அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 20 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வட்டம்பூ - 10   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Friday, 07 April 2006

10.

அடுத்தநாள் காலையில் சீக்கிரமாகவே எழுந்து பாலைக் கறந்துவிட்டு, பழையாண்டங்குளத்துக் கலட்டியனைப் பிடிக்கப் புறப்பட்டனர். சிங்கராயர் கையில் சிறிய வார்க்கயிற்றுடனும், குணசேகரா காட்டுக் கைக்கத்தியுடனும், சேனாதிராஜன் துவக்குடனும் சென்றனர்.

காலில் சுருக்கு இறுகியதுமே பழையாண்டங்குளத்துக் கலட்டியன் மிரண்டுபோய் பரவைக் கடலைக் குறுகறுத்துப் பாய்ந்து, திருக்கோணம் வயலைக் கடந்து அப்பால் இருந்த அடர்ந்த காட்டினுள் புயலாய்ப் பிரவேசித்தது. இருப்பினும் காலுடனே இழுபட்டுவந்த நீண்ட வார்க்கயிற்றினை அதனால் கழற்றிக்கொள்ள முடியவில்லை. இன்னும் சற்றுத்தூரம் செல்ல முன்பே வார்க்கயிற்று நுனியில் கட்டப்பட்டிருந்த மரைக்கொம்பு, ஒரு பாலைமர வேரில் மாட்டிக் கொண்டது. அதன் வாழ்க்கையிலேயே முதன் முதலாக அதன் சுதந்திரம் தடுக்கப்பட்டபோது அது மிரண்டு, மூர்க்கத்தனமான வீரியத்துடன் கயிற்றை இழுத்தது. அப்படியிருந்தும் முடியாமற் போகவே, ஆவேசம் வந்ததாய் அந்த இடத்தையே சுற்றிப் பாய்ந்து, தன்னை விடுவித்துக்கொள்ளப் பிரயத்தனம் செய்தது. அந்த முயற்சியில் வார்க்கயிறு பாலைமரத்தைச் சுற்றிக்கொண்டது. மிகுதிக் கயிறு இடங்கொடுத்த மட்டிலும் கலட்டியன் இழுத்துப் பாய்ந்ததால், அங்கிருந்த செடிகள், சிறுமரங்கள் யாவும் பிடுங்கப்பட்டும், மிதியுண்டும் துவம்சம் செய்யப்பட்டு, அந்த இடமே வெட்டையாகி விட்டிருந்தது. இரவுமுழுவதும், தன்னைப் பிணைத்திருந்த அந்தக் கயிற்றிலிருந்து விடுபட முயற்சி செய்ததனால் இப்போது கலட்டியன் சற்றுக் களைத்த நிலiயில் நின்றது.

சிங்கராயர் திருக்கோணம் வயலை ஒட்டியிருந்த பரவைக் கடற்கரையில் கலட்டியனின் பெரிய காலடிகளையும், வார்க்கயிறு இழுபட்ட தடத்தையும் கண்டு அவ்வழியே தொடர்ந்து வந்தார். அவருக்குப் பின்னே மிகவும் கவனத்துடன் குணசேகராவும், சேனாதியும் வந்துகொண்டிருந்தனர்.

சிங்கராயருக்குக் குழுமாடுகளின் குணம் நன்கு தெரியும். மரைக்கொம்பு கெட்டியாக வேரில் மாட்டிக்கொள்ளாமல் இருந்தால், அல்லது மாட்டிக்கொண்ட குழுவன் நெடுங்கயிற்றில் நின்றால், மனிதரைக் கண்டதுமே அது மின்னல் வேகத்தில் தாக்கும். துவக்கு வெடிகூட அதனை ஒன்றும் செய்ய இயலாது. எனவேதான் அவர் தனது சகல புலன்களும் விழப்படைந்த நிலையில், மிகவும் உஷாராகக் கொஞசம் கொஞ்சமாக முன்னே சென்றார்.

அப்பொழுது அவர்களுக்குச் சற்றுத் தொலைவில், கலட்டியன் வார்க்கயிற்றை இழுத்துச்சென்ற தடத்தின் திசையில் எதுவோ ஒரு சத்தம் கேட்டது. சிங்கராயர் குணசேகராவையும் சேனாதியையும் அவசியமானால் மரத்தில் ஏறுவதற்கு ஆயத்தமாக இருக்கும்படி பணித்துவிட்டு, தான் மட்டும் சத்தம் வந்த திசையை நோக்கிப் பதுங்கிப் பதுங்கி செல்லலானார்.

மேலே சிறிது தூரம் சென்றதும், கலட்டியன் கட்டுப்பட்டு நிற்பதைச் சிங்கராயர் கண்டுகொண்ட அதே சமயத்திலேயே கலட்டியனும் அவரைக் கண்டுகொண்டு, மூசியவாறே முன்னே பாய்ந்தது. அதனால் மனிதவாடை வந்த இடத்தை நோக்கிச் செல்ல முடியாததால், வேகமாகச் சுழன்று ஓட முயற்சித்தது. இந்த முஸ்தீபுகளை ஒரு மரத்தை ஒட்டியவாறே நின்று அவதானித்த சிங்கராயரின் முகத்தில் மென்னகை படர்ந்தது. மெல்ல மெல்ல கலட்டியன் கட்டுப்பட்டிருந்த இடத்தைச் சுற்றிவந்து பின்பு அங்கிருந்த ஒரு மரத்தில் ஏறி, கலட்டியனையும் அது கட்டுப்பட்டு வெட்டையாகிய வட்டத்தையும், கொம்பு சிலாவியிருந்த பாலைவேரையும் கவனமாகப் பார்த்துத் திருப்தி அடைந்தவராய்க் கீழே இறங்கிய சிங்கராயர், உரத்துக்; கர்ச்சித்து, குணசேகராவையும் சேனாதியையும் 'பயப்பிடாமல் வாருங்கோ!.. கலட்டியன் புள்ளை நல்ல சிக்காரய்த்தான் கட்டுப்படடிருக்கிறார்!" எனக் கூவி அழைத்தார். இவருடைய சத்தம் கேட்டு கலட்டியன் மிரண்டு துள்ளியது.

குணசேகராவும், சேனாதியும் வருவதற்கிடையில், வசதியாக நின்று கொம்புக்கு சுருக்கு எறிய வேண்டிய இடத்தையும் தெரிவு செய்துகொண்டார் சிங்கராயர். கலட்டியனை நெருக்கமாகக் கண்டபோது அவர் அதனுடைய முரட்டு அழகையும், அசுரபலத்தையும் மிகவும் ரசித்துக்கொண்டார். மற்றைய குழுவன்கள் போலல்ல இது, தலைக்குக் கயிறெறிந்து அசையமுடியாமல் இழுத்துக் கட்டிவிட்டு, இரை தண்ணீர் இல்லாமல் பலவீனமடைய வைத்து, அதன் பின்னரே ஒரு சுபாவியான எருமையுடன் அதைப் பிணைத்துக் கிராமத்துக்குக் கொண்டு போகவேண்டும் என மனதுக்குள் திட்டமிட்டுக் கொண்டார் சிங்கராயர். இவ்வளவு விரைவில் கலட்டியன் தன் கையில் சிக்கும் என்று அவர் எதிர்பார்க்காததால், அவர் மனதில் திருப்தி கலந்த பெருமிதம் அரும்பியது.

அந்த இடத்துக்குக் குணசேகராவுடன் வந்த சேனாதி மிக அருகிலே கலட்டியனைக் கண்டபோது, பிரமித்துப் போனான். கன்னங்கரேலென்று நீலம்பாரித்த குன்றுபோல நின்றிருந்த கலட்டியனின் தலை, அகன்று பருத்து, யானையின் மத்தஜம் போலிருந்தது. அதில் முளைத்திருந்த பருத்த அகன்ற கொம்புகளின் நுனிகள் கூர்மையாய்ப்ப பளபளத்தன. குருவி இரத்தம்போலச் சிவந்திருந்த விழிகள் மிரண்டு உருண்டன. இடிகுமுதமாய் அது பாலைமரத்தைச் சுற்றிவந்து தாக்குவதற்குத் துடித்தது.

சேனாதிக்கு நா வறண்டு போயிற்று. குணசேகராவோ ஐந்தறிவும் கெட்டுப்போய் ஒரு மரத்தோடு ஒண்டிக் கொண்டிருந்தான். அவர்களுடைய பயத்தைக் கண்ட சிங்கராயர், கடகடவெனச் சிரித்தார். 'ஒண்டுக்கும் பயப்பிடாதையுங்கோ! கலட்டியன் வடிவாய்க் கட்டுப்பட்டிருக்கு! .. தம்பி! நீ எதுக்கும் வெடிவைக்க ஆயத்தமாய் நில்லு!.. குணசேகரா!.. நீ ஏதுமெண்டால் டக்கெண்டு மரத்திலை ஏறு!.." எனக் கட்டளையிட்டுவிட்டுச் சேனாதியிடம் துவக்கைக் கொடுத்துவிட்டு, சிறிய வார்க்கயிற்றை வாங்கிக்கொண்டு கலட்டியனை நெருங்கிச் சென்றார். காட்டு மறைவிலிருந்து அவர் வெட்டைக்கு வந்ததுமே, கலட்டியன் சட்டென்று உந்தி, முன்னே சிங்கராயரை நோக்கிப் பாய்ந்தது. பாய்ந்த வேகத்தில் கயிறு திரும்பவும் சுண்டி இழுக்கவே நிலைதவறி நிலத்தில் தொம்மென வீழ்ந்த கலட்டியன், நம்பமுடியாத மின்னல் வேகத்தில் எழுந்து மறுபடியும் அவரைத் தாக்குவதற்கு மூசியது. சிரித்துக் கொண்ட சிங்கராயர், தான் தெரிவுசெய்த இடத்தில் நின்றபடியே சிறிய வார்க்கயிற்றின் சுருக்கை அகலமாக்கி எறிய உயர்த்தியபோது, மறுபடியும் மூர்க்கத்துடன் கலட்டியன்  அவரிடம் பாய்ந்தது. இம்முறையும் கயிறு சுண்டியிழுக்க விழுந்து எழுந்த கலட்டியன், வாலைச் சுழற்றி, முன்னங்கால்களால் மண்ணைப் பிறாண்டி எறிந்து பயங்கரமாகத் தலையை அசைத்தது. இதுதான் சமயமெனத் தீர்மானித்த சிங்கராயர், ஒரு எட்டு முன்னே வைத்து கலட்டியனின் கொம்புக்குக் குறிவைத்து சுருக்கை எறிகையில், தன் காட்டுப்பலம் அத்தனையையும் ஒருங்குசேர்த்து அது சிங்கராயரை நோக்கிப் பாய்ந்தபோது, படீரென வார்க்கயிறு அறுந்துபோயிற்று! சட்டென விடுபட்டதால் தனது வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத கலட்டியன், தன் பாதையிலிருந்து இலாவகமாக விலகிய சிங்கiராயரை ஒரு பக்கத்துக் கொம்பினால் சிலாவியபோது, சிங்கராயர் அப்படியே தூக்கி வீசப்பட்டார். கலட்டியன் புயல்வேகத்தில் சிங்கராயரைத் தூக்கி எறிந்து பாய்கையில் சேனாதியின் கையிலிருந்த துவக்கு முழங்கியது. இதுவரை அப்படியொரு ஒலியை மிக அருகிலே கேட்டிராத கலட்டியன் வெருண்டு ஓடியது. காட்டில் வெகுதூரம் அது பிய்த்துக்கொண்டு போகும் சத்தம் கேட்டது. மற்றக் குண்டுத் தோட்டாவைக் துவக்கினுள் போட்டுக் கெட்டித்துக் கொண்ட சேனாதி, திரும்பி சிங்கராயர் விழுந்த இடத்தைக் கண்டபோது பயந்து போனான்.

தரையில் கால்களை அகல வைத்துக் கொண்டிருந்த சிங்கராயரின் வலதுகால் தொடையின் உட்பகுதியிலிருந்து குருதி கொப்பளித்துக் கொண்டிருந்தது. துவக்குடன் அவரருகே ஓடிச்சென்ற சோனதியின் உடல் பயத்தினால் வெடவெடத்தது. 'எனக்கொண்டுமில்லை!.. நீ பயப்பிடாதை மோனை!.. குழுவன் இப்ப இனி வராது!" எனச் அவர் சொல்லிக் கொண்டிருக்கையில் ஓடிவந்துவிட்ட குணசேகரா ஒரு கணமேனும் தாமதிக்காது சட்டெனத் தன் சாறத்தை உரிந்து கையில் எடுத்துக்கொண்டு, சிங்கராயரின் உட்தொடையில் வழிந்த இரத்தத்தைத் துடைத்துக் காயத்தைப் பார்த்தான். அரையடி நீளத்தில், மூன்றங்குலத் தாழ்வில் கலட்டியனின் கூர்மையான கொம்பு தொடையைப் பிளந்திருந்தது. சட்டென்று தனது இடுப்பு பெல்றிறினால் காயத்துக்கு மேலாகத் தொடையைச் சுற்றி இறுகக் கட்டிய குணசேகரா, தனது சாறத்தை அளவாக மடித்து நன்றாகக் காயத்தை மூடி இறுக்கமாகக் கட்டினான். அதன்பின்னர் இரத்தம் பெருகுவது நின்றுபோயிற்று. வெகு காலமாக சேவையர் பார்டியில் வேலை பார்த்த அனுபவம் இப்போ அவனுக்குக் கைகொடுத்தது. அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியில் முதலுதவியும் ஒன்று.

சுருதியாகச் செயற்பட்ட  குணசேகரா சிங்கராயரிடம், 'இப்பிடியே ஆடாம நீங்க இருக்கிறது.. .. நாங் போய் நம்மடை ஆள் கொண்டு வாறது!.." என்று கூறிவிட்டு கோவணத்துடன் கிராமத்தை நோக்கி ஓடினான்.

இரத்தம் பெருகி வலியெடுத்த அந்த வேளையிலும், அருகில் பயந்துபோய் நின்ற பேரனைத் தடவி, 'எனக்கொண்டும் செய்யாது!.. இந்தக் குழுவனைப் புடிச்சு சிணுங்கிலை போடாமல் நான் சாகமாட்டன்!" என அந்த ஆபத்தான நிலையிலும் சிங்கராயர் வஞ்சினம் உரைத்தார். சோனதிக்கு அவருடைய அஞ்சாத நெஞ்சுத் துணிவைக் கண்டு பெருமையாக இருந்தது. ஆயினும் இவ்வளவு இரத்தம் பெருகியிருக்கிறதே!.. முதிர்வயதில் இந்த இழப்பு இவரைப் பாதிக்குமே என்ற பயம் அவன் நெஞ்சை அலைக்கழித்தது.

கிராமத்துக்கு அருகிலேயே திருக்கோணம் வயலுக்குக் கிட்ட இந்தச் சம்பவம் நடந்ததால் குணசேகராவும் அவனுடைய சகாக்களும் மிகவும் விரைவாக வந்துவிட்டிருந்தனர். கூடவே செல்லம்மா ஆச்சியும், நந்தாவதியும் ஓடி வந்திருந்தனர். சிங்கராயரைக் கண்டதுமே ஆதி ஐயனே எனப் புலம்ப ஆரம்பித்த மனைவியைப் 'பொத்தடி வாயை!" என அடக்கிவிட்டார் அவர். அதன்பின் அவள் வாய்விட்டு அழாமல், அவரைப் பிடித்துக்கொண்டு அவரின் பக்கத்திலேயே உட்கார்ந்துவிட்டாள். ஆனால் அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. நந்தாவதி பயத்தில் வெளிறிப் போயிருந்தாள்.

குணசேகராவின் ஆட்கள் கொண்டு வந்திருந்த சாக்குக் கட்டிலில் சிங்கராயரைத் தூக்கிக் கிடத்திவிட்டு, நான்குபேராகச் சேர்ந்து கட்டிலுடன் தோளில் வைத்துக்கொண்டு விரைந்து நடந்தனர். அவர்களில் ஒருவன் ஏற்கெனவே குணசேகராவின் பணிப்பின்பேரில் குமுளமுனைக்கு ஓடிப் போயிருந்தான். அவனை வள்ளத்தை கிராமத்துக்கு மிக அண்மையில் உள்ள சுரிவாய்க்காலுக்கு கயிலாயரைக் கொண்டுவரும்படியும், குமுளமுனையில் முல்லைத்தீவு வைத்தியசாலைக்குச் செல்வதற்கு உழவு மெசின் ஒன்றை ஒழுங்கு செய்யும்படியும் கூறியிருந்தான்.

அவர்கள் ஐயன் கோவிலைக் கடந்து செல்கையில் செல்லம்மா ஆச்சி 'ஐயனே! நீதான் அவருக்குத் துணை!" எனக் கண்ணீருடன் வேண்டிக்கொண்டாள்.

இரத்தப் பெருக்கினால் சற்றுச் சோர்ந்துபோன சிங்கராயரை குணசேகராவும் அவனுடைய ஆட்களும் பக்குவமாகத் தூக்கி வள்ளத்தில் இருத்துகையில், 'கவனம்! கவனம்!" என்று பதறிய கையிலாயர் அவரைக் கைத்தாங்கலாக அப்படியே தன்னுடன் சாய்த்து வைத்துக்கொண்டார்.

கரையில் கண்ணீர் மல்க நின்ற நந்தாவிடம் செல்லம்மா ஆச்சி, 'மோனை நந்தா!.. எல்லாம் போட்டது போட்டபடி வாறன்.. வீட்டைப் பாத்துக்கொள் அம்மா!" எனக் கேட்டுக்கொண்டாள்.

குணசேகராவும் சேனாதியும் கம்பூன்றி வள்ளத்தைச் செலுத்த, குணசேகராவின் ஆட்கள் சாக்குக் கடடிலையும் தூக்கிக்கொண்டு மூண்டாத்துப்போர் இறக்கத்துக்கு ஓடினார்கள்.

குணசேகராவும் அவனது சகாக்களும் துடித்துப் பதைத்து உதவுவதைப் பார்த்த சேனாதியின் நெஞ்சு நெகிழ்ந்தது. அவர்கள் யாவருமாகச் சிங்கராயரைச் சுமந்துகொண்டு குமுளமுனைக்கு வந்தபோது, மலைவேம்படிச் சந்தியில் குணசேகராவின் ஆள் காருடன் காத்திருந்தான். முல்லைத்தீவுக் காரொன்று தெய்வச்செயலாக, வைத்தியசாலையில் பிள்ளை பெற்ற பெண் ஒருத்தியைக் குமுளமுனைக்கு அந்தநேரம் கொண்டுவந்து இறக்கிவிட்டுத் திரும்புகையில், அவன் அதை ஒழுங்குபண்ணி வைத்திருந்தான்.
சிங்கராயரைத் தூக்கிக் காரில் ஏற்றுகையில் அவர் தொடையைச் சுற்றிக் கட்டியிருந்த சாறத்தைக் கவனித்தான் சேனாதி. அது இரத்தத்தில் தெப்பமாக நனைந்திருந்தது.

அவர்கள் முல்லைத்தீவு வைத்தியசாலையை அடைந்தபோது, சிங்கராயரை உடனடியாகச் சிகிச்சைக்கு உட்படுத்தினார் பெரிய டாக்டர். சிலமணி நேரத்தில் அவர் சிகிச்சசையை முடித்துக் கொண்டு வந்து, வெளியே நின்ற செல்லம்மா ஆச்சி, சேனாதி முதலியோரிடம், 'நல்ல காலம்! நீங்கள் உடனேயே கொண்டு வந்தது நல்லதாய்ப் போச்சுது!.. இனி ஒண்டுக்கும் பயப்பிடத் தேவையில்லை!.." எனச் சொன்னபோது, அவர்களுக்கெல்லாம் பெரும் ஆறுதலாக இருந்தது.

 

 


     இதுவரை:  24785416 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2507 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com