அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 25 July 2024

arrowமுகப்பு arrow செய்திகள் arrow உலா arrow தமிழர் விளையாட்டுவிழா 2005
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தமிழர் விளையாட்டுவிழா 2005   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: முகிலன்  
Saturday, 09 July 2005

கூடிக் கூழ் குடித்து,
ஆடிப்பாடி விளையாட
ஒன்றுகூடிய தமிழர்கள்!
பாரீஸ் - தமிழர் விளையாட்டுவிழா 2005-

'ஞாயிற்றுக் கிழமைகளில் அந்த சனங்கள் பத்து  மணிவரையிலும் தூங்கிக் கொண்டிருப்பார்கள்....'
நூறாண்டு கண்டு உலகின் பரவலான வாசிப்பைப் பெற்ற  கார்க்கியின் நாவலான 'தாய்' நாவல்விபரிக்கும் காட்சி இது. இது  இன்றளவும் ஐரோப்பாவில் பொருந்துவதை இலக்கியச்சுவையாக  இரசிக்கலாம். இதுமட்டுமல்ல அந்த நாவலில்,
'..... தொழிற்சாலை யந்திரங்கள் தேவையான மட்டும்  தொழிலாளர்களது சக்தியை உறிஞ்சித் தீர்த்துவிடுவதோடு அந்த  நாள் விழுங்கப்பட்டுவிடும். எந்தவொரு  எச்சமிச்சங்களுமில்லாமல் அன்றைய பொழுது அழிந்து கழியும்.  மனிதனும் தனது சவக்குழியை நோக்கி ஓரடி  முன்னேறிவிடுவான். ஆனால் இப்போதோ ஓய்வின் சுகத்தையும்,  புகைமண்டிய சாராயக்கடையின் சந்தோசத்தையம் அவன்  எதிர்பார்ப்பான் ....' என்றவாறாக அந்நாவலில் வர்ணிக்கப்படும்  நாட்பொழுது இன்றளவும் எம்முடனும் பொருந்துவதை  இரசிக்காமல் இருக்க முடியாது. நாவலின் காலம் கடந்து 100  ஆண்டுகள் ஆகி, உலகம் தொலைத்தொடர்பிலும்,  போக்குவரத்திலும், விஞ்ஞான-தொழிநுட்பத்திலும், புதிய  உற்பத்திமுறைமைகளிலுமாக.... பல சாதனைகளைக்  கண்டிருந்தாலும் சாதாரணனின் வாழ்வோட்டம் ஒப்பீட்டளவில்  இரசனைக்குரியதாகவே இருக்கிறது. இதை புலம்பெயர்வாழ்வில்  இணைந்த முதல்தலைமுறைத் தமிழரின்; பதிவுகள் பல  சொல்வதைக் காணலாம். இதில் மேலதிகமாக ஞாயிறு  மாலையில், புதிய கொடுக்கல்-வாங்கல் பழக்கமாகிய  மொய்ச்சடங்குகளில் பங்கேற்பதை பிற்சேர்க்கையாக  இணைத்தால் போதும் இன்றைய புலத்தமிழரின் ஞாயிறு  பதிவாகிவிடும்.
 
ஆனாலும், காலங்கள் கரைய ஐரோப்பாவிலும், அமெரிக்க-  அவுஸ்திரேலியக் கண்டங்களிலும் புதிய ஒன்றுகூடலை  நிகழ்த்தத் தொடங்கி உலகத்தின் பார்வையைப்  பெறவைத்தவர்கள் புலம்பெயர் ஈழத்தமிழர். இதில் இன்றைய  புதிய கலாச்சாரமாகியுள்ள 'மாவீரர் தினம்' முக்கிய சான்றாகும்.  வீரமறவர்களை வணங்கும் தமிழர்களின் தொல்மரபை மீண்டும்  தொடரத்தொடங்கியது தமிழரின் முதுகெலும்பு நிமிரும்  படிமுறையாகியது. இதன் தொடராக மூலத்தேடலும்  புத்துயிர்பூட்டலுமான சுயஅடையாளத்தை தக்கவைக்கும்  நிகழ்வுகள் இணையத்தொடங்கின.

பிரதேச மற்றும் மத நிகழ்வுகளாகவும், சடங்குகளாகவும் குறுகிப்  பிளவுண்டுள்ள தமிழர்களுக்கு தமிழால் ஒன்றிணையும் முக்கிய  நிகழ்வாவது ‘தமிழர் திருநாள்’ எனப்படும் தைப்பொங்கல்  தினமாகும். இரண்டாவது தமிழரின் வீரமரபைப் பேணும்  நிகழ்வாக அமையும் ஆடிப்பிறப்பாகும். புலத்தில், இந்த ஆடி  மாதத்தையொட்டியதாக ஒழுங்கமைக்கப்பட்ட ‘தமிழர்  விளையாட்டு விழா’ உலகெங்கும் வாழும் எம் தமிழ் உறவுகளை  நாடு, பிரதேச, பால், வயது வேறுபாடுகளில்லாது துடிப்புடன்  ஒன்றுகூட வைக்கிறது. இந்த வகையில்தான், எட்டாவது  தடவையாக பாரீஸில் நடந்த தமிழர் விளையாட்டு விழாவை  காணமுடிந்தது.

சென்ற வாரந்தான் வானூர்திக் கண்காட்சியாக மக்களால்  அலைமோதிய திடல் இன்று தமிழர்களால் நிரம்பியது.  வாசலிலேயே அக்கறையான கவனிப்புடன் சீருடை தரித்த  செயற்பாட்டுத் தொண்டர்கள் வரவேற்றார்கள். கனல் கக்கும்  வெயிலையும் பொருட்படுத்தாத இவர்களது சீரான  வழிகாட்டுதல்கள் மகிழ்வூட்ட உள்நுளைகிறோம். சிற்றூர்தி  தரிப்புக்காக ஒரு சுற்றையே மேற்கொள்ள வேண்டியிருந்தது.  ஒருவாறு இடம்பிடித்து மெல்ல நடக்கிறோம். தலை தானாவே  சுழன்று முதல் நோட்டத்தைப் பதிக்கிறது. வெறுங்கையுடன் புலம்  பெயர்ந்து, பாரிசில் மட்டும் குந்திய எம்மவர்களுக்கு இவ்வளவு  வாகனங்களா?  முதல் தலைமுறையுடன் அடுத்த தலைமுறை  பொறுப்பேற்கும் மூன்றாவது தசாப்த காலத்தில் ஒருங்கே  காணுற்ற வாகனங்கள் எம்மவர்கள் உழைப்பின் மகிமையை  மிடுக்குடன் பகன்றது.

தேசங்கடந்தோராக, மூத்தோர்-இளையோர்-சிறார் எனப் பருவம்  கடந்தோராக, ஆண்-பெண் எனப் பால்பேதம் கடந்தோராக,  தொழில்முனைவோர்-தொழிலாளி என வர்க்கபேதம் கடந்தோராக,  அங்கொன்றும் இங்கொன்றுமாக வேற்றின கைகோர்ப்புடன்  சிலருமாக  திரும்பிய பக்கமெங்கிலும் மக்கள் கூட்டம். அதிலும்  பல்வேறு நிகழ்வுகளுக்கும் கிரமமாகச் சென்று வரும்  என்போன்றவர்களால் அடையாளம் காணமுடியாதஅதிக புதிய  முகங்கள்.

சீரான உடையணிந்த நம் இளையோரது மிடுக்கான பணிகள்  முதல் பார்வைக்குள்ளானது. கடற்கோள் தொண்டுக்காக  பணியாற்றி உலகின் கவனத்தை ஈர்த்த தமிழர் புனர்வாழ்வுக்கழக  உறுப்பினர்கள் அணிந்திருந்த பசுமையானமஞ்சள் மேலங்கி  அனைவரையும் சுண்டியிழுத்தது. எந்த முகத்திலும் மகிழ்ச்சி...  மிடுக்கான நடை.... சிறார்களின் கும்மாளம்.... நண்பர்களின்  கூடல்... பாரம்பரிய விளையாட்டுகள்.... மக்கள் வெள்ளம்  மொய்க்கும் உணவகம்..... சிற்றங்காடிகள்..... ஆடல் பாடல்  நிகழ்வுகள்.... பரிசுகளுக்கான அறிவித்தல்கள்..... தம்முடன்  வந்தோரைத் தேடுவோர்.... எனக் களைகட்டியிருந்தது திறந்த  வெளி!

தாச்சிப்போட்டி, பெண்கள் உதைபந்தாட்டம், கயிறிழுத்தல், கரம்  போட்டி, சிறுவர் போட்டிகள், மெதுவான ஈருருளி ஓட்டம், முட்டி  உடைப்பு, வழுக்குக் கம்பம் ஏறல், தலையணைச் சண்டை,  சங்கீதக் கதிரை, மூன்றுகால் ஓட்டம்...... எனப்பல  விளையாட்டுகள் வேடிக்கை பார்க்கும் கூட்டம்  வட்டமாகக்குழுமியிருக்க ஆங்காங்கே நடைபெறுகின்றன. தவிர  சிறுவர்கள் துள்ளிவிளையாடும் காற்றடித்த துள்ளுமெத்தைகள்.  நடனங்கள், பாடல்கள்... அதிலும் பறை முளங்க தாளக்கட்டுடன்  ஆடல்...... 

சும்மா சொல்லக்கூடாது திறந்தவெளியில், குழுமியிருந்து  கூட்டாஞ்சோறு உண்ணும் மனோபாவத்துடன் நண்பர்கள்,  உறவினர், குடும்பத்தினர் குழுக்களாகி கூழும், கொத்துரொட்டியும்  சாப்பிடும் சுகமான அனுபவம்.... இதனை அனுபவித்தவாறு  பார்க்குமிடமெல்லாம் சிறு சிறு குழுக்கள். தாம் விரும்பும்  உணவைக் கேட்டு அடம்பிடிக்கும் சிறார்களும், சிறார்கள்  வழிகாட்ட பின்தொடரும் பெற்றோருமாக ஒரே குதூகலம்.

ஆறு வருடங்களின் முன், நாங்கள் பிறஸ்ட (Brest)  நகரிலிருந்தபோது இலண்டனில் நடந்த தமிழர்  விளையாட்டுவிழாவை ஐபிசி வானொலியில் வார்த்தைகளால்  வர்ணித்து மெய்சிலுக்க வைத்த தார்சீசியஸ் ஐயா... சிறு வயதில்  முற்றவெளியில், ஆ ஆ வென்று வாய் பிளக்கப் பார்த்த தினகரன்  விளையாட்டு.... இன்னும் சிறு பிராயத்தில் நாரந்தனை கந்தசாமி  கோயில் திருவிழாவில் இரவு முழுக்க நடந்த வைரமுத்துவின்  கூத்துக்கு வண்டிலில் பாயோடு கட்டுச்சோறும் கொண்டுபோன  என் குடும்பம்.... சிலம்படியும், கூத்தும், கரகாட்டங்களும், காளை  ஓட்டங்களும், சீனடி-சிலம்படி வித்தைகளும், ஆடிக் கூழும், தூர  இடங்களிலிருந்து வந்து ஆணந்தமாகக் கூடிமகிழும் எம்  பாரம்பரிய மூதாதைகள்... என நினைவுகள் சுழல்கின்றன.

பாரிசில் கோடைகால விடுமுறையில் பந்தன் திறந்தவெளி  தரைஅரங்கில் பிரெஞ்சு மக்கள் இலவச சினிமா பார்க்கும்  நிகழ்வு மனதில் அசைகிறது. நாமும் இப்படியாக நம்மவர்  பத்தாயிரக்கணக்கில் கூடும் நாளில் இரவுக்காட்சியாக எம்மவர்  சினிமாவையும் காட்டினால்...... எண்ணமே இனிக்கிறது.
03. 07. 2005 ஞாயிறு

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(3 posts)


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 25 Jul 2024 02:52
TamilNet
HASH(0x556e38eeef28)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 25 Jul 2024 02:52


புதினம்
Thu, 25 Jul 2024 02:52
     இதுவரை:  25413779 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 9333 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com