அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 25 arrow தொலைவில்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தொலைவில்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கி.பி.அரவிந்தன்  
Thursday, 13 April 2006

(வாசுதேவனின் கவிதைத் தொகுப்பான 'தொலைவில்' காலச்சுவடு பதிப்பகத்தால் இம்மாதம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்ள முன்னுரை இங்கு மீள் பிரசுரமாகின்றது.)

தொலைவில் - வாசுதேவன்

1991ல் பிரான்ஸ் வந்தடைந்த நான் பாரிசின் கலை இலக்கியச் சூழலில் பங்கெடுத்த வேளையில்தான் வாசுதேவனின் எழுத்துக்களுடனான பரிச்சயம் கிடைத்தது. தொடக்கத்தில் சிறுகதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்பவையே அவரது எழுத்துக்களாக படிக்க கிடைத்தன. அப்போதே அவரது படைப்பு மொழியின் வீச்சு ஆச்சரியத்தை அளித்தது.  பாரிசில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த ஒரு காலாண்டு சஞ்சிகையில் வாசுதேவனால் எழுதப்பட்ட போர்த்துகேய கவிஞன் பற்றிய அறிமுக கட்டுரையை படித்து வியந்தது இன்றைக்கும் ஞாபகம் இருக்கின்றது. மிகப் பிந்திய காலத்திலேயே அவர் கவிதையைக் கையிலெடுத்தார். அக்கவிதைகளே 'தொலைவில்..' என்னும் தொகுப்பாக தற்போது நமது கைகளில் உள்ளது.
தமிழ் இலக்கியம் என்பதானது தமிழக இலக்கியம், ஈழத்து இலக்கியம், மலேசிய இலக்கியம், புலம்பெயர் இலக்கியம் என பல கிளைகளுடன் விரிந்து நிற்பதை நாம் அறிவோம்.  ஈழத்து இலக்கியமானது போர் இலக்கியமாகவும் வளர்ச்சி கண்டு சமூக அசைவிற்கேற்ப வளர்ந்து செல்கின்றது. அது இன்னமும் பரவலான வாசிப்புக்குச் சென்றடையவில்லை. புலம்பெயர் இலக்கியம் ஈழத்து இலக்கிய நீட்சியாக அல்லது போர் இலக்கியச் சாயலாகவே காணப்படுகின்றது.  இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஏனெனில் இலங்கைத்தீவின் போர் அரசியலே புலம்பெயர் வாழ்வின் இயங்கு சக்தியாக இருக்கின்றது. அதனால்தான் போலும் புலம்பெயர் இலக்கிய புனைவிற்கான வடிவத்திலும் ஈழத்தைப்போல் கவிதையே முதன்மையாக உள்ளது.  கதை, நாவல், நாடகம் என்பதெல்லாம் கவிதைக்கு பின்னால்தான் நிற்கின்றன.
இப்படிக் கவிதை முதன்மை பெறுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.  அவற்றில் புதுக்கவிதை எழுதுவதற்கு எழுத்து பயிற்சியும், கவிதைச் சிந்தனையும் இருந்தால் போதுமானது என்பதும், மரபான வாழ்க்கை நிலையில் இருந்து மாறுபட்டு புதிய வாழ்வு நெறிகளுக்குள் தள்ளப்படும்போது ஏற்படும் உணர்வுகளையும், நவீனத்துவ பண்புகளையும் வெளிப்படுத்த இவ்விலக்கிய வடிவம் இலகுவானதாய் அமைகின்றது என்பதும் முக்கியமானவை. அவ்வகையில் புலம்பெயர் வாழ்வின் புதிய உணர்வுகளை வெளிப்படுத்த புதுக்கவிதை வடிவம் உதவுகின்றது. ஆயினும் அது கலையாக உருபெற வேண்டுமானால் சொல்லல் முறை, பார்வை வீச்சு, உணர்வுத்திறன் என்பவையும் இணைய வேண்டும். அப்போதுதான் அவை கவிதையாக வெற்றி பெறுகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது.
ஈழத்து நவீன தமிழ்க் கவிதை 1940களில் து.உருத்திரமூர்த்தி என்னும் இயற்பெயர் கொண்ட'மஹாகவி'யுடன் தொடங்குவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுவர். படிப்படியாக வளர்ச்சியுற்ற ஈழத்தமிழ்க் கவிதையின் உள்ளடக்கமும், வெளிப்பாட்டு மொழியும் 1970 களிற்கு பின்னர் மாற்றம் பெறத் தொடங்கியது.  இலங்தைத் தீவின் அரசியல் நெருக்கடி தீவிரம் பெற்றதும், அவ்வரசியல் நெருக்கடி ஆயுதப் போராட்டமாக வளர்ச்சி பெற்றதும்  இதற்கு உந்து சக்தியாக விளங்கியது. அதனால் தமிழ்க் கவிதைப் பரப்பில் தனித்துவமான கவிதைப் போக்காக ஈழத் தமிழ்க் கவிதை அடையாளங் காணப்பட்டது. 1980களின் பின்னர் உள்ளும் புறமுமாய் புலப்பெயர்வும் அலைதலும் தீவிரமடைந்ததும் அது ஈழத்துத் தமிழ்க் கவிதையை இன்னொரு பரிமாணத்திற்க இட்டுச் சென்றது. அது உள்ளீட்டிலும், வெளிப்பாட்டிலும் மாற்றத்தைக் கோரி நின்றது.  நோர்வேயில் இருந்து சுவடுகள் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட 'துருவச் சுவடுகள்' என்னும் கவிதைத் தொகுப்பில் இம்மாற்றத்தின் சுவடுகளை அவதானிக்கலாம். இம்மாற்றத்தின் உச்சவெளிப்பாடாகவே வாசுதேவனின் 'தொலைவில்..' என்னும் இக்கவிதைத் தொகுப்பை நான் கவனத்தில் கொள்கிறேன்.
அலைதல் என்பது வேர்கள் அறுபடுவதிலிருந்து தொடங்குகின்றது.  அதாவது ஊர்களிலிருந்து பெயர்தல் பெயர்க்கப்படுதல், துறத்தல், துரத்தப்படுதல் என்றெல்லாம் அதனைக் கொள்ளலாம். இதனை மொழிபெயர் தேயம் என்கிறது பழந்தமிழ் இலக்கியம்.  மண்ணிலிருந்து வேர்கள் பிடுங்கப்பட்டதன் பின்னர் அலைதலின் தூரம் இரண்டு மைல்களுக்கு அப்பாலும் இருக்கலாம், இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பாலும் இருக்கலாம். ஆனால் மிஞ்சுவதென்னவோ வலிதான். வதைதான். அடையாளச் சிதறல்தான். அது ஆண்டுகள் கடந்தாலும், தலைமுறைகள் கடந்தாலும் ஆறிவிடாத ஒன்றென்பதற்குச் சாட்சியங்கள் ஆயிரமுண்டு. நீரின்றி வேர் பாவாது என்பது போல் ஊரிழந்தாருக்கும் வேர்கள் வெறும் பிம்பங்கள்தான். ஆழ்மனப் படிவுகளாகும் தொன்மங்கள்தான். இப்படிச் சூம்பிப்போன, உறைந்துபோன வேர்களுடன் முகமழிந்த சமூகங்கள் உலகெங்கும் அலைகின்றன.  நாங்கள் வாழும் தேசங்கள் தோறும் அவர்களைச் சந்திக்கவும் பழகவும் முடிகின்றது. அவர்களில் பல சமூகத்தினர் தங்களுக்கான வெளிப்பாட்டு மொழியைக் கண்டடைந்திருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.  ஈழத்தமிழராகிய எங்களுக்கும் அலைதல் வாய்த்திருக்கின்றது. அது ஆயிரமாயிரம் மைல்களுக்கு அப்பால் எனவும் விரிந்திருக்கின்றது. இப்படி புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களிடமும் கலை இலக்கியம் வெளிப்பாடு கண்டிருக்கின்றது. அவை சஞ்சிகைகளாகத் தொடங்கி நூல்களாக வளர்ந்து மேலும் ஒலி ஒளி ஊடகங்களாகவும், இணையத் தளங்களாகவும் விரிந்து நிற்கின்றன. அது கால்நூற்றாண்டு காலப் பின்னணியையும் கொண்டுள்ளது. ஆனால் அவர்தம் அலைதலின் வெளிப்பாட்டு மொழியை, படைப்பு மொழியைக் கண்டடைந்தார்களா என்பதே இப்போது எழும் கேள்வி. வாசுதேவனின் 'தொலைவில்..' தொகுப்பினை படிக்கும்போது நீங்கள் அதற்கான பதிலை கண்டு கொள்ளலாம்.
இந்த அலைதலின் வெளிப்பாட்டு மொழி, அல்லது புலம்பெயர் வாழ்வின் வெளிப்பாட்டு மொழி எவ்வாறானதாக இருக்கும். நீங்கள் பொப்மார்லியின் இசையை, பாடலை கேட்டிருக்ககூடும்.  ஐமேக்காவில் இருந்து மேற்கிளம்பி உலகெங்கும் வியாபித்த அந்த றேகே இசையைக் கேட்டிருந்தால், அல்லது அந்தலூசி வழியாக அரங்குகளை ஆக்கிரமித்திருக்கும் பிளமின்கோ கலைஞர்களை, அவர்தம் ஆடலின் தாளக்கட்டைக் கேட்டிருந்தால், இந்த அலைதலின் மொழியை அடையாளம் கண்டிருக்க முடியுமென நான் நம்புகிறேன். றேகேயும் பிளமின்கோவும் அலைதலின் மொழிக்கு அசலான சாட்சியங்கள். அலைதலின் வலியை ஆற்றுப்படுத்துவதற்கு, இவ்வகை கலை இலக்கியத்தை தவிர்த்து வேறெதுவும் இருக்க முடியுமா?
இப் பின்னணியில்தான் இந்தக் கவிதைத் தொகுப்பு கவனத்திற்குரியதாய் மாறுகின்றது. புலம்பெயர் இலக்கியத்திற்கான படைப்பு மொழியை அல்லது அலையும் வாழ்வுக்கான படைப்பு மொழியை இக்கவிதைத் தொகுப்பு அழுத்தமாகப் பதிவு செய்திருக்கின்றது என்றே கருதுகின்றேன். அதாவது தாயகத்திற்கு அப்பால் எழும் படைப்பு மொழியின் வீச்சை, சொல்லாட்சியை, சிந்தனா முறைமையை இத்தொகுப்பில் கண்டு  வியக்காமல் இருக்க முடியவில்லை. கவிஞர் தனது அனுபவ வீச்சையும், சிந்தனை வீச்சையும், உணர்வோட்டத்துடன் புதுக்கவிதை என்னும் புனைவு வடிவத்துள் இயங்கச் செய்யும் தர்க்க முறைமையும் சிறப்பானதொன்றாகும். கவிஞருக்கு தத்துவப் பரிச்சயம் இருப்பதனால் தர்க்கமும் அவர் கவிதைகளில் இயல்பாக அமைகின்றது. தனது பதினேழு வயதில் ஊரைவிட்டும், இருபத்தொரு வயதில் நாட்டை விட்டும் புறப்படும் கவிஞன் தன் அலைதலுக் கூடான வாழ்வனுபவங்களை ஒரு தேர்ந்தெடுத்த மொழியூடாக வெளிப்படுத்துகிறான். இந்த மொழி பிரெஞ் இலக்கிய செழுமையை கவிஞன் உள்வாங்கியதன் ஊடாக உருப்பெற்றிருக்க வேண்டும்.   கவிஞனால் பட்டுப்போன தென்னையில் புழுக்களைத் தேடும் மரங்கொத்தியுடனும், வண்ணான் குளத்து வாற்பேத்தைகளுடனும் உரையாடவும் முடிகின்றது.பனை மரத்தின் காய்ந்து போன பழுப்போலை உராய்ந்தெழுப்பும் இசையைக் கேட்கவும் முடிகின்றது. எவ்விடம் எவ்விடம் புளியடி புளியடி எனக் கூவி விளையாடவும் முடிகின்றது. அதே வேளையில் நீரின் தோற்றம் பற்றிய அறிவியலையும், நானோ, பிக்கோ செக்கண்டுகளாக காலத்தை பிரிக்கும் கணங்களையும் கவிதைளாக புனையவும் முடிகின்றது. தத்துவ விசாரணையையும், வாழ்தலின் நியாயங்களையும் அருகருகே வைத்து கேள்வியாக்கவும் முடிகின்றது. இவையெல்லாம் ஏனைய புலம்பெயர்ந்தோர் படைப்புகளில் அருந்தலாகவே வெளிப்பட்டுள்ளன.  வாசுதேவனின் கவிதைகளில் இவ்வம்சங்களே முதன்மை பெறுகின்றன. அவ்வகையில் தாயகங்களுக்கு அப்பால வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூக மனிதனின் ஆன்மாவை அவனது தொனியை இக்கவிதைகள் உணர்த்தி நிற்கின்றன என்றால் மிகையில்லை.
'தமிழிலக்கிய வரலாற்றில் இரண்டாவது தடவையாக உள்மனப் போராட்டங்களை இலக்கியமாக்கும் ஒரு முயற்சி  வளர்கின்றது. முதலாவது தடவை பக்தி இலக்கிய வளர்ச்சியின் இரண்டாம் கட்டத்தில்(நம்மாழ்வார் மாணிக்கவாசகர் மட்டத்தில்) நடைபெற்றது'  என புலம் பெயர் இலக்கியத்தை போராசிரியர் சிவத்தம்பி அவர்கள் 1992ல் அடையாளம் காட்டியிருந்தார். அதன் வளர்ந்துவிட்ட ஒரு நிலையையே இத் தொகுப்பு வெளிப்படுத்தி நிற்கின்றது. இந்த தொகுப்பின் பெரும்பாலான கவிதைகள் உள்மன விசாரணைகளாகவே அமைந்திருப்பதை பரக்க காணலாம். அவற்றில் 'மனமென்னும் மரங்கொத்தி',  'கொடூரம்', 'அவ்வாறுரைத்தான் ஸரத்தூஸ்ரா', 'மூன்றாவது துளை', 'ஆதியிலே தனிமை இருந்தது' ஆகியவற்றை சிறப்புறக் குறிப்பிடலாம். 'அவ்வாறுரைத்தான் ஸரத்தூஸ்ரா'  என்னும் நீள் கவிதைக்கு மட்டுமே தனியாக விரிவான ஒரு ஆய்வுரை எழுதலாம். பிரெஞ்சு மொழி வழியாக உலக இலக்கியங்களுடனும், படைப்பு ஆளுமைகளுடனும் கவிஞருக்குள்ள பரிச்சயம் இத்தொகுப்பு முழுவதும் விரவிக்கிடக்கின்றது. 'கோடோ வரும் வரையும்', 'பாலஸ்தீனப் பாதை' ஆகிய கவிதைகளை இதற்கு உதாரணமாகச் சுட்டலாம். அதிலும் 'கோடோ வரும் வரையும்' கவிதையை புலம்பெயர் இலக்கியத்திற்கான மொழி அல்லது அலையும் வாழ்வுக்கான மொழியின் சிறந்த வெளிப்பாடெனக் கொள்ளலாம். அவற்றின் உதாரணங்களுக்காக நீங்கள் உள்ளே படிக்கப்போகும் கவிதைகளின் வரிகளைப் பிடுங்கி வந்து  இங்கே பரவி விடுவதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன்.
இத்தொகுப்பில் உள்ள 'ஆதியிலே தனிமையிருந்தது' என்னும் கவிதை ஈழத்தின் முக்கிய படைப்பாளியான மு.தளையசிங்கம் அவர்களுடனான சிந்தனை உறவு பரிமாற்றம் பற்றி பேசும் முக்கிய கவிதை. இதில் மூன்று இடங்களில் 'வெள்ளிக்கிழமை...' பற்றிய சொற்குறிப்புகள் இடம்பெறுகின்றன. இந்த வெள்ளிக்கிழமை பற்றிய புரிதல் இருக்கும்போதுதான் இக்கவிதையின் ஆழஅகலத்தை அனுபவத்தை வாசகர் பெறமுடியும். றொபின்சன் குரூசோ என்னும் நாவல் கடற்பயண விபத்தால் ஆளரவமற்ற தீவில் ஒதுங்கும் மனிதன் பற்றிய கதை. அதில் நரமாமிச உண்ணிகளிடமிருந்து மீட்கப்படுபவனுக்கு றொபின்சன் குரூசோவால் வழங்கப்படும் பெயர்தான வெள்ளிக்கிழமை. இது போதும் என்றே கருதுகின்றேன்.
இத்தொகுப்பின் ஆசிரியர் கவிஞராக மட்டுமல்லாது சிறுகதையாளராக, கட்டுரையாளராக, மொழிபெயர்ப்பாளராகவும் விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக பிரான்சுக்கு புலம்பெயர்ந்த முதல் தலைமுறையைச் சேர்ந்தோரில் இருமொழிப் புலமை மிக்க ஒரு சிலரில் (பிரெஞ்சு -தமிழ்) இவரும் ஒருவர். இவருடைய மொழிபெயர்ப்பில் பிரெஞ் படைப்பாளிகளும் அவர்தம் படைப்புகளும் இங்குள்ள சஞ்சிகைளின் பக்கங்களில நிறைந்து கிடக்கின்றன. நீதிமன்ற உத்தரவு பெற்ற மொழிபெயர்ப்பாளராக விளங்கும் இவர் புலம்பெயர்ந்த காலமுதலே எழுத்துத் துறையில் ஈடுபட்டு வருகின்றார். புகலிடப் புத்தகம் என்னும் இணையத்தளத்தை நடாத்தி வந்ததுடன் பாரிஸ் அகிலன் என்னும் புனைபெயரில் கவிதைகளை எழுதி வந்தார். பாரிசின் கலை இலக்கிய செயல்பாட்டிற்கு உத்வேகம் அளிப்பவர்களில் ஒருவராக இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1984ம் ஆண்டில் தாயகத்திலிருந்து புறப்படுதலை தனது மரணமாகவும், பிரான்சுக்கு வந்து சேருதலை தனது இரண்டவாது பிறப்பாகவும் கருதும் கவிஞர் வாசுதேவன் 2002ம் ஆண்டிலிருந்தே கவிதையில் தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார். அதிலவர் வெற்றியும் பெற்றிருக்கின்றார். அதே வேளையில் அலைதலுக்கான, புலம்பெயர் வாழ்விற்கான மொழியையும் கண்டடைந்திருக்கிறார்.
'இருப்புகளின் இரைச்சலுள்ள சந்தியிலே
நீயும் நானும் இருப்பது கண்டு பிரமிப்பதற்கு
இன்னமும் மிஞ்சியிருப்பது
ஒரு மில்லி செக்கண்ட் மட்டுமே'

அன்பன்
கி.பி.அரவிந்தன்.

 

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(3 posts)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 18:08
TamilNet
HASH(0x55da811c32b8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 18:08


புதினம்
Thu, 28 Mar 2024 18:08
















     இதுவரை:  24713437 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6301 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com