அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 18 September 2020

arrowமுகப்பு arrow இலக்கியம் arrow பிரெஞ் படைப்பாளிகள் arrow ஆந்த்ரே ஜீத் (1869-1951): ஒரு அறிமுகம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஆந்த்ரே ஜீத் (1869-1951): ஒரு அறிமுகம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: க.வாசுதேவன்  
Thursday, 16 June 2005
பக்கம் 1 of 3

"இதயத்தின் கட்டளைக்குப் பணிந்து, இயற்கையுடன் இசைந்து, எளிமையுடன் இன்புறும் வாழ்வையன்றி வேறெதை உனக்குரைப்பேன்"
அதியற்புத மொழிப் பிரயோகம், சமகாலத்திற்குப் புதுமையான எழுத்து நடை, கருத்தியற் தத்துவ ஆழம், உறுதியும் நேர்மையும் கூடிய சிந்தனைப்போக்கு போன்றவை ஒருங்கிணைந்து, ஆந்த்ரே ஜீத்தை பத்தொன்பதாம்- இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்கவொரு எழுத்தாளராக உயர்த்தியது மட்டுமன்றி, 1947இல் அவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசையும், இன்னும் பல நியாயமான பரிசில்களையும் பெற்றுத் தந்தன.
 
1869 நவம்பரில் பாரிஸில் ஆச்சாரம் நிறைந்த பூர்சுவாப் புரட்டஸ்தாந்துக் குடும்பம் ஒன்றில் பிறந்த ஆந்த்ரே ஜீத்தின் இளமைக்காலம் இறுக்கமான மதபோதனையில் ஆரம்பிக்கின்றது. "என்னை எபிராய மக்களெனக் கருதி, ஆரம்பத்தில் ஆச்சார விதிகளைக் கடைப்பிடித்தால் மட்டுமே பின்னர் ஆண்டவனின் ஆத்மீகக் கருணையில் மூழ்கலாம் என என் தாய் கூறினாள்." என ஜீத் பிற்காலத்தில் கூறியது குறிப்பிடத் தக்கது. மதச்சுமையில் இளமைக்காலத்தில் நசுங்கியவர்கள், அறிவெட்டும் வயதில் அதை வெறுப்பது வழமையானதாகையால், ஜீத்தும் இதற்கு விதிவிலக்கானவராயிருக்கவில்லை. மதாச்சாரக் கெடுபிடிகளுக்கெதிராகவும், அக்கால அறவியல் தடைகளுக்கெதிராகவும் கூர்ப்பான இலக்கியப் படைப்புகளை அவர் முன் வைத்தமை இளமைக்கால வாழ்வின் எதிரொலியே அன்றி வேறல்ல. குறிப்பாக "வத்திக்கானின் நிலவறை" என்ற நாவல் இதை உறுதி செய்கின்றது.
 
இளமைக் காலத்தில் தாய்க்குக் கீழ்ப்படிவற்ற சிறுவனாக இருந்த ஜீத், தகப்பனுடன் கொண்டிருந்த நட்புறவு காரணமாக குடும்ப ஒட்டுணர்வில் காணப்பட்டார். இருப்பினும் "இவ்வுலக ஊட்டங்கள்" என்ற தனது நூலில் குடும்பம் என்பதை தனிமனித வளர்ச்சிக்கும், அவனது ஆன்மீக ஈடேற்றத்துக்குமான தடையாக வருணித்து "குடும்பங்களே, நான் உங்களை வெறுக்கிறேன்" என்றும் கூறியுள்ளார்.
ஜீத்தின் முதற் பாடசாலை அனுபவமும் விசித்திரமானது. ஆசிரியர்களினால் மடையன் என்று கருதப்பட்ட சிறுவன், இயற்கையை ரசிப்பதில் காட்டும் ஆர்வம் வேறெதிலும் காட்டவில்லை. மூன்று மாத காலமாகப் பாடசாலையை விட்டே விரட்டியடிக்கப்படுகிறான். ஒழுக்கமற்றவன் என்ற முத்திரை வேறு குத்தப்படுகின்றது. "பாடசாலைக்குச் சென்று தூக்கம் செய்தேன். இன்னமும் பிறக்காத குழந்தையைப் போன்று அங்கு நான் இருந்தேன்." என்று தனது குறிப்பேடுகளில் ஜீத் குறிப்பிட்டுள்ளார். சித்தியடையாத காரணத்தால் ஒரே வகுப்பை இரண்டு தடவை மீளப் படிக்கவேண்டிய நிலையும் ஜீத்திற்கு ஏற்பட்டது. ஏழைகள் என்று சக மாணவர்கள் யாரும் தம்மை உணரக் கூடாதென்பதற்காக, தனது மகனையும் எளிமையாக ஆடை அணிவித்துப் பாடசாலை அனுப்பிய தனது தாயின் செயல்மீது ஜீத்திற்கு வெறுப்பிருந்தது. ஒரு முழு மனிதனாக வளர்ந்த பின்னரே சாதாரணமாக ஆடையணியும் வாய்ப்புத் தனக்குக் கிடைத்ததெனவும் ஜீத் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மைப் புரட்டஸ்தாந்து மதத்தவர் மீதான பெரும்பான்மைக் கத்தோலிக்கர்களின் துன்புறுத்தல்களால் உளநிலை பாதிக்கப்பட்டு, பாடசாலையின்மீதான வெறுப்பு உண்டானது மட்டுமன்றி, அதுவே ஆந்த்ரே ஜீத்தை நோயாளியாகவும் மாற்றியது. பாடசாலை முடிந்தவுடன் அவமதிக்கப்பட்டு, கத்தோலிக்கச் சிறுவர்களால் சேறடிக்கப்பட்டும், மூக்கால் இரத்தம் வழியவும் வீடு வந்த சிறுவன் ஆந்ரே ஜீத், எதற்காக தான் எல்லோரைப் போலவும் இல்லையென்று தாயைக் கேட்டானாம்.

வருடாவருடம் புத்தாண்டு விழாவைக் கொண்டாட மாமா எமில் வீடு செல்லும்போது, தனது மூன்று மச்சாள்களில் ஒருத்தியான மதலன ;மீது ஜீத்திற்கு அன்பு முகிழ்கின்றது. தனியாகத் தனது அறையில் அழுது கொண்டிருக்கும் அவளின் சோகச் சுமையைத் தணிக்க எண்ணிய ஜீத் அதன் காரணத்தை அறிய முற்பட்டு அறிந்து கொள்கிறார். தந்தையறியாமல் தனது தாய் இன்னுமொரு ஆடவனுடன் கொண்ட கள்ள உறவை நேரில் கண்ட வேதனையை மதலன் பகிர்ந்து கொள்கிறாள். இருவருக்குமிடையிலான அன்பை இது பலப்படுத்துகின்றது. 1888இல் உயர்கல்வி பெறுவதற்காக, பாரிஸின் புகழ்பெற்ற "நான்காம் ஹென்றி கல்லூரி" யில் இணைந்த ஜீத்திற்கு புதிய அறிமுகங்கள் கிடைக்கின்றன. இதன்போதுதான் ஜீத்திற்கு முதலாவது இலக்கிப் படைப்பிற்கான திட்டம் மனதில் எழுகின்றது.
அதாவது, "ஆந்த்ரே வல்த்தயரின் குறிப்புகள்" என்ற புத்தகத்தை எழுதிப் பிரசுரித்து, அதன் பின்னர் மதலனை மணம் முடிப்பது. மச்சாளைத் திருமணம் செய்வது பிரெஞ்சுச் சமூக வழக்கங்களுக்கு முரணானது என்ற வகையில், அதை மறுத்து அவ்வாறான திருமணத்தை நியாயப்படுத்தி, மதலனின் மனதைக் கவரவும், தாயின் மறுப்பை மாற்றவுமே படைப்பின் கருப்பொருள் தெரிவு செய்யப்பட்டது. தனது சக கல்லூரி நண்பனான பியர் லூயிஸ் இடமும் இறுக்கமான நட்பை வளர்த்துக்கொண்ட ஜீத், தனது திட்டத்தை அவனுடன் பகிர்ந்து ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்கிறான்.

1891இல் புனைபெயரில் பிரசுரமான "ஆந்ரே வல்த்தயரின் குறிப்புகள்" படுதோல்வியை அடைகின்றன. ஒஸ்கார் வைல்டுடன் ஏற்பட்ட சந்திப்பானது, ஜீத்தின் வாழ்க்னையில் பெருமாற்றத்தை ஏற்படுத்தியது. தீவிர இலக்கிய ஈடுபாட்டுடன் ஆரம்பித்த "சாம்பாறு", பியர் லூயிஸ்சின் தலைமையிலான "சங்கு" போன்ற சஞ்சிகை வெளியீடுகள் ஜீத்தின் இலக்கியப் பரப்பை விரிவடையச் செய்கின்றன.
இத்தாலிக்கும் பல ஆபிரிக்க நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு, பல அனுபவங்களைப் பெற்று மீண்டும் தாயின் சுகவீனம் காரணமாகப் பாரிஸ் திரும்பிய ஜீத், தாயின் மரணத்தின் பின் சில வாரங்கள் கழித்து மதலனைத் திருமணம் செய்து கொள்கிறார்.
1887இல் வெளியாகிய "இவ்வுலக ஊட்டங்கள்" எனப்படும் கவித்துவம் கவிந்த இலக்கியப படைப்பு ஜீத்தின் இலக்கிய வாழ்வின் உறுதியான ஆரம்பத்தை அறிவிக்கின்றது. அது மட்டுமன்று இந்நூலில் வாழ்க்கை பற்றியதும், அறிவியல் பற்றியதுமான தனது கோட்பாடுகளைத் தயவு தாட்சண்யமின்றி, புதுவித எழுச்சிப் பாணியில் ஜீத் முன்வைக்கின்றார். இருபதாம் நூற்றாண்டின் பிரெஞ்சு இலக்கியப் படைப்புகளில் முக்கியமானவைகளில் இதுவுமொன்றாகும். நீட்சேயின் "அவ்வாறு கூறினான்; ஸரத்தூஸ்த்ரா" என்ற நூலைப் படித்த பின்னர் உருவாகும் அதே புத்துணர்வு, ஜீத்தின் "இவ்வுலக ஊட்டங்கள்" அதன் பின்னிணைப்பான "புதிய ஊட்டங்கள்"என்பவற்றை வாசித்த பின்னர் உருவாகின்றது. "உனக்கு நான் உயர் மானிடத்தை உபதேசிக்கிறேன்" என்று ஸரத்தூஸ்த்ரா மூலமாக அழைப்பு விடும் நீட்சேயைப் போலவே, "உனக்கு நான் உத்வேகத்தை உபதேசிக்கிறேன், நத்தநாயல்" என்று ஜீத் அழைப்பு விடுக்கின்றார். கடினமான தத்துவப் பின்னணியில் கடைந்தெடுத்த நீட்சேயின் நூலும் இலகுவான பாணியில் இயல்பாகத் தோன்றிய ஜீத்தின் நூலும் இங்கு ஒன்றிணைகின்றன என்றால் அது மிகையானதல்ல. தொடர்ச்சியான பல இலக்கியப் படைப்புகள் ஜீத்தின் இலக்கிய ஆளுமையை வெளிக் கொணர்கின்றன. 1899இல் வெளியான "உறுதியாகப் பிணைக்கப்படாத புரொமெத்தேயுஸ்" என்னும் நாவல் பிரபல கத்தோலிக்க எழுத்தாளரான போல் குளோடலுடன் நீண்ட கடிதத் தொடர்பை உருவாக்குகின்றது. ஜீத்தையும் கத்தோலிக்கராக மதமாற்றம் செய்ய விரும்பும் குளோடலின் பிரயத்தனங்களும் வாதங்களும் பலனற்றுப் போகின்றன.
 
1908இல் ஜீத்தின் இலக்கிய நண்பர்கள் ஒருங்கிணைந்து "புதிய பிரஞ்சு சஞ்சிகை" என்ற வெளியீட்டை உருவாக்குகின்றார்கள். 1914இல் வெளியான ஜீத்தின் "வத்திக்கானின் நிலவறை" என்ற நாவல் அவருடனான அனைத்துக் கத்தோலிக்கரினதும் உறவுகளைத் துண்டிக்கின்றது. போல் குளோடலுடனான உறவும் துண்டிக்கப்படுகின்றது. எலிசபெத் என்னும் பெண்ணுடனான உறவில், 1922இல் கதறின் என்னும் ஒரு பெண் குழந்தைக்கு ஜீத் தந்தையாகின்றார். இலக்கியப் புகழின் உச்சியில் நிற்கும் ஜீத்தின் படைப்புகள் தொடர்ந்து வெளியாகின்றன. தனது புத்தகங்களில் ஒரு பகுதியை விற்பனை செய்துவிட்டு, மீண்டும் பயணங்கள் தொடர்கின்றார். பிரெஞ்சுக் காலனித்துவ நாடான கொங்கோ, சாட் போன்ற நாடுகளுக்கப் பயணம் செய்த ஜீத் காலனித்துவத்தின் இரக்கமற்ற, மனிதாபிமானமற்ற சுரண்டலைக் கண்டித்து கட்டுரைகள் வரைந்தார்.

1915இல் பல்கேரிய கம்யூனிஸ்டான டிமித்ரோவின் விடுதலை கோரி, ஆந்த்ரே மல்ரோவுடன் இணைந்து பேர்லினில் வெளியிட்ட கோரிக்கை ஜீத்தின் முதலாவது நேரடி அரசியல். முதலாளித்துவத்தின் தீங்குகளை எதிர்த்து, கம்யூனிசக் கொள்கையின் பாலான நாட்டமும், சோவியத் யூனியனின் அரசியல் போக்கிற்கான ஆதரவும்கொண்டிருந்தபோதும், தான் கார்ல் மார்க்சினால் கவரப்பட்டல்ல, சுவிசேச நற்சிந்தனைகளினால் தள்ளப்பட்டே கம்யூனிஸ்ட் ஆனேன் என பிற்காலத்தில் குறிப்பிட்டார். இறுதியில் தன் கம்யூனிச ஆதரவைக் கைவிடுகின்றார். வைபவரீதியாக சோவியத் அரசினால் வரவேற்கப்பட்ட ஜீத், கோர்க்கியின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டு செஞ்சதுக்கத்தில் ஆற்றிய உரை உலகப்புகழ் பெற்றது. மீண்டும் பிரான்ஸ் திரும்பி, ஸ்டாலினின் போக்குகள்மீதும், சோவியத் அரசின் சர்வாதிகாரத்தின்மீதும் 1936 இல் ஜீத் எழுதிய கட்டுரை அக்காலத்தில் பெருத்த எதிரொலியை உருவாக்கியது மட்டுமன்றி அவருக்குப் பல பகைமையையும் தேடித் தந்தது. பல சமகாலப் புத்தி ஜீவிகளுடன் கடூரமாக முரண்பட்டு, நேர்மையுடனும் துணிவுடனும் ஸ்டாலினியத்தை எதிர்த்த ஜீத்தின் போக்கானது அவரைக் கடிந்து கொண்டவர்களாலும் காலந் தாழ்த்திப் புகழப்பட்டது.
1947இல் ஒக்ஸ்போட் பல்கலைக்கழக "கௌரவ டாக்டர்" பட்டத்தையும், பின்னர் அதே ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசையும் ஜீத் பெற்றுக் கொண்டார். 1951 பெப்ரவரியில் ஜீத் காலமானார். 1952 ஏப்ரலில், ஜீத்தின் ஆக்கங்கள் அனைத்தும் தகாதவையென கத்தோலிக்க உயர்பீடம் பிரகடனம் செய்தது.
மேலும் சில...
அல்பிரட் து மியூசே
குயிஸ்தாவ் ப்ளோபேர்
எமில் ஸோலா
விக்டர் ஹியூகோ
சபிக்கப்பட்ட கவிஞன் ஷார்ல் போதலயர்.
பல்ஸாக் அல்லது நுண்விபரிப்பின் அறுதிப் பலம்.

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 18 Sep 2020 15:58
TamilNet
Without imposing a robust follow-up on the unitary state of genocidal Sri Lanka, which withdrew its support to UN Human Rights Resolution 30/1 that failed to address genocide justice, international investigations and ensure the collective rights of the people of the occupied traditional Tamil homeland in the North-East, UN High Commissioner for Human Rights Michelle Bachelet was just “encouraging” the Council to “give renewed attention to Sri Lanka, in view of the need to prevent threats to peace, reconciliation and sustainable development.”Ms Bachelet was only referring to “commitments”made by the Rajapaksa regime “since it withdrew its support for resolution 30/1”.
Sri Lanka: UN Rights Chief joins her predecessors in watering down collective rights of genocide affected people


BBC: உலகச் செய்திகள்
Fri, 18 Sep 2020 15:58


புதினம்
Fri, 18 Sep 2020 15:26
     இதுவரை:  19645472 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6118 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com