Sunday, 13 March 2005
“எழுதுவது போலவும் சொல்வது போலவும் வாழாத எழுத்தாளனுடைய பேனையைச் சுட்டுப் பொசுக்கவேண்டும் என்று சில எழுத்தாளர்கள் கூறுகிறார்களே, இது சரியா?” - நான் எனக்குள் இருந்த உள்விமர்சகனைப் பார்த்துக் குரல் எழுப்பினேன்.
“அவர்கள் ஏன் அப்படிக் கூறுகிறார்கள்? அதற்கு அவர்கள் காட்டும் காரணம் என்ன?” - அவன் என்னைப் பார்த்து எதிர்க்கேள்வி எழுப்பினான்.
“உயர்ந்த இலட்சியங்களையும், ஒழுக்கக் கோட்பாடுகளையும் தன் படைப்பில் முன்வைக்கும் எழுத்தாளன் ஒருவன் தன் சொந்த வாழ்க்கையில் அதற்கெதிராக வாழ்கிறான் என்றால், அது அசிங்கமாகத் தெரிகிறது. இதனால், அவன் தன் படைப்புக்களில் முன்வைக்கும் உயர்ந்த இலட்சியங்கள் கேலிக்கூத்தாகி கனதி குறைந்துபோகின்றன. படிக்கிறது தேவாரம், இடிக்கிறது சிவன் கோவில் போன்ற வேலையாக இதுவும் மாறுகிறது” - நான்.
“அப்படியானால் சிருஷ்டி இலக்கியம் என்பது உயர்ந்த இலட்சியங்களையும் ஒழுக்கக் கோட்பாடுகளையும் முன்வைக்கும் விவகாரம் என்று சொல்லுவீர்களோ? இதை ஏற்றுக் கொண்டால் நாம் இன்றைய இலக்கியங்களை வாசிப்பதை விட்டு நாலடியார், திருக்குறள் போன்றவற்றை வாசித்துப் பயன் பெறலாம், அல்லவா?” அவன் சிரித்துக்கொண்டு கேட்டான்.
“சிருஷ்டி இலக்கியத்தில் உயர் இலட்சியங்களும் ஒழுக்கக் கோட்பாடுகளும் இடம் பெறுவதற்கும், ஒழுக்கக் கோட்பாடுகளையும் உயர் இலட்சியங்களையும் போதிக்கும் அறநூல்களில் அவை இடம் பெறுவதற்கும், பாரிய வித்தியாசம் உண்டு. ஒழுக்கக் கோட்பாடுகளைத் தெரிந்து கொள்வதற்காகவே அறநூல்கள் வாசிக்கப் படுகின்றன. ஆனால், சிருஷ்டி இலக்கியத்தைப் பொறுத்தவரையில் அது அப்படியல்ல. ஆக்க இலக்கியம் என்பது - அது கவிதை, சிறுகதை, நாவல் எதுவாகவும் இருக்கலாம் - வாழ்வின் தரிசனமாகும். ஒரு கலைஞன் வாழ்க்கையைத் தான் காணும் கோணத்திலிருந்து படைத்தளிக்கிறான். அவனது அப்படைப்பானது கலாரீதியாக வெற்றி பெறும் பட்சத்திலேயே அதில் காணப்படும் உயர் இலட்சியங்களும், ஒழுக்கமும் வாசகனைத் தொற்றிக்கொள்ளவோ பாதிக்கவோ முயல்கின்றன. அவைக்கும் கலைப்படைப்புக்கும் நேரடியான தொடர்பு கிடையாது” - நான்.
“அப்படியானால் எழுத்தாளன் என்பவன் தன் சொந்த வாழ்க்கையில் தான் எழுதிக் கோடிகாட்டிய இலட்சியங்களுக்கு எதிராக வாழ்வது தப்பில்லை என்கிறீர்களா? அதாவது, தான் எழுதியதுபோல் வாழவேண்டும் என்று ஒரு எழுத்தாளனை நாம் எதிர்பார்ப்பது பிழைஎன்கிறீர்களா?” - அவன், நான் ஆரம்பத்தில் வைத்த கேள்வியையே என்னிடம் திருப்பிக் கேட்டான்.

“இதற்குப் பதில் அளிப்பதற்கு முதல் ஒரு எழுத்தாளன் தான் எழுதியதற்கு மாறாக ஏன் நடந்துகொள்கிறான் என்பதை முதலில் நாம் அறியவேண்டும்” - நான் இன்னும் தெளிவான தளத்திற்கு வர முயன்றேன்.
“ஏன் நடந்துகொள்கிறான்?” அவன் குடைந்தான்.
“ஒரு படைப்பாளன் என்பவன் படைப்பில் ஈடுபடும்போது தன் அக ஆழங்களுக்குள் செல்கிறான். அங்கே அவனுக்கு உயர் இலட்சியங்களும் ஒழுக்கக்கோட்பாடுகளின் உண்மையும் தரிசனமாகின்றன. அந்நேரங்களில் அவன் தான் படைத்தளிக்கும் பாத்திரங்களாகவே மாறுகிறான். ஆனால் படைப்பு முடிந்ததும் அவன் மீண்டும் விவகார உலகால் விழுங்கப்பட்டு, தனது சிருஷ்டியின்போது ஏற்பட்ட தரிசன ஆளுமையில் இருந்து விடுபடுகிறான். சாதாரண ஆசாபாசங்களுக்குட்பட்ட மனிதனாக வாழத் தொடங்குகிறான். இதையே பிறழ்வுற்ற ஆளுமை என உளவியலாளர் விளக்குகின்றனர். இதனால்தான் 83 ஜுலைக் கலவரத்தின்போது, உயர்ந்த இலட்சியங்கள் - ஒழுக்கங்கள் பற்றிப் பேசிய சிங்கள எழுத்தாளர்கள் பலர் இனத்துவேஷிகளாகவும், அராஜகவாதிகளாகவும் மாறித் தமிழர்களுக்கு எதிராக இயங்க, சாதாரண சிங்கள மக்கள், தமிழர்களை ஆதரித்து பாதுகாப்புத் தந்தனர் என, பிரபல விமர்சகர் றெஜி சிறிவர்த்தன கூறியுள்ளார். இதே காரணத்தால்தான் பெருங்கவிஞரான டி.எஸ்.எலியட் நாஸி (Nazi) ஆதரவாளனாய் இருந்தான். லியோ ரோல்ஸ்ரோய் போல் தான் எழுதிய உயர்ந்த இலட்சியங்களுக்கேற்ப வாழ்ந்தவர்கள் மிகக்குறைவே” - நான்.
“இதன்மூலம் நீ எதைக் கூற முயல்கிறாய்?” - அவன் துருவினான்.
“நான் தெளிவுபடுத்த விரும்புவது இதுதான்: எத்தனையோ அற்புதப் படைப்புக்களைத் தந்த கலைஞர்களும், எழுத்தாளர்களும் தம் சொந்த வாழ்க்கையில் மோசமானவர்களாக இருந்திருக்கிறார்கள். பலவித ஒழுக்கக் கேடுகளுக்குரியவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே என் வாதம். ஏன், நமது தேவாரம் திருப்புகழ் தந்த நாயன்மார்களில்கூட இத்தகையோரைக் காட்டலாம்” - நான் அழுத்தினேன்.
“அப்படியானால் எழுத்தாளனின் வாழ்க்கையோடு அவன் எழுத்தைச் சம்பந்தப்படுத்த வேண்டாம் என்பதுதான் உன் இறுதி முடிவா?” - அவனும் அழுத்தினான்.
“இன்றைய நவீன விமர்சனங்களில்கூட இத்தகைய ஒரு பார்வையையே காணக்கூடியதாய் உள்ளது. அதனால்தான் அவை ஒரு படைப்பைத்தந்தவன் செத்துவிட்டான் என்கின்றன. இதன்மூலம் ஒரு படைப்பை அணுகுவதற்கு படைப்பாளனின் பின்னணியை நோக்காத ஒரு விடுபட்ட பார்வையைக் கோரி நிற்கின்றன அவை” - நான் கூறினேன்.
“ஆனால் இது ஒருபக்கப் பார்வையென்றே நம்புகிறேன். எதற்கும் எப்பவும் இரண்டு பக்கங்கள் உண்டு.திரும்பவும் ஒரு கலைப்படைப்பாளியின் சொந்த வாழ்க்கையையும் பார்க்கவேண்டிய சூழல் உருவாகி வருகிறதென்றே கூறுவேன். இன்று இலக்கிய உலகில் புனைவுகள் மயப்பட்ட படைப்புகளை படிப்பதற்குப் பதில் ஒருவனின் சொந்த வாழ்க்கை வரலாற்றை - உண்மை நிகழ்ச்சியைப் படிக்கும் ஆவலே மேலோங்கி வருவதை நாம் மேற்கில் காணுகிறோம். இது நீங்கள் கூறுகின்ற விடுபட்ட பார்வைக்கு எதிராக இனி வரப்போகிறதென்றே கூறுவேன்.” - அவன்.
“இதை விளக்குவாயா?” -நான்.
“இதுகாலவரை எழுதப்பட்டுவரும் புனைவுமயப்பட்ட இலக்கியங்கள் எல்லாம் அலுப்புத்தரும் விவகாரமாக மாறிவிடுகிறதென்றும், அவற்றைப் படிக்கும் ஆவல் வாசகரிடையே குறைந்து வருகிறதென்றும், இதனால் வாசகர்கள் உண்மை வாழ்க்கை வரலாற்றை - உண்மை வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் படிக்க ஆவல் காட்டுகின்றனர் என்றும், மேற்குலக விமர்சகர்கள் கூறுகின்றனர். இது படைப்பாளியின் இயக்க முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு அவர்கள் ஆக்கங்களின் உருவ உள்ளடக்கங்களிலும் அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்தப்போகின்றன என்றும் எதிர்பார்க்கலாம். லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் லூயி போர்கேயின் எழுத்துக்களை இதன் பின்னணியில்தான் பார்க்கவேணும்” - அவன் விளக்கினான்.
“இந்த மாற்றம் படைப்பாளிகளை தாம் எழுதுவது போல் வாழச்செய்துவிடுமா?” - நான்.
“இப்படித்தான் அதற்குப் பதில் சொல்ல வேண்டும். எழுத்தாளனின் வாழ்வுக்கும், எழுத்துக்குமிடையே இருந்த இடைவெளி இல்லாமல் போகப்போகிறது. அதாவது, மாறிவரும் இந்தப் புதிய சூழல் எழுத்தாளனை அவனது பிறழ்வுற்ற மனச்சிக்கலில் இருந்து விடுவிக்கிறது. மாறுகிறது. இது அவனது வழமையான 'கதை சொல்லும்' - பாணியிலிருந்து அவனை விடுவித்து அவனது அன்றாட வாழ்க்கையையே கதையாகவோ, நாவலாகவோ தரச்செய்கிறது. ஆனால் இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கவேண்டியது, 'அப்பனின் காலைத் தடவிவிட்டபோது படுக்கை அறையில் மனைவியை நினைத்து அவளிடம் போய்விட்டேன்' என்று காந்தியார் தன் பலவீனத்தையே சத்தியப்படுத்திய இலக்கிய முன்வைப்பாகும். இது எழுதியவனையும் அதைப் படிப்பவனையும் பலவித மாற்றங்களுக்குள் ளாக்கும் என நினைக்கிறேன். இங்கேதான் எழுத்தும் வாழ்வும் ஒன்றாகிறது” - அவன் கூறினான்.
“......” நான் பேசாது, அவன் கூறியதை இரை மீட்டேன். “இத்தகைய படைப்பானது எழுதியவனையும் சுயவிசாரணைக்குள்ளாக்கி சுத்தப்படுத்துவதோடு, படிப்பவனையும் அது உண்மைப்படைப்பென்பதால் தொற்றிக்கொண்டு, சிந்திக்கவும் சுத்தப்படுத்தவும் உதவுகிறது. இந்த இரட்டைத்தொழிற்பாடுடைய படைப்பானது தன் சுய வெளிப்பாட்டுக்குரிய புதுப்புது உருமாற்றங்களையும் கலைத்துவத்தையும் தரித்துக் கொள்கிறது” - அவன் தொடர்ந்து கூறினான்.
“தன்னை சுயவிசாரணைப்படுத்தும் எழுத்தாளன் வீரனாகவும் மாறுகிறான், இல்லையா? தன்கொள்கைக்கு ஒத்துவராததால் தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசையும் நிராகரித்து வலதுசாரி பிரெஞ்சு அரசுக்கே சவாலாக இயங்கினான் ஷோன் போல் சாத்தர். அவனையொத்த எழுத்தாளர்கள் எம்மிடையே உள்ளார்களா?” - நான் கேட்டேன்.
“உண்மைதான். அவன்போல் நம் எழுத்தாளர்கள் இயங்கினால் படைப்பாளிகள் இயக்கமொன்றையே எப்பவோ உருவாக்கி, நம் இனப்பிரச்சினையையே தீர்க்கவேண்டிய நெருக்கடியை உருவாக்கி இருக்கலாம்” என்று அவன் கூறிவிட்டு பின்வருமாறு சொன்னான்:
“இங்கேதான் எழுத்தாளர்களின் எழுத்தும் வாழ்வும் இணையும்போது ஏற்படும் சக்தி, இன்னோர் பரிமாணத்தை எடுக்கிறது.” (விரைவில் வெளிவரவிருக்கும் மு. பொ. வின் 'விசாரம்' என்ற நூலிலிருந்து) ¡ |