அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 18 April 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 24 arrow புதிர் உண்ணுதல்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


புதிர் உண்ணுதல்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: எஸ்.கே  
Saturday, 11 February 2006

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய கலாசாரங்களில் ஒன்றாக புதிர் எடுத்தல், புதிர் உண்ணுதல் என்னும் முறைமைதொன்று தொட்டு பேணப்பட்டு வருவது சிறப்புக்குரியது.
தைமாதம் பிறந்ததும் சூரியனுக்கு உழவர்கள் அறுவடை செய்யும் நெல்லில் பொங்கலிட்டு நன்றிக்கடன் செலுத்திய போதும் காலவோட்டத்தில் தைப்பொங்கலுக்கு ஏற்றாற் போல் பெரும் போக அறுவடை நெல்லிலிருந்து அரிசியை பெறமுடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக தைப் பொங்கலுக்கு அப்போதுள்ள அரிசியை பயன்படுத்தி பொங்கிய மக்கள் அறுவடை செய்கின்ற போதும் அதனை அந்தந்தக் கிராமங்களிலுள்ள இந்து ஆலயங்களில் புதிர் எடுத்த பிற்பாடு வீடுகளுக்கும் புதிர்எடுக்கப்பட்டு பின்னர் புதிர்உண்ணும் நிகழ்வையும் நடத்துகின்றனர்.
புதிதாக அறுவடை செய்கின்ற நெல்லை புதிர் எடுத்தல் என்றும், முதல் முதல் அந்த நெல்லில் இருந்து கிடைக்கப் பெறுகின்ற அரிசியை சமைத்து உண்பதை புதிர் உண்ணுதல் என்றும் மக்கள் அழைக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தில் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இது சிறப்பான முறையில் பேணப்படுகின்றது.
சுப நேரத்தில் ஆலயத்திற்கு அறுவடைசெய்கின்ற நெல்,மற்றும் நெற்கதிர்கள் என்பன எடுத்து வரப்பட்டு வைக்கப்படும்.
அன்றைய தினம் கிராமத்திலுள்ள மக்கள் தங்கள் வயல்களிலுள்ள நெல், நெற்கதிர்களை எடுத்து வந்து தங்கள் வீடுகளிலுள்ள பூசை அறைகளில் வைப்பார்கள்.
பின்னர் புதிர் உண்ணும் நாள் பஞ்சாங்கங்களின் கணிப்பின் படி தெரிவு செய்யப்படும் அந்த நாட்களில் ஆலயங்களில் புதிர்பூசை நடைபெறும். அன்றைய தினம் கிராமத்து மக்களும் ஆலயங்களும் பூசை வழிபாடுகளை மேற்கொள்வதுடன் வீடுகளில் சமைத்து உண்பார்கள். இதனையே புதிர் உண்ணுதல் என அழைக்கின்றனர்.
தேசத்துக் கோயிலான கொக்கட்டிச்சோலை ஆலய முறைமை போன்று படுவான்கரைப் பிரதேசங்களிலுள்ள ஏனைய கிராமங்களிலுள்ள, இந்து ஆலயங்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகின்றன.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை, சித்தாண்டி, சந்திவெளி, கிரான் போன்ற கிராமங்களில் இதில் கட்டுப்பாடுகளுடன் கூடிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதாவது ஆலயத்திற்கு புதிர் எடுத்ததன் பிற்பாடுதான் வீடுகளுக்குப் புதிர்எடுக்கும் நடைமுறை உள்ளது.

வயல் பிரதேசங்களில் முதலில் அறுவடை செய்பவர் புதிர் எடுக்க விரும்பின் ஆலய பரிபாலன சபைக்குத் தெரியப்படுத்துவர். ஆலய பரிபாலன சபை தீர்மானிக்கின்ற திகதி சுப நேரத்திற்கு எடுத்துவரப்படும், எடுத்து வரப்பட்டதும் பொது மக்களுக்கு நெல் மற்றும் நெற்கதிர்கள் வழங்கப்படும், அவர்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று பூசை அறைகளில் வைப்பார்கள். அன்றைய தினமே கிராமத்துக்குள் விவசாயிகள் அறுவடை செய்கின்ற நெல் கொண்டு வரமுடியும் அதேசமயம் உடனடியாக புது நெல் குற்றப்பட்டு ஆலயங்களில் புதிர்பூசைகள் நடைபெறும். புதிர் எடுப்பவர் ஆலயத்துக்கு ஒரு குறிப்பிட்ட மூடை நெல் வழங்குவார். இந்த நெல் ஆலய பூசகர் ஆலய நிருவாகம், மற்றும் பணியாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும். அவர்களும் அன்றைய தினம் புதிர் உண்ணும் வழமை காணப்படுகின்றது.
இதேவேளை புதிர்உண்ணுதல் எனும் இந்தச் சம்பிரதாயத்தை விவசாய செய்கையில் ஈடுபடாத மக்களும் கடைப்பிடித்தனர். நெல் அரிசி என்பவற்றை பொங்கி ஆலயங்களில் பூசை வழிபாடுகளை மேற்கொண்டு புதிர்உண்ணும் முறையைக் கடைப்பிடித்தனர்.
புதிர் உண்ணுதல் என்னும் போது இறை வழிபாடு, விருந்தோம்பல் என்ற இரண்டையும் பிணைத்து நிற்கின்றது. ஒரு குடும்பம் புதிர் உண்ணுவதென்றால் மிக நெருக்கமான உறவினர்களையும் அன்று வருமாறு அழைப்பர். சமையல் விசேடமாக சமைக்கப்படும். அத்துடன் மா கூழ் காய்ச்சும் பழக்கமும் கிராமப்புற மக்களிடையே காணப்படுகின்றது.
சமையல் வேலை முடிவடைந்த பிற்பாடு ஆலயங்களில் பூசைகள் நிறைவுற்று அந்தப் பூசை பிரசாதப் பொருட்களை வீட்டிற்கு எடுத்து வந்து பூசை அறையில் வைத்து வழிபட்டு முதலில் அந்த பிரசாதங்களை உண்ட பிற்பாடு சமைத்த உணவினை மகிழ்ச்சியோடு உண்பர். அதேவேளை அன்று மாலை வீடுகளில் குல தெய்வ வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
வீட்டு வளவுகளில் சிறு பந்தலிட்டு அதற்குள் காவல் தெய்வங்களாக வழிபட்டு வரும் தெய்வங்களுக்குப் பொங்கலிட்டு மா உரெட்டி சுட்டு படையலிட்டு வழிபாடுகள் செய்யும் வழமை இன்றும் மட்டக்களப்பு மக்களிடையே பாரம்பரியமாக மாறாது கடைப்பிடிக்கப்பட்டு வருவது இம்மாநிலத்தின் சிறப்புக்களில் ஒன்றாக விளங்குகின்றது.
(நன்றி:மட்டக்களப்பு ஈழநாதம் 10-02-2006)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 18 Apr 2024 22:22
TamilNet
HASH(0x55689c20a240)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 18 Apr 2024 22:29


புதினம்
Thu, 18 Apr 2024 22:29
















     இதுவரை:  24778544 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2768 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com