அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 25 July 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 32 arrow எட்டுத்திக்கும் மதயானைகள் - 03
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


எட்டுத்திக்கும் மதயானைகள் - 03   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கி.பி.அரவிந்தன்  
Monday, 12 March 2007

03.

புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களுடைய நினைவுகளை உறைந்த நிலையில்தான் வைத்திருக்கிறார்கள். தங்களுடைய தாயகத்தை எங்கிருந்தாலும் புனிதமாகக் கருதுகிறார்கள். தங்களுடைய சொந்த நாட்டின் தாக்கத்தை அது மனதில் எழுப்பும் ஆதங்கத்தை பல வழிகளில் வெளிப்படுத்துகிறார்கள். எப்போதும் கலாசாரத் தேடல், அடையாளச் சிக்கல் அவர்களை அலைக்கழிக்கின்றது. கொதிக்கும் வெயிலில் நிழலைத் தேடுவது போல அவர்களுடைய தேடல் நீடிக்கிறது.

இந்த தேடலுடனேயே இலங்கைத் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் வேர்விடத் தொடங்கி விட்டார்கள் என்பதும் பதிவு செய் யப்பட வேண்டியதே. தற்போது இலங்கைத்தமிழர்கள் தாம் வாழும் நாட்டின் அரசியலில் நுழையத் தொடங்கி உள்ளனர். நோர்வே, டென்மார்க், இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் உள்ள அரசியல் கட்சிகளில் உறுப்புரிமை பெற்றுள்ளதுடன் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளனர். பல நாடுகளில் குடியுரிமை பெற்றுவிட்ட நிலையில் அந்தந்த நாடுகளில் தேர்தல்களில் வாக்கு வங்கிகளாகவும் மாறத் தொடங்கி உள்ளனர். பிரான்சில் பாண்டிச்சேரி தமிழர் உள்ளாட்சி தேர்தலில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றுள்ளனர். இலங்கைத் தமிழர் இன்னும் அவ்வகை செயல்பாடுகளில் இறங்கவில்லை ஆனால் அரசியல் கட்சிகளில் உறுப்புரிமை பெற்றுள்ளனர்.

புலம்பெயர்ந்த நாடுகளிலேயே பிறந்து, வளர்ந்து அந்த மொழியையே முதன்மொழியாகக் கொண்டு கல்வியை பெற்ற, சிந்தனா முறைமை கொண்ட ஒரு தமிழ்வழி மூலச் சமூகம் உருப் பெறத் தொடங்கிவிட்டது. இது பின்மொழி அறிவுகொண்ட சமூகமாக (ஆங்கிலம், பிரெஞ், யேர்மன், டச், இத்தாலியன், டெனிஷ், நொஸ்க்,....) அதனை மாற்றியமைத்துள்ளது. ஒரு சமூகத்தில் சில கல்வியாளர்கள் பன்மொழி அறிஞர்களாக விளங்குவர். ஆனால் ஒரு சமூகம் பன்மொழி சமூகமாக அடையாளம் காண்பது அரிதானதொன்றாகும். ஆனால் இலங்ைகத் தமிழ் சமூகத்திற்கு அது வாய்திருக்கின்றது. அத்துடன், தாயகங்களில் கல்வித்திட்டத்தில் சாத்தியபடாத எத்தனையோ துறைசார் கல்வியையும், உயர் கல்வியையும் பயிலும் வாய்ப்பும் கிட்டியுள்ளது. பிரான்சின் பள்ளி ஆசிரியர் சமூகமானது இலங்கைத் தமிழ் சமூகத்தை ஆச்சரியத்துடனேயே நோக்குகின்றது. ஏனெனில் உதிரித் தொழிலாளர்களாக அடையாளம் காணப்பட்ட ஒரு முதல் தலைமுறையின் சந்ததியினர் வகுப்புகளின் முதல் பத்து மாணவர்களுள் இடம்பெறுகின்றனர் என்பது அவர்களுக்கு ஆச்சரியமளிக்கின்றது.

அத்துடன் பல்தேசியத்தாருடனும், பல்தேசிய கலாசாரத்துடனும் (பல்தேசிய ஆபிரிக்கருடனும், பல்தேசிய லத்தின் அமெரிக்கருடனும், சீன-யப்பானியருடனும்) வாழவும் பழகவும் அவற்றை அறியவும் இலங்கைத் தமிழ் சமூகத்திற்கு வாய்திருக்கின்றது என்பதும் முக்கியமானதாகும். இவை தமிழர் தம் மொழி, கலை -இலக்கிய, பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்கவும் மீள்கட்டமைப்பு செய்யவும், ஊக்குவிக்கின்றன. உதாரணத்திற்கு பிரான்சில் வழங்கும் பிரெஞ் மொழியை விட பிரான்சின் குடியேற்ற நாடான கியுபெக்(கனடா)கில் சுத்தமாகவும் செழுமையுடனும் உள்ளதாகவும் கூறுகின்றார்கள். சர்வதேச புகழ் பெற்ற பிரெஞ் பாடகர்களில் பலர் கியுபெக் பிரெஞ்சியர்கள் என்பது கவனிக்கத் தக்கது. இதனால்தான் தாயகங்களில் இருந்து சுற்றுலாவாக வந்து செல்பவர்கள் புலம்பெயர்ந்த தமிழரிடையே வெளிப்படும் மொழி, பண்பாட்டு வீரியம் கண்டு வியப்புறுகின்றனர்.

புலம்பெயர்ந்து வாழும் இச்சமூகத்திற்கு தமிழ் மொழி இணைப்பு மொழியாக மாறி நிற்கின்றது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. ஏனெனில், ஒரே குடும்பத்தில் உள்ள சகோதரர்கள் பலமொழி வலயங்களில் சிதறி வாழ்கின்றனர். இன்று தங்கள் இருப்பை உறுதிப்படுத்தும் குடியுரிமை பெற்ற நிலையில் அச்சகோதரர்களின் குடும்பங்கள் குழந்தைகுட்டிகளாக இணையும்போது தமிழ்தான் இணைப்பு பாத்திரத்தை வகிக்கவேண்டியதாகின்றது. அத்துடன், இங்கு வாழத் தலைப்பட்ட சமூகத்தின் மூத்தோர் தாயகத்தில் வேற்றுமொழி அறிவின்றி வாழ்வதால் பேரக்குழந்தைகளுக்கும் அவர்களுக்கும் இடையேயான இணைப்புக்கு தமிழ் தேவையாகின்றது.

பிரான்சில் தமிழ்ச் சோலை என்னும் பொதுப்பெயரில் ஏறத்தாழ 50 தமிழ்ப் பள்ளிகள் 3,000 மாணவர்களுடன் இயங்குகின்றன. இதனுடன் இணையாமலும் தனித்தும் வேறு பள்ளிகளும் நடைபெறுகின்றன. தமிழ்ச்சோலைப் பள்ளிகளுக்கு பொதுவான பாடத்திட்டம் வகுக்கப்பட்டிருக்கின்றது. அது சர்வதேச அளவிலான தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்திட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றது. சர்வதேச அளவிலான பாடத்திட்டதிற்கு அமைய வெளியிடப்படும் பாடப்புத்தகங்களே தமிழ்ச்சோலையில் பயன்படுத்தப்படுகின்றன. அதன்படி ஆண்டுதோறும் தமிழ்த்திறன் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பிரான்சில் 2006ம் ஆண்டுக்கான தமிழ்திறன் தேர்வில் 2,200 பிள்ளைகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு ஒரு மிகப்பெரிய மண்டபத்தில் ஒரே நாளில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வகைத் தமிழ்த்திறன் தேர்வு உலகளாவிய அளவில் நடத்தப்படுகின்றது.

இதேபோன்று, இன்னொரு நிகழ்வு தமிழர் விளையாட்டு விழா. இதுவும் ஆண்டுதோறும் பாரிசில் நடத்தப்படுகின்றது. ஒன்பதாவது ஆண்டு விளையாட்டு விழாவாக 2006ல் இது இடம்பெற்றது. ஏறத்தாழ பதினைந்தாயிரம் பேர் வரையில் கலந்து களிகொள்ளும் முழுநாள் நிகழ்வாக நடைபெற்றது. இதில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுடன், பாரம்பரிய உணவு, ஆடை அணிதல் என்பவைகளுடன் ஒரு களியாட்ட விழாவாக நடைபெறுகின்றது.

இதைவிட, தமிழர்களிடையேயான விளையாட்டுக் கழகங்கள் மெய்வல்லுநர் போட்டிகள், உதைபந்தாட்டம், கிரிகெட், உள்ளரங்க விளையாட்டுக்கள் என பல்வேறு வகை விளையாட்டுப் போட்டிகளை நடாத்துகின்றன.

இந்தப் பின்னணியிலேயே பிரான்சுக்குப் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழரின் கலை இலக்கிய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வகையான கலை இலக்கிய முன்முயற்சிகள் ஏனைய நாடுகளை விடவும் பிரான்சிலேயே கால்கோளிடப்படுவதுடன் உயிர்ப்பாகவும் இயங்குகின்றன. புலம்பெயர் இலக்கியம் ஈழத்து இலக்கிய நீட்சியாக அல்லது போர் இலக்கியச் சாயலாகவே காணப்படுகின்றது. இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஏனெனில், இலங்கைத்தீவின் போர் அரசியலே புலம்பெயர் வாழ்வின் இயங்கு சக்தியாக இருக்கின்றது. அதனால்தான் போலும் புலம்பெயர் இலக்கிய புனைவிற்கான வடிவத்திலும் ஈழத்தைப்போல் கவிதையே முதன்மையாக உள்ளது. கதை, நாவல், நாடகம் என்பதெல்லாம் கவிதைக்கு பின்னால்தான் நிற்கின்றன. கடந்த காலங்களில் இலங்கைத் தமிழர்களான இரண்டு இளம் ஓவியர்களின் ஓவியக் கண்காட்சிகள் நடைபெற்றன. இந்த ஆண்டும் இரண்டாவது தடவையாக காமதேனு என்னும் தலைப்பில் கண்காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்த ஆண்டு தொலைவில், பரதேசிகளின் பாடல்கள் என்னும் இரண்டு கவிதை நூல்களும், புலமும் புறமும் என்னும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்திருந்தன.

எரிமலை, உயிர்நிழல், அலையோசை ஆகிய சஞ்சிகைகளும், ஈழநாடு, ஈழமுரசு(இலவசம்) என்னும் வாரப்பத்திரிகைகளும் இங்கே தற்போது வெளிவருகின்றன. `ரிரிஎன்' என்னும் இருபத்துநான்கு மணிநேர தொலைக்காட்சி பாரிசிலிருந்து ஒளிபரப்பாகின்றது.

தற்போது கலை வெளிப்பாட்டு முயற்சியாக சினிமாவின் பக்கம் தங்களின் கவனத்தை திருப்ப உள்ளனர். ஆண்டுதோறும் குறும்பட விழாக்களும் குறும்பட தெரிவுப் போட்டிகளும் நடாத்தப்படுகின்றன. முழுநீள திரைப்பட முயற்சிகளும் நடைபெறுகின்றன. இந்த ஆண்டில் இரண்டு குறும்பட தெரிவுப்போட்டிகள் நடைபெற்றன. ஒன்று `ரிரிஎன்'தொலைக்காட்சி நிறுவனத்தாலும், மற்றது நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகத்தின் கலாசாரப் பரிவினராலும் நடாத்தப்பட்டன. இப்போட்டிகளில் வகுப்பு, கானல் ஆகியன சிறந்த படங்களாக தெரிவாகின.

அத்துடன், மேலைத்தேய நடனம் என்பதும் ஒரு முக்கிய கலையாக வீச்சுடன் வெளிப்படத் தொடங்கி உள்ளது. அதில் இளைஞர் ஆர்வம் அதிகரித்திருப்பதுடன் அதனை முறையான கல்வியாகவும் கற்கத் தொடங்கி உள்ளனர். இதற்கென ஆண்டுதோறும் பிரான்சில் பனிவெளி ஆடல் என்னும் தலைப்பிலும், சுவிசில் அக்கினி தாண்டவம் என்ற தலைப்பிலும் போட்டிகள் நடாத்தப்படுகின்றன.

இலங்கைத் தமிழர்கள் இலங்கையை விட்டு பெருமளவில் வெளியேற வேண்டுமென்பதே இலங்கை அரசினதும், பெருந்தேசியவாதிகளிதும் பெரு விருப்பமாக இருந்தது. அதனால் அவர்கள் மறைமுகமாக வெளிநாடு செல்வதை ஊக்குவித்தார்கள். இதனால் இலங்கைத் தமிழ்ச் சமூக கட்டமைப்பு சீரழியும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் இன்று கால் நூற்றாண்டு கழிந்த நிலையில் அவர்களின் எதிர்பார்ப்பு தலைகீழ் மாற்றத்தை கொண்டிருப்பதைக் கண்டு திகைத்து நிற்கின்றனர். எது பலவீனமாக்கும் என்று கருதப்பட்டதோ அதுவே பலமாக மாறி உலகத் தமிழினமாக எட்டுத்திக்கும் மதயானைகளாக நிமிர்ந்து நிற்கின்றது. 
(சென்னையில் ஆழிப்பதிப்பகம் வெளியிட்ட 'தமிழ்கொடி-2006' ஆண்டுத் தொகுப்பில் வெளிவந்த இக்கட்டுரை பின்னர் கொழும்பில் இருந்து வெளிவரும் தினக்குரல் வாவெளியீட்டில் மறுபிரசுரமாகியது.)

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(2 posts)


மேலும் சில...
எட்டுத்திக்கும் மதயானைகள் - 01
எட்டுத்திக்கும் மதயானைகள் -02

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 25 Jul 2024 01:52
TamilNet
HASH(0x55f31c3c7b28)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 25 Jul 2024 01:52


புதினம்
Thu, 25 Jul 2024 01:52
     இதுவரை:  25413438 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 9427 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com