இயக்குநர் பரா`வின் பேரன் பேர்த்தி
|
|
|
|
எழுதியவர்: க.முகுந்தன்
|
|
|
Wednesday, 15 June 2005
11-06-2005 சனிக்கிழமை பிற்பகல்.
பாரிஸ் நகரின் வட - கிழக்கு புறநகரான பொன்டி(Bondy) நகரின் நகரசபை விழா மண்டபம். அளவில் பெரியதான மண்டப மேடையில் வெண்திரை சிரித்தவாறு வரவேற்கிறது. சுமார் 150 இருக்கைகள் வரிசையாக அடுக்கப்படடிருக்கின்றது. ஒலிவாங்கியும், ஒளிப்புறத்தெற்றியும் (Projecter) சரிபார்க்கப்பட்டுக்கொண்டிருந்தன. ஒருவாறு புகலிடத் தமிழரின் கலாச்சாரப்படி அரைமணித்தியால தாமத்தில் அரைவாசி இருக்கைகள் நிரம்புகினறன. திருமதி சரோ பாலகணேசன் மங்கள விளக்கேற்ற, அமைதி வணக்கத்துடன் நிகழ்வை ஆரம்பித்து வைக்கிறார் மாணி.நாகேஷ்.
நிகழ்ச்சி நிரல் நகரத்தொடங்கியது: -பற்று -அநாமதேயன் (பேச்சுகள், பரிசு வழங்கள், கெளரவிப்புகள். இடைவேளை.) -மறுமுகம் -பேரன் பேர்த்தி
வெளிச்சத்தில் அரங்கம் மீள பார்வையாளரின் கண்கள் பனித்திருந்தன. இயக்குநர் பராவும், மூத்த கலைஞர் ரகுநாதனும் பார்வையாளரின் கைகுலுக்கள் அணைப்புகளால் திண்டாடிக்கொண்டிருந்தனர்.
இறுதியாக கலந்துரையாடல். ஆவலுடன் பார்வையாளரின் மனந்திறந்த கருத்துக்களைப்பெற ஒலிவாங்கி அங்குமிங்குமாக நகருகின்றது. குழந்தைகள், சிறாருடன் வநதிருந்த சிலர் வேகமாக வீடு திரும்புகின்றனர். எஞ்சியோர் வட்டமாக அமர்ந்து கருத்துக்களை கூற முன்வருகின்றனர். முகுந்தன் நெறிப்படுத்துகின்றார். எல்லோரது கவனத்தையும் 'பேரன் பேர்த்தி' முழுமையாக ஆகர்சித்திருந்ததை கருத்துக்கள் வெளிப்படுத்தின.
பேரன் பேர்த்தி, புகலிட தமிழ்ச்சினிமாவில் திரைக்கதைத் தேர்வில்,ஒளிப்பதிவில், காட்சிசட்டக அமைப்பில், பாடலில், தொழில் நுட்பத்தில், பாத்திரங்களின் நடிப்பில், சினிமாமொழியில் என பல அம்சங்களில் இயக்குநரின் உழைப்பை சிறப்புற வெளிப்படுத்தி நின்றதால் பரா அவர்கள் 'இயக்குநர் பரா'வாகி பாராட்டு மழையால் குளிர்ந்தார்.
'22ஆயிரம் அடிகளில் படமாக்கி மிகவும் சிரமப்பட்டும் சொல்ல முடியாமல் தவிக்கும் சினிமாக்களுக்கு மத்தியில் வெறும் 22 நிமிடங்களில் புகலிட வாழ்வின் தமிழ் உறவாடலைக் கதைக்கருவாக்கி அற்புதமான படைப்பாக தந்துள்ளவர் பரா..' மனம் நெகிழ்ந்தார். இந்த விழாவில் கெளரவிக்கப்பட்ட ஈழத்து முதுபெரும் கலைஞர் முகத்தார் யேசுரட்ணம். இந் நிகழ்வில் இவரை பொன்னாடை போர்த்தி கெளரவித்தவர் புகலிடத்தின் இளந்தலைமுறைக் கலைஞனான வதனன். இது கலைஞர்கள் தலைமுறை இடைவெளி இல்லாது கலந்துள்ளதை பறைசாற்றி நின்றது.
நம்மவர் சினிமா முயற்சிகளை மக்கள் மத்தியில் காட்சிப்படுத்த தங்களாலான ஒத்துழைப்பை பிரான்சில் உள்ள சங்கங்கள் வழங்க வேண்டுமென்றும், அச்சங்களின் ஊடாக மக்களிடம் திரைக்கலை இரசனையை வளர்க்கும் சலனத்தின் முயற்சிகளுக்கு உதவ முடியுமெனவும் தனது சிறப்புரையில் குறிப்பிட்டார் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் சிவா சின்னப்பொடி.
'புகலிட வாழ்வின் சிரமங்களுக்கு மத்தியில் கலைப்பணி ஆற்றிவரும் இந்த கலையார்வலர்களின் அயராதபணி மென்மேலும் வளர்த்தெடுக்கப்படவேண்டும். புகலிட நாட்டிலுள்ள தொழில்நுட்ப அறிவை இளந்தலைமுறையினர் பெற்று நாட்டில் உள்ள கலைஞர்களுக்கு வழங்கி கலையால் உயரும் புதிய சமூகமாக திகழ வேண்டும்' என தனதுரையில் குறிப்பிட்டார் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட புலிகளின் குரல் வானொலியின் பொறுப்பாளர் தமிழன்பன்.
இத்திரைக் கலை முயற்சியில் பங்கேற்ற ஆறு சிறார்களுக்கு சலனம் வழங்கிய சிறப்பு சான்றிதழை இவர் கையளித்து கெளரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழ் தேசியம் எழுச்சி கொள்வதற்கு எம்மவர்களின் கலைமுயற்சிகள் பெருமளவில் வீரியம் பெறவேண்டும். கடந்த காலஙகளில் ஈழத்து கலைகள் படைப்புகள் நசிவுற்றதற்கு தென்னிந்திய வணிகக் படைப்புகள் ஒருவழிப்பாதையாக வந்து குவிந்தது மிகமுக்கிய காரணமாக இருந்ததை மறந்துவிடலாகாது என்றார் சமூக ஆர்வலர் கி.பி.அரவிந்தன்.
தன்னிடமிருந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்த பரா தந்த ஊக்கத்தை உற்சாகமூட்டலை நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினார் லீனா ஜெயக்குமார். இப்படியான முயற்சிகள் தொடர நிதியமொன்று உருவாக்கப்பட வேண்டும். குறைந்தது 1000 ஈரோக்கள் முதலிடக்கூடிய சமூக ஆர்வலர்கள் முன்வரவேண்டும் என்றார் ஜெயக்குமார்.
'பல்வேறு நிகழ்வுகளை திரைப்படங்களை நாம் காசு கொடுத்து பார்க்கிறோம். பின் அவைதரும் துன்பத்தால் கூனிக்குறுகியவாறு திரும்பி இருக்கின்றோம். ஆனால் இன்றைய பேரன் பேர்த்தி குறும்படம் எம்மை நிமிர்ந்து உட்கார வைத்திருக்கின்றது. எமது வெற்றி என்று மகிழ வைக்கின்றது' என்றார் கவிஞர் சுபாஷ்.
திரையிட்ட நாலு படங்களைப் பார்த்துவிட்டு ஒரு படத்தை மட்டும் பேசினால் மற்றவர்கள் பாதிப்புக்குள்ளாக மாடடார்களா? இதனால் வித்தியாசமான படைப்புகள் வெளிவராமல் போகுமல்லவா? மண்டபத்திற்கு வெளியே நடந்து கொண்டிருக்கையில் கேள்வியை எழுப்பினார் பார்வையாளர்களில் ஒருவரான பாஸ்கரன்.
அநாமதேயன் படத்தில் 'வணக்கம்' என்ற சொல் எத்தனை உணர்ச்சி பாவங்களை வெளிப்படுத்திக்காட்டியது என்பதை யாரும் ஏன் சுட்டிக்காட்டவில்லை என்றார் பாஸ்கரன். அந்தப்பாத்திரத்தில் குணபாலின் நடிப்பும் தவிப்பும் நிச்சயம் வியப்புறக்கூடியதே.
தற்போது நம்மவர் திரைப்படைப்புகளில் நடிபாற்றல், உடல்மொழி வெளிப்பாடு மெருகேறி வருவதை குறிபபிட்டயாக வேண்டும். ஈழததமிழர்களின் கலை வெளிப்பாடுகள் களமும் புலமுமாக முறைசாரா கலை முகிழ்வாக ஒளிக்கீற்றென வெளிப்படத் தொடங்கிவிட்டன. தமிழ் பேசும் உலகெங்கும் பேரொளி வீசும் காலம் அண்மித்துக் கொண்டிருகின்றது. புகலிட குறுந்திரை முயற்சியில் புதியதொரு தடம் இயக்குநர் பராவின் பேரன் பேர்த்தி.
இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(6 posts)
|