அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 19 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வட்டம்பூ-01   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Saturday, 14 January 2006

01.

பழையாண்டாங்குளத்துக்கும் மேற்கே காட்டின் மேலாகச்  சூரியன் சரிந்துகொண்டிருந்தான். பலநூறு ஆண்டுகளுக்கு  முன்னர் நல்ல நிலைமையிலிருந்த அந்தச் சின்னக்  குளத்தின் கட்டுகள் உடைந்தும், சிதிலமடைந்தும் கிடந்தன.  ஒருகாலத்தில் ஸ்திரமாக இருந்த பெரிய குளக்கட்டில்  பாலையும், வீரையும், வேறு மரங்களும் வளர்ந்து  விசாலித்துக் கிளைபரப்பி நின்றன. அந்தக் காட்டு  மரங்களின் வேர்களும், மேல்கைக் காடுகளிலிருந்து  மழைக்காலத்தில் பெருகிவரும் காட்டாற்று வெள்ளமும்,  குளக்கட்டை உடைத்துச் சிதைத்திருந்தன.
அப்படியானதொரு உடைப்பிலே, உயரே கற்களின் இடையே  தன்னை மறைத்துக்கொண்டு கிடந்தது ஒரு பெரிய  கருஞ்சிறுத்தை. மூக்கு நுனியிலிருந்து வால் முனைவரை  பதினான்கு அடிகள் நீளமான அந்தச் சிறுத்தை, தன்னைச்  சுருக்கி ஒரு பந்துபோல ஆக்கிக்கொண்டு, இரண்டடி  அகலாமான பாறை இடுக்கினில் பதுங்கிக் கிடந்தது. பல  நாட்களாகவே இரை கிடைக்காது வெம்பசியில் வாடியிருந்த  அந்தச் சிறுத்தையின் விழிகள், ஆள் உயரப் புற்கள் மண்டி  வளர்ந்துகிடந்த குளத்தின் மையப்பகுதியையே கவனித்துக்  கொண்டிருந்தன.
அங்கே மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமைகள் தம்  செவிகளை மடித்து நிமிர்த்துவதுகூட, அவற்றைக்  கடந்துவந்த காற்றில் சிறுத்தைக்குக் கேட்டது. நண்பகலில்  இருந்தே அவற்றைக் குறிவைத்துப் பதுங்கியிருந்த அந்தச்  சிறுத்தை, பொழுது கருகையில் அவை தம் தலத்துக்குச்  செல்லும் வழியில் காத்துக் கிடந்தது.
காட்டு விலங்குகளிலேயே மிகவும் மூர்க்கமானது  காட்டெருமைதான்! அசுரபலமும், அதிவெருட்சியும்  கொண்ட காட்டெருமைகள் எப்பொழுதும் சிறு  மந்தைகளாகவே சேர்ந்து வாழும். அந்த மந்தைகளுக்குத்  தலைமை தாங்கும் ஆண் எருமையைக் கலட்டி நாம்பன்  அல்லது கலட்டியன் என்பார்கள்.
இப்போ, பழையாண்டாங்குளத்தில் மேய்ச்சலை  முடித்துக்கொண்டு தமது தலத்தை நோக்கிப் புறப்பட்ட  எருமைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கலட்டியன்,  ஒரு சின்ன யானை அளவுக்குப் பெரியதாக, பருத்து  அகன்று வளைந்த கூரிய கொம்புகளுடன், ஒரு தானைத்  தளபதிக்கேயுரிய மிடுக்கான கம்பீரத்துடன், தன் கூட்டத்தை  வழிநடத்தி வந்துகொண்டிருந்தது. மெல்லோட்டமாக  முன்னே ஓடிவந்து, செல்லும் பாதையைச் சுவடிப்பதும்,  பின்பு தனது மந்தையைச் சுற்றிவந்து கண்காணிப்பதுமாக  கலட்டியன் வந்துகொண்டிருந்தது. காட்டெருமைகள் அருகே  வருவதற்குக் காத்துக்கிடந்த சிறுத்தையின் கவனம்  முழுவதும், அந்தக் கூட்டத்தின் பின்னே, கீரைப்பூச்சி  பிடித்துச் சோகையான காரணத்தினால், தயங்கித் தயங்கிப்  பின்தங்கி வந்துகொண்டிருந்த ஒரு எருமைக் கன்றில்  குவிந்திருந்தது. பெரிய எருமைகளில் வாய்வைத்துத்  துவம்சமாகிப் போவதற்கு அதற்கென்ன பைத்தியமா!
அசைந்து அசைந்து வரும் கருங்குன்றுகள் போன்ற  எருமைகள், அந்த உடைப்பின் வழியாக நெருங்கி  வருகையில், சிறுத்தை தனது வாலை அசைத்து, உடலைச்  சுருக்கி, எருமைக் கன்றின்மேல் பாய்வதற்குரிய  சமயத்தைக் கணித்துக் கிடந்தது. முன்னே வழிநடத்திச்  செல்லும் எருமைகளுக்குச் சிறுத்தையின் மணம் காற்றில்  தெரிவதற்கு முன்னர் அது கன்றைப் பிடித்தாக வேண்டும்!
இதோ, மிகவும் பின்தங்கிவரும் எருமைக்கன்று, இன்னமும்  சில கணங்களில் சிறுத்தையின் இலக்குக்குள் வந்துவிடும்.  அதன்மேல் பாய்ந்து, அதன் குரல்வளையைத்  துண்டிப்பதுடன், மார்புக்கூட்டையும் அறைந்து  பிளந்துவிட்டு, சட்டென மறுபடியும் உயரே பாறைக்குத்  தாவி விடவேண்டும்! சிறுத்தையைக் கண்ட எருமைகள்  வெருண்டு கலவரமடைந்து அந்த இடத்தையே திமிலோகப்  படுத்திவிட்டு, இருட்டியதும் தமது தலத்துக்குச்  சென்றுவிடும். அதன்பின் ஆறுதலாகக் கீழே இறங்கிவந்து,  அதன் ஈரலையும், குடல் போன்ற மென்மையான  பாகங்களையும் குருதிதோயச் சுவைத்து..
நாவில் ஊறிய நீர் சொட்ட, வில்லிலிருந்து விடுபட்ட  அம்புபோல் எகிறிப் பாயந்த சிறுத்தை, நொடிப்  பொழுதுக்குள் கனகச்சிதமாகத் தன் வேலையை முடித்து  விட்டுச் சட்டென உயர எம்பிப் பாறையில் தாவியபோது,  அசந்தர்ப்பமாக அந்தச் சிறுபாறை பெயர்ந்து  சிறுத்தையுடனேயே தரையில் வந்து விழுந்தது.
இதற்குள் அந்த இடத்திற்குப் புயலாக விரைந்து வந்த  கலட்டியன், சிறுத்தை சுதாரித்துக்கொண்டு எழுவதற்கு  முன்பே, வஜ்ஜிராயுதம் போன்ற தன் கொம்புகளால் அதைத்  தாக்கியது. அடிக்கடி ஆற்றுமணலிலும், கடினமான  கறையான் புற்றுக்களிலும் உராய்ந்து கூர்மை பெற்றிருந்த  கலட்டியனின் கொம்புகள், நீண்ட உடலைக்கொண்டிருந்த  சிறுத்தையைக் குத்திக் கிழித்துக்கொண்டு மறுபுறம் குருதி  கொப்பளிக்கப் புறப்பட்டன.
பயமும், வெருட்சியும், மூர்க்கமும், வெறியும் கொண்ட  கலட்டியன், தன் கொம்பிரண்டிலும் சிக்கிக்கொண்ட  சிறுத்தையை அகற்றிவிடுவதற்காகத் தனது மத்தஜம்  போன்ற தலையை உலுப்பியபோது, உயிரற்ற சிறுத்தையின்  உடல், இன்னும் வசமாகவே சிக்கிக்கொண்டது.
இந்தப் போராட்டத்தில் சிறுத்தையின் ஆக்ரோஷமான  உறுமல்களும், கலட்டியனின் வெருட்சி நிறைந்த  முக்காரமுமாக அந்த இடமே திமிலோகப்பட்டது.  கலட்டியனின் எருமைக்கூட்டம் சிதறியோடிவிட்டது.  கலட்டியனோ தன் கொம்புகளில் சிக்கிக்கொண்ட அந்தக்  கருஞ்சிறுத்தையின் நெடிய உடலைச் சுமந்தவாறே காடு  கரம்பையெல்லாம் பாய்ந்து, அதை அகற்றிவிடப்  படுபிரயத்தனம் செய்துகொண்டது.

(வளரும்)


     இதுவரை:  24782877 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5897 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com