எலியும் தவளையும் பற்றியதொரு பழையகதை...
|
|
|
|
எழுதியவர்: தெளிவத்தை ஜோசப்
|
|
|
Sunday, 13 March 2005

வீட்டிலிருந்து ஓடிவந்தது ஒரு எலி. குளத்தங்கரையில் சோம்பி நின்றது ஒரு தவளை.
ஓடிவந்த எலியும் சோம்பி நின்ற தவளையும் சந்தித்துக்கொண்டன.
சற்றுநேரம் பேசிக்கொண்டன. சிரித்து மகிழ்ந்துகொண்டன.
பேசிச் சிரித்து மகிழ்ந்திருந்த அந்தச் சிறிது நேரத்தில், தங்களது பிரச்சினைகள் - அவற்றை ஏற்படுத்தும் எதிரிகள் பற்றியும் பேசிக்கொண்டன.
அந்த எதிரிகள் இருவருக்கும் ஒரே மாதிரியாக இருந்துவிட்டதும் அவைகளுக்குள்ளான நெருக்கம் அதிகரித்தது,கட்டிப் பிடித்துக்கொண்டன. கை குலுக்கிக்கொண்டன.
கை என்பதை நாம் கால் எனக் கொள்வோம்.
கணக்கின்படி கால் என்பது அரைக்குக் கீழே! கால்: அரை: முக்கால்: முழு என்று நமக்கே தெரியும்.
நமக்கும் கால் என்பது அரைக்குக் கீழேதான். விலங்குகளுக்கு அப்படி அல்ல.
எலிக்கும் தவளைக்கும் அப்படி அல்ல!
முன்னங்கால்களைத் தூக்கிக் குலுக்கி குதூகலித்துக்கொண்டன.
எதிரியின் எதிரி எனக்கு நண்பன் என்னும் தத்துவம்தான் அடிப்படை.
சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டன.
கால்கள் கோர்த்தபடியே இருந்தன. நாம் இனிப் பிரியவே கூடாது என்றது எலி.
கூடாது என்பதல்ல! முடியாது என்பதே சரி! அப்படி ஒரு அழகான நெருக்கத்தை இந்த நட்பு நமக்கு உணர்த்துகிறது என்றது தவளை.
அகத்தால் மாத்திரமல்ல, புறத்தாலும் நாம் நம்மைப் பிணைத்துக்கொள்ள வேண்டும். நமது கூட்டு, நமது நட்பு மற்றவர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்றது எலி.
கால் பிடியைச் சற்றே தளர்த்திக்கொண்டு 'சற்றுநேரம் அப்படியே இரு, இதோ ஒரு நொடிக்குள் வந்துவிடுகின்றேன்' என்றபடி வீட்டை நோக்கி ஓடி மறைந்தது எலி.
முதன் முதலாக காதல் வயப்பட்டதைப் போல பிரமை தட்டிப்போய்க் கிடந்தது தவளை.
ஓடிய எலி ஒரு நூல்கயிற்றுடன் ஓடி வந்தது. நூல் கயிற்றின் ஒருமுனையை எலியும் மறுமுனையை தவளையும் தங்கள் கால்களில் கட்டிக்கொண்டன.
இதுதான் நமக்குள்ளான பிணைப்பு. விலகிப் போய்விட முடியாதிருக்க ஒரு ஒப்பந்தம், ஒரு கூட்டு என்று அகம் மிக மகிழ்ந்தன.
பொழுது போவதே தெரியாமல் நெடுநேரம் பேசின. பேசின. பேசிக்களித்தன.
எனக்குப் பசிக்கிறது என்றது தவளை.
எனக்குந்தான் என்றது எலி.
தவளை மெதுவாகக் குளத்தில் இறங்கியது. எலி கரையில் அமர்ந்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.
தவளை தண்ணீருக்குள் நீந்தத் தொடங்கியது. திடீரென எலியும் தண்ணீருக்குள் இழுக்கப்பட்டது.
திக்கு முக்காடிப்போன எலி கரையை நோக்கிப் பாய்ந்தது. முடியவில்லை. தவளை தண்ணீரின் ஆழத்துக்குள் நீந்தியது. எலியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. மூச்சு முட்டியது. நீரின் அடியில் மூழ்கி முழ்கி மேலெழுந்தது.
தவளை சுதந்திரமாக தண்ணீருக்குள் இரைதேடிக் கொண்டிருந்தது.
மூச்சுத் திணறிய எலி மரணித்து மிதக்கத் தொடங்கியது.
மீன் ஏதாவது நீர் மட்டத்தில் தெரிகிறதா என்னும் மூக்கு வியர்வையுடன் குளத்தை வட்டமிட்ட பருந்தின் கண்கள், நீருள் அமிழ்வதும் மேலே வருவதுமாக இருந்த எலியைக் கண்டுவிட்டது.
சர்ர்ரென இறங்கி எலியைத் தூக்கிக்கொண்டு பறந்தது@ தவளையும் கூடவே தொங்கிக்கொண்டு சென்றது.
வீட்டுக் கூரை ஒன்றின்மேல் அமர்ந்த பருந்து எலியைத் தின்று முடித்துவிட்டு கூடவே வந்திருந்த தவளையையும் கண்டு இரட்டிப்புமகிழ்வு கொண்டது. தவளையையும் தின்று தீர்த்தது.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும், நரியும் முதலையும், சிங்கமும் முயலும் என்னும் சிறுவர்க்கான கதைகளைப் போலவே இந்த 'எலியும் தவளையும்' என்பது ஒரு பழைய கதைதான்.
எந்த விதத்திலும் ஒத்துப்போக முடியாத இருவரின் நட்பு அல்லது இணைவு இருவரினதும் அழிவுக்கே வழிகோலும் என்னும் அதன் அடிப்படைக்கருத்து பழையதாகி விடுவதில்லை!
|