அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


குமாரபுரம் - 02   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Wednesday, 01 November 2006

2.

சித்திரா கிடுகு இழைத்துக் கொண்டிருந்தாள். பின்னுவதைச் சற்று நிறுத்திவிட்டு தென்னை மரங்களுக்கப்பால் விரிந்து கிடந்த நந்திக் கடல்வெளியை  நோக்கினாள். பச்சசைப் பசேலெனப் பயிரசையும் வயல்வெளிகளின் நடுவே நந்திக்கடல் இளநீலமாய்ப் பரந்து கிடந்தது.

'இந்நேரம் பெத்தாச்சி மாமி வீட்டிலே பேசிக் கொண்டிருப்பா.. மாமா, மாமி என்னதான் சொன்னார்களோ? அத்தானும் லீவில் வந்து நிற்கிறார் அல்லவா?...

இவ்வாறு அவள் நினைத்தபோது நாணத்தினால் சித்திரை நிலவுபோன்ற அவளுடைய முகத்தில் சிவப்புப் படர்ந்தது. இதயத்தினுள்ளே பொங்கியெழுந்த உவகை உடலெங்கும் பரவியது. சட்டென்று தலையைக் குனிந்துகொண்டு மளமளவெனக் கிடுகைப் பின்ன ஆரம்பித்தாள்.

நீண்டு சிவந்த அவளின் அழகிய விரல்கள் நீரில் ஊறிக்கிடந்த தென்னோலைகளை நீவியெடுத்துப் பரபரப்புடன் பின்னிக் கொண்டிருந்தன. தென்னை மட்டையின் ஓலைகள் மிகவும் நெருக்கமாக இருந்ததினால், ஒரு ஓலையைக் கள்ளோலையாகக் கீழே விட்டுத் தொடர்ந்து இழைக்கத் தொடங்கினாள்.

'கள்ளோலை!"

இச் சொல்லைச் சித்திராவின் வாய் மெதுவாக முணுமுணுத்தது. அந்தச் சொல்லை வெளிப்படையாகக் கூறுவதில் ஏதோ ஒரு தயக்கம். அது அவளுக்கு மட்டும் தெரிந்த இரகசியம்....!

நான்கு மாதங்களுக்கு முன் அவள் தன்னந்தனியே தங்கள் தென்னந்தோப்பின் கோடியில் நின்று கொண்டிருந்தபோது அவன் வந்தான். சிறு வயதிலே ஒன்றாக விளையாடியவர்கள்தான். சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டை பிடித்துக் கொண்டவர்கள்தான். ஆனால், அவள் பருவமடைந்த பின் அவர்களுக்கு ஒருவரை ஒருவர் சந்திக்கவோ, பேசிக்கொள்ளவோ சந்தர்ப்பங்கள் ஏற்படவில்லை. விடுமுறையில் வீட்டுக்கு வந்தவன் அவளைத் தேடித் தோட்டத்துக்கு வந்தான். வீதியோரமாகச் சைக்கிளை நிறுத்தியபடியே 'இஞ்சை வா!" என்று அழைப்பது போன்று சைகை காட்டினான்.

அவளின் நெஞ்சு படபடத்தது. கைகள் வியர்த்தன. நாணமும், பயமும், மகிழ்ச்சியுமாய் அவள் வேலியோரம் சென்றபோது, அவன் ஒரு கடதாசித் துண்டைக் கையில் கொடுத்துவிட்டு, சட்டென்று சைக்கிளில் தொத்திக்கொண்டு ஓடி மறைந்துவிட்டான்.

அவன் கொடுத்த 'கள்ளோலை" வியர்வை கசியும் அவள் கையினுள்ளே நசுங்கியது. ஒரு பற்றை மறைவில் அவள் சென்று அதைக் கவனமாகப் பிரித்துப் படித்தபோது, 'இன்றிரவு தோப்பின் பின்பக்கத்தில் நிற்கும் புன்னை மரத்தடியில் காத்திரு" என்றிருந்தது.


அதைப் படித்ததுமுதல் சித்திராவுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. ஒரு சமயம் அச்சம்! மறுசமயம் வெட்கம்!! இருப்பினும் வீட்டில் தங்கைகளும், பெத்தாச்சியும் நித்திரையானபின், மெதுவாக எழுந்து, நிலவில் வட்டக் குடையாக விரிந்து கிடந்த தென்னை நிழல்களில் மறைந்து மறைந்து சென்று புன்னை மரத்தடிக்கு வந்தபோது, அவன் ஏற்கெனவே அங்கு காத்திருந்தான்.

அப்புறம்... முதலில் தயக்கம்... பின்பு மயக்கம்... இன்னும் என்னென்னவோ இன்பக் கற்பனைகள்... எதிர்காலம் பற்றிய தீர்க்கமான முடிவுகள்.... காத்திருப்பேன்.... கைவிடேன்.... என்ற சத்தியங்கள்.


புன்னை மரத்தில் கொட்டமடித்துக் கொண்டிருந்த பழந்தின்னி வெளவால்கள் கறுத்தான்மடு மருதமரங்களை நாடி ஒவ்வொன்றாகப் புறப்படும் வைகறைப் பொழுதிலே அவள் அவனிடமிருந்து பிரிய மனமின்றிப் பிரிந்து சென்றான்.

இப்படிப் பல சந்திப்புக்கள். ஒருநாள் அவள் சந்தடியின்றி இன்பக் கிறக்கத்திலே வீட்டிற்குள் நுழையும் சமயத்தில் அங்கு அவளுக்காகவே காத்து நின்ற பெத்தாச்சியைக் கண்டு விக்கித்துப் போனாள்.

பெத்தாச்சி அதிகம் பேசவில்லை. 'மோனை! உன்ரை மாமன் குலசேகரத்தான் அண்டைக்குச் செய்த கொடுமையாலைதான் இந்தக் குடும்பம் இவ்வளவு சீரழிஞ்சு நிக்குது! கொத்தானுக்கு உன்னிலை விருப்பமெண்டால் நான் போய் அவன்ரை தேப்பனோடை கதைச்சு ஒழுங்கு பண்ணிறன்... ஆனா இனிமேல் நீ அவனைச் சந்திக்கவோ கதைக்கவோ கூடாது!.....உனக்கு அடுத்து நாலு பொட்டையள் இருக்குதுகள்!.... நாங்களும் மானம் ரோசத்தோடை இருக்கோணும்!..."

எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றிப் பெத்தாச்சி அமைதியாக, ஆனால் ஆணித்தரமாகக் கூறிய இந்த வார்த்தைகளைக் கேட்டபோது சித்திரா மௌனமாகத் தலையை தலையை அசைத்துவிட்டு உள்ளே போய்ப் படுத்துக் கொண்டாள்.

ஆனால், 'அத்தான் மிகவும் நல்லவர்!.... அவர் என்னை ஒருபோதும் கைவிடார்!" என்ற அசைக்க முடியாத நம்பிக்கை சித்திராவுக்கு இருந்தது. அதன்பின் அவள் பெத்தாச்சியின் ஆணையை என்றும் மீறாவிட்டாலும் அந்தச் சந்திப்புக்களின் நெருக்கத்தையும், முக்கியத்துவத்தையும் மறந்து போகவில்லை.

பின்னி முடித்துவிட்ட கிடுகை வெய்யில் விழும் இடத்தில் காயப் போட்டுவிட்டுத் திரும்பிய அவள் ஒருதடவை தங்களுடைய வளவைப் பார்த்துக் கொண்டாள்.

இருபத்தைந்து ஏக்கர் பரப்பளவில் நந்திக் கடலோரமாக, வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் கோவிலுக்கும் முல்லைத்தீவு வீதிக்கும் இடையே பரந்து கிடந்தது அந்த 'வன்னியா வளவு"! அந்தப் பிரதேசமெங்குமே ஒருகாலம் மரியாதை கலந்த பயத்தை ஏற்படுத்திய ஒரு சொல்!

ஆனால் இன்றோ? ...... சோடையாகிவிட்ட நெட்டைத் தென்னைகள் மத்தியில் அந்தப் பெரிய வீடு, ஒரு நூற்றுக்கும் அதிகமான ஆண்டுகளைக் கண்டுவிட்ட களைப்பில், ஒரு கிழட்டு யானையைப்போல, சுவர்களெல்லாம் பூச்சுக் கொட்டிப்போக, ஆங்காங்கே இடிந்தும் உடைந்தும் கிடந்தது.

'எத்தனை சுரைக் குடுவைகள் நிறையத் தேன்!.... எத்தனை மூடைச் சீனி!.... எத்தனை ஆயிரம் முட்டையள்!"... அத்தனையும் சேர்த்துக் குழைத்துக் கட்டியதாம் அந்த வீடு! பெத்தாச்சி இவ்வாறு அடிக்கடி சொல்லி அங்கலாய்த்துக் கொள்வாள்.

முன்னுக்குப் போட்டிக்கோவும் விறாந்தையும், நடுவே நாற்சாரம், பின்னுக்குப் பெரிய பண்டகசாலை, அடுக்களை, அவற்றுக்குப் பின்னே மாட்டுக் கொட்டகை, குதிரை லாயம், வில்வண்டில் விடுவதெற்கனெப் பிரத்தியேக மால்! இத்தனையும் இன்றும் இருந்தன. ஆனால் பழைய வனப்பும், திமிரும் கலந்த கோலத்தில் அல்ல!

சித்திராவினுடைய பார்வை வீட்டையும், வளவையும் ஒரு தடவை தழுவி விட்டு, தென்னோலைகளை ஊறப்போடும் துரவுக்கு அண்மையில் வரிசையாக அமர்ந்து கிடுகிழைத்துக் கொண்டிருந்த தன்னுடைய சகோதரிகளில் வாஞ்சையோடு பதிந்தது.

மாரிகாலத்தில் தமக்குரிய சீதோஷ்ண நிலையை நாடி ஈழத்தின் நந்திக்கடல் வாவியை நோக்கி வரும் குருகினம் போல் அழகாக, வரிசையாக, ஒரு இனமாக அமர்ந்திருந்த தன் நான்கு சகோதரிகளையும் அவள் ஆற அமரப் பார்த்தாள்.

அவளுக்கு இரண்டு வயது குறைந்தவளான நிர்மலா, அடுத்தவளான பதினெட்டு வயதுப் பவளம், இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் பருவமடைந்த விஜயா, பத்து வயதாகியும் சகோதரிகளுடைய அன்பில் குழந்தையாகவே இருக்கும் கடைக்குட்டி செலவம்!

அவளுடன் சேர்த்து ஐந்து பெண்கள்! ஒரே அச்சில் வார்த்தெடுத்ததுபோல் உருவ ஒற்றுமை! அத்தனை பெண்களும் அந்தப் பழைய மாளிகையின் இளவரசிகள்! ஆம், பெயரளவில் ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு ராணிதான்!

'சித்திராணி, நிர்மலராணி....."

சித்திரா சிரித்துக் கொண்டாள். 'ஐந்து பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டியாவானாம்!" நாங்கள் ஐந்து பேரும் பெண்களாய்ப் பிறந்தது விட்டதாலா அப்பா ஆண்டியானார்!

முல்லைத்தீவுப் பகுதியெங்குமே வியாபித்துக் கிடந்த பொன்விளையும் நிலங்கள், இறுங்குபோலக் காய்க்கும் இளந்தென்னைகள் நிறைந்த தோட்டங்கள், எல்லையற்ற குடிநிலக் காணிகள், பட்டிபட்டியாகக் கறவையினங்கள்... காளைகள்.... இவை அத்தனையுமே ஐந்து பெண்கள் பிறந்ததாலா அழிந்து கெட்டன?

சித்திரா மீண்டும் சிரித்துக் கொண்டாள். வேதனையும், ஆத்திரமும் இழையோடிய மென்சிரிப்பு.

அப்பாவை நினைக்கும் போதெல்லாம் அவளுடைய நெஞ்சில் பெருமையும் அதேசமயம் வேதனையும் குமையும்.

ஆறடி உயரம். ஆஜானுபாவான தோற்றம். 'அப்பா" என்றதுமே அவரைச் சதா சூழ்ந்திருக்கும் ஒரு மணம் இப்போதும் மணப்பது போன்றதொரு பிரமை அவளுக்கு ஏற்பட்டது. வெளிநாட்டுப் பிராந்தியும், உயர்தரக் கப்ஸடன் புகையிலையின் நறுமணமும் கலந்ததொரு மணம்! அப்பாமேல் அவளுக்கு எல்லையற்ற வாஞ்சை இருந்ததினால் அந்த மணம் அவளுக்கு மிகவும் பிடிக்கும்.

அவளுக்குப் பதினொரு வயதாக இருக்கும் பொழுதே அப்பா போய்விட்டார். அதற்கு முதலில் சொத்துக்களும் போய்விட்டன. எஞ்சியது இந்தப் பழைய வீடும், அது அமைந்திருந்த தென்னந்தோப்புமே. அப்பாவைத் தொடர்ந்து, நோய் வாய்ப்பட்டிருந்த அம்மாவும் போனதன் பின் பெத்தாச்சிதான் அவர்களுக்குத் தாயும் தந்தையும்.

இந்த இருபத்தைஞ்சு ஏக்கர் தோட்டமெண்டாலும் மிஞ்சினது ஏதோ அம்மாளின்ரை அருள்தான்! ஒவ்வொரு பொட்டைக்கும் அஞசேக்கராய்க் குடுக்கலாம்! எனப் பெத்தாச்சி, அப்பாவின் தாயார், கூறிக்கொள்வது வழக்கம்.

அதோ! தோட்டத்தின் பழைய இரும்புக் கேற்றை ஒருக்களித்துத் திறந்துகொண்டு பெத்தாச்சியே வருகின்றா!...

சித்திராவின் இளநெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது.

(வளரும்..)

 


     இதுவரை:  24712372 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5635 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com