Sunday, 13 March 2005
இன்றைக்கிருக்கக்கூடிய இளைய தலைமுறை குமுதம், ஆனந்தவிகடன், பிலிமாலயா, குங்குமம், டி சினிமா, வைரமுத்து கவிதைகள், ராஜேஷ்குமார், சுஜாதா, பாலகுமாரன், ரமணிசந்திரன், சாண்டில்யன் நாவல்கள் என ஆவலாதிப்பட்டும் - விஜய், அஜித், தனுஷ், சிம்பு, சூர்யா முதலானோரின் படங்கள் வெளியாகும் முதல்நாள் காட்சிகளுக்காக அலைந்தும் - ஜோதிகா, திரிஷா, சோனியா அகர்வால், சிநேகா, சிம்ரன் ஆகியோருக்காக ஏங்கிக் கனவுகளை பிரசவித்தும் வருகின்ற நிலையில் நல்ல இலக்கியம், கலைத்துவ சினிமா மீது தீவிர ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட ஒருசில இளவயதினர் இருந்துவருவது நம்பிக்கையளிப்பதுடன் மகிழ்வினையும் தருகின்றது. இதனடிப்படையில் மூன்றாந்தரமான - நல்லுணர்வுகளை அவமதிக்கின்ற - தமிழகச் சஞ்சிகைகளுக்கு நடுவில், நல்ல வாசிப்பனுபவத்தைத் தரக்கூடிய - தீவிரமான கலை இலக்கியச் செயற்பாட்டை மேற்கொண்டு தற்போது வெளிவந்துகொண்டிருக்கும் சிற்சில சிறுசஞ்சிகைகளைப் பற்றிய அறிமுகக் குறிப்பொன்றைத் தருவது பொருத்தமாக இருக்கும், இளந்தலைமுறை வாசகரின் தர வளர்ச்சிக்கு இவை துணைசெய்யும்!
காலச்சுவடு
1988 நடுப்பகுதியில் சுந்தர ராமசாமியை ஆசிரியராகக் கொண்டு காலாண்டிதழாக வெளிவரத்தொடங்கியது. சுந்தர ராமசாமிக்குப் பின்பாக கண்ணனையும் மனுஷ்யபுத்திரனையும் ஆசிரியர்களாகக்கொண்டு வெளிவந்தது, இப்போது, எஸ். ஆர். சுந்தரம் எனும் கண்ணனை ஆசிரியராகக்கொண்டு வெளிவருகிறது. தொடக்க காலத்தில் காலாண்டிதழாகவும், பின்னர் இருமாத இதழாகவும் வெளிவந்து தற்போது மாதஇதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது. இதுவரை - 60 இதழ்கள் (2004 டிசெம்பர் மாதம் வரை) வெளிவந்துள்ளன. ஈழத்தமிழர் பிரச்சினை குறித்தும் காலச்சுவடு பதிவுகளைச் செய்துவந்துள்ளமை குறிப்பிடப்படவேண்டியது. இந்திய அமைதிப்படை ஈழத்தில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில், நடுநிலைமையுடன் காலச்சுவடு தனது பதிவுகளை மேற்கொண்டுள்ளது. மேலும், 1995 யாழ்ப்பாண இடப்பெயர்வு தொடர்பில் - மகன் ஒருவன் தந்தைக்கு எழுதிய நீண்ட கடிதத்தையும் பிரசுரித்துள்ளது. நல்ல சிறுகதை, கவிதை, மற்றும் கட்டுரை (அரசியல், சினிமா, கலை, இலக்கியம் சார்ந்த விடயங்கள்) என்பவற்றிற்கு இடமளித்து வருவதுடன், வெவ்வேறு துறைசார்ந்தோரின் நேர்காணல்களையும் பதிவுசெய்து வருகின்றது. மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளித்து வரும் சிற்றிதழ்களில் காலச்சுவடு முக்கியமானது, வாசகர் கடிதங்களுக்கென கணிசமான பக்கங்களை ஒதுக்குகிறது. 2004 ஏப்ரில் இதழ் ஈழத்துப் படைப்பாளிகளுக்கான சிறப்பிதழாக வெளிவந்தது. வணிகரீதியாக விற்பனையில் முதலிடம் வகிக்கும் சிற்றிதழ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உயிர்மை
2003 ஓகஸ்ற் மாதத்திலிருந்து மனுஷ்யபுத்திரனை ஆசிரியராகக்கொண்டு இலக்கிய மாத இதழாக உயிர்மை வெளிவருகிறது. அரசியல், சமூகவியல், அறிவியல், சூழலியல், சினிமா, பழந்தமிழ் இலக்கியம், சிறுகதை, கவிதை, நூல் விமர்சனம் என்பனவற்றிற்கு முக்கியத்துவமளித்து வருகின்றது. உலகளாவியரீதியில் முக்கியமான படைப்பாளிகளைப்பற்றி எஸ். ராமகிருஷ்ணன் எழுதிவரும் தொடரும், கலைஇலக்கியம் சார்ந்து ஜெய மோகன் எழுதி வரும் தொடரும், சூழலியல் தொடர் பில் தியடோர் பாஸ்கரன் எழுதி வரும் தொடரும் கவனிப்பிற்குரி யவை. நாடகம் தொடர்பிலும் உயிர்மை கவனம் செலுத்துகின்றது. வாசகர் கடிதங்களுக்கும் கணிசமான பக்கங்கள் ஒதுக்கப்படுகின்றன. நல்ல, வித்தியாசமான நிழற்படங்களுக்கும், உருக்களுக்கும் இவ்விதழ் இடமளித்து வருவது இன்னுமொரு குறிப்பிடப்படவேண்டிய அம்சம்.
குமுதம் தீராநதி
குமுதம் பப்ளிக்கேஷன் நிறுவனத்தின் கீழ் 2002 முற்பகுதியிலிருந்து - தீவிர இலக்கியத்துக் கான மாதஇதழாக தீராநதி - வெளிவருகின்றது. தொடக்கத்தில் மணா பொறுப்பாசிரியராக இருந்தார், தற்போது தளவாய் சுந்தரம் பொறுப்பாசிரியராக இருக்கின்றார். கவிதை, சிறுகதை, நூல்விமர்சனம், பல்துறை சார்ந்தவர்களுடனான நேர்காணல் ஆகிய அம்சங்களை இவ்விதழ் உள்ளடக்குகின்றது. 'பரண்' எனும் பகுதி மூலமாக முந்திய தலைமுறை இலக்கியவாதிகள் இலக்கியச் சஞ்சிகைகள் அறிமுகம் செய்யப்படுவதுடன், நல்ல சினிமா ரசனைக்கு தூண்டுதலாக அமையும் கட்டுரைகளும் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றன. தமிழகத்தின் குறிப்பிடத்தக்க ஓவியர்களின் அறிமுகக் குறிப்புகளும், அவர்களது ஓவியங்களும்கூட உள்ளடங்குகின்றன வாசகர்களின் கடிதங்களுக்கும் இடம் அளிக்கப்படுகிறது.
நிழல்
நவீன சினிமாவுக்கான களமாக, ப. திருநாவுக்கரசுவை ஆசிரியராகக்கொண்டு, 2002 ஒக்ரோபர் மாதத்திலிருந்து 'நிழல்' மாதஇதழாக வெளிவருகின்றது. சருவதேச சினிமாக்களைப் பற்றிய அறிமுகத்தை வழங்கி - நல்ல சினிமா தொடர்பிலான இரசனையை வளர்ப்பதையே நிழலின் பிரதான நோக்கமாகக் கொள்ளலாம். இதுவரை வெளிவந்துள்ள பதினாறு இதழ்களில் உலகத் தரம்வாய்ந்த சினிமாக்களின் திரைக்கதைகள், சருவதேசத் திரைப்பட விழாக்கள் - அவற்றில் திரையிடப்பட்ட படங்களைப்பற்றிய விரிவான குறிப்புகள், கவனிப்பிற்குரிய சினிமாவுடன் தொடர்புடைய கலைஞர்களின் நேர்காணல் மற்றும் அவர்களைப்பற்றிய கட்டுரைகள், நல்ல இரசனையை வளர்க்க உதவும் கட்டுரைகள், பல்வேறு திரைப்படங்களைப் பற்றிய விமர்சனங்கள், குறுந்திரைப்படங்கள் மீதான கவனத்தைக் குவிக்கும் விரிவான குறிப்புகள் என, சினிமாவுடன் தொடர்புபட்ட முக்கிய விடயங்கள் பிரசுரமாகியுள்ளன. நிழல் குறுந் திரைப்படங்களை முக்கியத்துவப்படுத்தி வரும் ஒரு களம் என்பதும் குறிப்பிடத்தக்கது!
பன்முகம்
எம். ஜி. சுரேஷை ஆசிரியராகக்கொண்டு, 2003 ஜுலை - செப்ரெம்பர் காலப்பகுதியி லிருந்து, இலக்கியக் கோட்பாடுகளுக்கான காலாண்டிதழாகப் பன்முகம் வெளிவருகின்றது. பின் நவீனத்துவம், அகத்திறப்பாங்கியல் போன்ற நவீன இலக்கியக்கோட்பாடுகளை முதன்மைப்படுத்தி - இவை தொடர்பான விரிவான கட்டுரைகளையும், ஒழுங்கழிப்புச் சிறுகதைகள், கவிதைகளையும் பன்முகம் தாங்கிவருவது குறிப்பிடத்தக்கது. இவை தவிர செவ்வியல் இலக்கிய வகைகளின் அறிமுகக் குறிப்புக்கள், இலக்கியக் கோட்பாடுகள் பற்றிய திறனாய்வுகள், மொழிபெயர்ப்புக் கதைகள், கவிதைகள், விவாதங்கள்ää நூல்விமர்சனம் என்பன பன்முகத்தில் இடம்பெறும் முக்கிய அம்சங்களாகும். ஓர் இலக்கியக் கோட்பாட்டுஇதழ் என்ற அடிப்படையில் தனித்துவமான கவனிப்பைப் பெறுகின்ற சிற்றிதழாக இது உள்ளது. க.நா.சு., ஜேம்ஸ் ஜோய்ஸ் ஆகியோரின் நினைவுச் சிறப்பிதழ்களையும் இதுவரை கொண்டுவந்துள்ளது.
மழை
கவிஞர் யூமா வாசுகியை ஆசிரியராகக் கொண்டு, 2002 யூலை - செப்ரெம்பர் காலப்பகுதிகளை உள்ளடக்கிய காலாண்டிதழாக வெளிவரத்தொடங்கிய சிற்றிதழான 'மழை' கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனம், நூல்மதிப்புரை, கவிதைகள், மொழிபெயர்ப்புக்கள் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. சிற்றிதழுக்கான வடிவத்தில் இல்லாமல் ஒரு புத்தகவடிவில் மழை வருகிறது. மழையின் இதழ் -3 உள்ளடக்கும், 'தி. ஜானகிராமன் - காமமும் விடுதலையும்' எனும் தலைப்பிலான ஜெயமோகனின் விமர்சனக் கட்டுரை கவனிப்பிற்குரியது. தமிழில் எழுதப்பட்ட நல்ல நூல்களையும், சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டுவரும் 'யுனைட்டட் றைற்றர்ஸ்' என்ற அமைப்பே இவ்விதழை வெளியிடுவதும் குறிப்பிடத்தக்கது!
கணையாழி
அறுபதுகளிலிருந்து கஸ்தூரிரங்கனை ஆசிரியராகக்கொண்டு மாத இதழாக கணையாழி வெளிவந்தது. கவிதை, சிறுகதை, பல்வகைக் கட்டுரைகள் - சினிமா விமர்சனம், நூல் மதிப்புரை என்ற வகையிலான அம்சங் களைத்தாங்கி தசரா அறக்கட்டளை அமைப்பின் அனுசரணையில் தற்போது வருகின்றது. முக்கியமான படைப்பாளிகளான தி. ஜானகிராமன், அசோகமித்திரன் முதலானோர் கணையாழியின் ஆசிரியபீடத்தில் முன்பு பணிபுரிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
|