடிப்படை.  கட்டற்றுத்திரிதல் அது. ஆதிமனிதனில் திரிதல் அல்லது அலைதல்  என்பது ஒரு பொது நிலையும் யதார்ததமும். அத்துடன்  இயல்பானதும்கூட. அலைதல்தான் ஆதிவாழ்க்கை. அந்த  அலைதல்தான் பரதேசியின் வாழ்க்கையும். ஆக பரதேசியின் மனம்  ஆதிமனம். அந்த ஆதிமனதின் சுவடுகள் இந்தப்பரதேசிகளின்  பாடல்களில் உண்டா? அது நவீன வாழ்நிலைகளோடும்  வாழ்களத்தோடும்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)
 


     இதுவரை:  24712179 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5499 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com