அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow இலக்கியம் arrow நூல்நயம் arrow "கண்ணில் தெரியுது வானம்": ஒரு பார்வை
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


"கண்ணில் தெரியுது வானம்": ஒரு பார்வை   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: - ரெ.கார்த்திகேசு.  
Wednesday, 08 December 2004

முன்னுரை:

தமிழ் இலக்கியம் செழுமையுடன் வளர்ந்து வருகிறதா இல்லையா என்பதில் இரண்டு வகையிலும் கருத்துகள் இருக்கக் கூடும். கிண்ணம் பாதி நிரம்பியிருக்கிறதா பாதி காலியாக இருக்கிறதா என்னும் கேள்விக்கு விடை காண்பது போல இது. தமிழ் மொழி வளர்கிறதா தேய்கிறதா என்னும் இன்னுமொரு பெரிய கேள்வியோடு தொடர்புடைய விவாதம்தான் இது.

இன்றைய அறிவியல் தொழில் நுணுக்கச் சூழ்நிலையில் தமிழின் புழக்கம் மிகத் தீவிரமாக
அதிகரித்திருக்கிறது என்பது கண்கூடு. (உண்மையில் திறமுள்ள எல்லா மொழிகளும் இப்படிப் பெருகவே செய்கின்றன.) அச்சுத் தொழிலின் வளர்ச்சியும் சினிமா தொலைக்காட்சியின் பெருக்கமும் கணினியின் அறிமுகமும் இதற்கான காரணங்கள். தமிழ் நாட்டில் மக்கள் எண்ணிக்கை பெருகி வருவதையும், இலங்கைத் தமிழர்கள் போரினாலும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் வேலை வாய்ப்புக்களினாலும் உலகெங்கும் சிதறத் தொடங்கியதையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் தமிழ் இலக்கியம் இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஓர் உலகளாவிய மேடை பெற்றிருப்பது அதன் சூழ்நிலையின் நிர்ப்பந்தம்  என்றே கூறிவிடலாம். இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் சிங்கப்பூர், மலேசியாவில் குடியேறிய தமிழர்கள் வளர்த்த இலக்கியம், அதற்கு முன்பிருந்தே இலங்கையில் விளைந்த இலக்கியம் இவற்றின் தொடர்ச்சியாக இந்த உலக மயமாதலை எடுத்துக் கொள்ளலாம்.

"உலகமயமாதல்" என்பதை ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பொருளில்தான் பார்க்க வேண்டும். "உலகு" என்பதை "தமிழர் உலகு" என்பதே சரி. (இதைத் "தமிழம்" என்றும் சொல்லலாம். Tamildom என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக இருக்கும்.) தமிழ் இலக்கியம் உலகில் பரவியிருந்தாலும் தமிழருக்கு அப்பால் பரவவில்லை.

ஆனால் தமிழ் கற்பனைப் படைப்புகள் இந்தப் புதிய புலங்களிலிருந்து எழுவது தமிழ் இலக்கியத்திற்குப் புதிய அனுபவமே கும். தமிழ்நாடு என்னும் இந்திய மாநிலத்தையும் (அதன் சுற்றுப் புறக் கிராமங்களையும்) மற்றும் யாழ்ப்பாணத்தையும் பெரிதும் மையம் கொண்டதாகவும் கொஞ்சமாக பெங்களூர், மும்பை, தில்லியை மையம் கொண்டதாகவும் இருந்த தமிழ்ப் புத்திலக்கியம் இன்று மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கானடா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் என்ற புதிய பிரதேசங்களை தனது மையமாகக் கொண்டிருப்பது நம் கவனத்தைக் கவரும் செய்தி.

இப்படி மையங்கள் மாறுவதாலும், புத்திலக்கிய படைப்பாளர்களின் வாழ்க்கை அனுபவங்களும், கல்வி, வேலை, பண்பாட்டு அனுபவங்களும் பலவகைப் படுவதாலும், இலக்கியங்களின் பாடுபொருள்களும் பின்புலன்களும் பலவகைப் படுவதும் தவிர்க்க முடியாததுதான்.

தமிழ் இலக்கியம் வரித்துக்கொண்டுள்ள இந்தப் புதிய பரிமாணங்களை நமக்குக் காட்டும் கண்ணாடிப் பேழையாக, லண்டனிலிருந்து இலக்கிய கிரியா ஊக்கியான பத்மனாப ஐயர் தொகுத்து வெளியிடும் ஆண்டு மலர்கள் விளங்குகின்றன. இதுவரை ஐந்து மலர்கள் இந்தத் தொடரில் வெளி வந்துள்ளன.

1996: தமிழர் நலன்புரிச் சங்கம் (நியூஹாம்) 10வது ண்டு நிறைவுச் சிறப்பு மலர்

1997: கிழக்கும் மேற்கும்

1998: இன்னுமொரு காலடி

1999: யுகம் மாறும்

2001: கண்ணில் தெரியுது வானம்


கண்ணில் தெரியுது வானம்:

ஐம்பதுக்கு மேற்பட்ட படைப்பாளர்களின் 91 படைப்புக்களைத் தாங்கி 520 பக்கங்களில் தயாரிக்கப்பட்ட பெரிய நூலாக இது மலர்ந்திருக்கிறது. இந்தப் படைப்பாளர்கள் இங்கிலாந்து, கனடா, இலங்கை, ஜெர்மனி, ·பிரான்ஸ், சுவிட்சர்லந்து, டென்மார்க், நோர்வே, அமெரிக்கா, ஆஸ்த்திரேலியா, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா கிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் இந்த நூலின் முதல் நோக்கம் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் படைப்புக்களை முன்னிறுத்துவதே ஆகும்.

இந்த நூலில் சிறுகதைகளும் கவிதைகளும் ஏறக் குறைய சம அளவில் இருக்கின்றன. இந்தக் கட்டுரையில் சிறுகதைகள் மட்டுமே பேசப் படுகின்றன.

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு மேற்கத்திய நாடுகள் தரும் புதிய அனுபவங்களையும் அவை எழுப்பும்
உணர்வுகளையும் மற்றும் அங்கிருந்தவாறு தங்கள் தாயகங்களில் தாங்கள் அனுபவித்த இன்ப துன்பங்களை நினைவேக்கமாகப் பார்த்து அடையும் உணர்வுகளையும் பதிவு செய்திருப்பவையே இந்தப் படைப்புகள்.

இப்படி எளிதாகச் சொல்லிவிட்டபின் அதில் உள்ள மேலும் பல நுணுக்கங்களையும் தனியே எடுத்துச் சொல்ல வேண்டும். இந்தக் கதைகளில் பல தமிழில் தோன்றிக் கொண்டிருக்கும் பல புதிய போக்குககளைப் பிரதிபலிப்பன. பின் நவீனத்துவம், மிகை யதார்த்தம், மாந்திரிக யதார்த்தம், பெண்ணியம் ஆகியவற்றுடன் நமக்குப் பழக்கப்பட்ட யதார்த்தக் கதைகளும் இதில் உள்ளன.

இந்தக் கதைகளின் தேர்வுக் குழுவினர் கதைகளைப் பரிசீலித்துத் தேர்ந்தெடுத்திருப்பதில்
அனுபவித்திருக்கும் சிக்கல்களை என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. தரம் மட்டுமே தேர்வுக்கு அடிப்படைக் காரணமாக இருந்திருக்க முடியாது.  பரிசோதனை முறையிலும் முன் சொன்ன புதிய போக்குகளிலும் எழுதப் படும் கதைகளில் தரம் என்பதை நிர்ணயிப்பது மிகக் கடினம்.  பொதுவாகக் கதைகளில் சிந்தனைப் பிரதிபலிப்புக்களும் சொல்லும் விதத்தில் புத்திசாலித்தனமும் சொல்பொருளில் புதுமையும் இருந்தால் அதை பிரசுரிக்க வேண்டிய கதை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். "நல்ல" கதையா என்பதை வாசகனின் முடிவுக்கு விட்டுவிடுவதே நல்லது. இல்லாவிடில் கதைகளையும் சிந்தனையையும்  "தணிக்கை" செய்தார்கள் என்ற குற்றச் சாட்டுக்குத் தேர்வாளர்கள் ஆளாவார்கள். அந்த அளவில் இந்தத் தேர்வில் துணிவும் தாராளமும் திறந்த மனமும் விளங்குகின்றன.


கதைகள்:

தி. ஞானசேகரனின் (இலங்கை) "காட்டுப் பூனையும் பச்சைக் கிளிகளும்" என்னும் கதை முதல் கதையாக இருக்கிறது. சென்ட்ரி போஸ்டில் கற்பழிக்கப் பட்ட பெண்ணின் கதையை அவள் வாயிலாகவே யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழில் தந்திருக்கிறார். பூனை கிளிகள் என்ற படிமங்களைத் தீவிரமாகப் பயன் படுத்தி இக் கதையின் உணர்ச்சி உச்சத்தை உணர்த்துகிறார்.

அம்ரிதா ஏயெம்-இன் (இலங்கை) "கிருஸ்ண பிள்ளை" வறுமைச் சுழலில் சிக்கிக் கொண்ட ஒரு சின்னப் பையனின் கதையை நயமாகச் சொல்லுகிறது. இதுவும் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் தற்கூற்றாகச் சொல்லப் படுகிறது.

நந்தினி சேவியரின் (இலங்கை) "நேல்லிமரப் பள்ளிக் கூடம்"  தான் படித்த பள்ளிக் கூடத்தை நினைவு கூரும் நினைவேக்கக் கதையாக சொல்லப்படுகிறது. இதமான மனம் வருடும் காட்சிகள்.
சு.வில்வரத்தினத்தின் (இலங்கை) "நெய்தலின் கண்" கவிதை, இசைப்பாடல், கதை, நாடகம் கிய வடிவங்களைக் குழைத்துத் தருகிறது.  "பயக் கடல்ல கிடந்து வயக்கட்டுச் சாகிறது ஒரு வாழ்க்கையே! எங்கட கடல்ல இறங்கி அந்த உப்புத் தண்ணியும் காத்தும் பட்டாலே செத்துப் போய்க் கிடக்கிற சீவன் ஒருக்கால் சிலிர்திக் கொண்டு எழும்பும்" என்ற முடிவுரையில் அழுத்தமான செய்திகள் உள்ளன.

ஆர்.சூடாமணியின் (இந்தியா) "குதிரை பேசியபோது" குழந்தையை இழந்த ஒரு தாய்க்குக் கொஞ்சம்
கொஞ்சமாக பைத்தியம் பிடிப்பது கூறப் படுகிறது. ஒரு மிகை யதார்த்தத் தளத்தில் நேர்த்தியாகப்
பின்னப்பட்டுள்ளது.

பாமாவின் (இந்தியா)"இஞ்சி மரத்து கொரங்கு" பன்றியும் குரங்கும் பேசிக்கொள்ளும் ஒரு சிறுவர் கதை போல எழுதப் பட்டுள்ளது. தலித் எழுத்தாளரான பாமா, இதில் தலித்துக்களுக்கு இழைக்கப் படும் கொடுமையைப் பற்றிய ஒரு செய்தி வைத்திருக்கக் கூடும். ஆனால் அதைக் கண்டறிய இடங்கொடுக்காத வெள்ளையான எழுத்தாகத்தான் இருக்கிறது.

யுவன் சந்திரசேகரின் (இந்தியா) "ஊர் சுற்றிக் கலைஞன்" ஒரு நீண்ட கதை. ஒரு பிரயாணத்தில்
சந்தித்த ஒரு வட இந்திய இசைக் கலைஞனைப் பற்றி எழுதுகிறார். கதை மிகை யதார்த்தத் தளத்திலும் மாந்திரிக யதார்த்தத் தளத்திலும் கொஞ்சம் அலைகிறது. இவற்றுக்கு ஊடாக ஒரு உன்னதமான கலைஞனின் வாழ்க்கை அனுபவங்களும் உணர்வுகளும் கூறப்படுகின்றன. வட இந்திய சங்கீதம் பற்றிய  செய்திகள் உண்டு. வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும் கதைதான்.

இளங்கண்ணனின் (சிங்கப்பூர்) "சுற்றிப்பார்க்க வந்தவர்" சிறுகதையும் ரெ.கார்த்திகேசுவின் (மலேசியா) "நல்லவராவதும் தீயவராவதும்" சிறுகதையும் தாம் சொல்ல வரும் செய்திகளை வெள்ளையாகச் சொல்லும் யதார்த்தப் புனைவுகள்.

சிவஞானத்தின் (மலேசியா) "முகம்" ஒரு காதல் தோல்விக் கதையாக இருந்தாலும் நிகழ்ச்சிகளை
மிகை யதார்த்தத் தளத்தில் திருகித் திருகிச் சொல்லுகிறது. காதலித்தவர்கள் மத வேறுபாட்டினால்
தாங்களாக விலகிக் கொள்கிறார்கள் என்ற செய்தியை இறுதியில் நிகழ்ச்சிகளினூடே ஒரு
யூகமாய்த்தான் தெரிந்து கொள்ளுகிறோம். இதுவே கதையின் முக்கிய கரு என்றாலும் இது சம்பந்தா
சம்பந்தமில்லாத (னால் மிகவும் இதமான) வருணைகளூடும் நிகழ்வுகளினூடும் புதைத்து வைக்கப்
பட்டிருக்கிறது. சுகமான வாசிப்பு அனுபவத்தையும் "கண்டுபிடிப்பு" அனுபவத்தையும் தருகின்ற கதை.

பார்த்திபனின் (ஜெர்மனி) "தீவு மனிதன்" ஒரு தனி மனிதனின் தனிமை உணர்ச்சியைச் சொல்லுவது
போலத் தோன்றினாலும், அது நிர்ப்பந்தமாகப் புலய்ம்பெயர்ந்தவர்களிடையே தோன்றுகின்ற அந்நியத்
தனத்தையே குறிக்கிறது எனலாம். படிப்படியாக மனம் உலகிலிருந்து தனிமைப் பட்டுப் போகும் எண்ணப் போக்குகளை மிக மிருதுவான வார்த்தைகளில் வலிமையாகப் பின்னியுள்ளார்.

கண்ணனின் (ஜெர்மனி) "ஓலைப் பாயில் தொங்கும் உயிர்க் கொடிகள்" தீவிரமான பின் நவீனத்துவக்
கதை. வன்முறையினால் ஏற்படுகின்ற மன, உள வலிகளை இது வருணிக்கிறது. னால் தண்ணீர் மிகுந்துவிட்ட சோறு போலக் குழைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். உண்ணும் அனுபவத்தை நாடிப் போகும் போது அங்கங்கே வாயில் ஒட்டிக் கொள்ளும் உணர்வே ஏற்படுகிறது.

பொ. கருணாகரமூர்த்தியின் (ஜெர்மனி) "கூடுகலைதல்" இறுக்கமான உணர்வுகளே அதிகமாகத் துலங்கும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களிடையே அபூர்வமாகக் காணப் படும் நகைச் சுவை உணர்வை முன்னிறுத்திய கதை. சிவானந்தன் மாஸ்டர் என்ற பழைய பள்ளி வாத்தியாரை வழியில் கண்டு மரியாதை தெரிவிக்கப் போன மாணவனை அவர் விடாமல் பிடித்துக் கொண்டு அவனோடேயே தங்கி அவன் அன்றாட வாழ்வை அலைக்கழித்து விடுகிறார். நல்ல பாத்திரப் படைப்பு. சிரமப் படுத்தாத சுகமான வாசிப்பு அனுபவம்.

கி.சே. துரையின் (டென்மார்க்) "திரியாப்பாரை" சிறுகதையும் இப்படி நகைச்சுவை உணர்வுடன் அமைந்த கதைதான். ஒரு யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் பள்ளி சிரியர் திரியாப்பாரை மீன் பொறியல் சாப்பிட படும் பாடு இங்கே சொல்லப் படுகிறது.

தமயந்தியின் (நோர்வே) "மண்கணக்கு" ஓர் அப்பாவி கணக்குப் பிள்ளை விடுதலைப் புலிகளின்
கொடுமைக்கு ளாகி அடிபட்டுச் சாவதைச் சித்தரிக்கிறது. இந்தத் தொகுப்பைத் தயாரித்தவர்களுக்கு இலங்கை அரசியலில் ஒருதலைச் சார்புணர்வு கிடையாது என்பதற்கு இது நல்ல எடுத்துக் காட்டு. (னால் இந்தத் தொகுப்பில் அரசியல் கார்ட்டூன்கள் வரைந்துள்ளவர்க்கு தீவிரமான ஒருதலைச் சார்பு உண்டு.)

எழுத்தாளர் வாழ்கின்ற நாட்டின் சூழல் நன்கு சித்தரிக்கப்படும் கதை ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தின் (இங்கிலாந்து) "பனிக்காற்று". ஒரு பனிபெய்யும் லண்டன் வாழ்க்கையும் அங்கு ஒரு ங்கிலேய ஓவியப் பிரியனையும் நன்கு சித்தரித்துள்ளார். சூழலையும் நிகழ்வுகளையுமே முதன்மைப் படுத்தும் கதை. நல்ல க்கம்.

மு. புஷ்பராஜனின் (இங்கிலாந்து) "தாயெனும் போதினிலே" ஒரு நினைவேக்கக் கதை. லண்டனில்
இருந்தவாறு இலங்கையில் தன் தாய் இறந்து போன சூழ்நிலைகளை நினைத்துப் பார்க்கும் ஒருவனின் கதை இது. உணர்வுகளைப் பிழியும் எழுத்து புஷ்பராஜனின் எழுத்து.

அ.இரவியின் (இங்கிலாந்து) "எனது கிராமத்தைப் பேய்கள் சப்புகின்றன" என்னும் கதை யாழ்ப்பாணத்தைக் காக்க மற்றவர்கள் போராடும்போது அதில் கலந்து கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் ஒருவரின் குற்ற வாக்குமூலம் போல அமைகிறது. திறமிக்க எழுத்து.

பெண்ணியத்தை முதலில் அறிமுகப்படுத்துவது சந்திரா ரவீந்திரனின் (இங்கிலாந்து) "யாசகம்".
சுதந்திரமாக வளர்ந்த பெண் திருமணத்தின் பெண் ணின் அடக்குமுறைக்கு ளாகும் இந்தக் கதையில் கக் கடைசி வரியில் "என் ஒற்றைக் குரலுக்கு சக்தியுண்டு என்ற நம்பிக்கையோடு நான் கூவத் தொடங்குகிறேன்" என்ற வாக்கியத்தில் மட்டுமே பெண்ணியப் போராட்டம் உண்டு.

முல்லை அமுதனின் (இங்கிலாந்து) "சிறைகளில் இருந்து" புலிகள் என்று சந்தேகிக்கப் பட்டவர்கள்
சிங்களவரின் சிறைகளில் கொடுமை அனுபவிக்கும் கதை. இறுதியில் உண்ணவிரதம் இருந்து
போராடுகிறார்கள்.

விமல் குழந்தைவேலின் (இங்கிலாந்து) "பேய் நாவை" சுராவின் "ஒரு புளியமரத்தின் கதை"யை நினைவு படுத்தும் படைப்பு. ஒரு கிராமத்தின் நாவல் மரத்தை வைத்துக் கொண்டு அதைச் சுற்றிய சமூக வாழ்வைச்  சொல்லுகிறார்.

சுமதி ரூபனின் (கனடா) "அம்மா இது உன் உலகம்" ஒரு பெண்ணியக் கதை. அம்மாவின்
தலைமுறையிலிருந்து மகளின் தலைமுறை மாறி வருவதை அழுத்தமாகக் காட்டும் இந்தக் கதையில் கொஞ்சம் பிரச்சார தொனி உள்ளது.

வசந்தி ராஜாவின் (கனடா) "உயிர் கூச்சம்" நினைவேக்கக் கதை. கனடாவில் வாழ்பவர் வன்னியில்
தனது வாழ்வை எண்ணிப் பார்க்கிறார். மிகவும் மிருதுவான சொற்களில் உணர்வுமயமான காட்சிகள். மிக நல்ல க்கம்.

பிரதிபா தில்லைநாதனின் (கனடா) "இன்றில் பழந் தேவதைகள், தூசிபடிந்த வீணை நினைவுகள்"
உக்கிரமான பெண்ணிய எழுத்து. திருமணத்தில் திருப்தி அடையாத பெண் பழைய காதலனை எண்ணி  ஏங்குகிறாள். வாசகர் மனதில் அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடியதான மிகவும் கவனிக்க வேண்டிய கதை.

மணி வேலுப்பிள்ளை (கனடா) "எங்கள் ஊரின் பொற்காலம்" நகைச்சுவையுடனான கதை. கிராமத்தில் கோழி வளர்க்கும் கதை.

[இந்தக் கதையையும் முன் சொன்ன நகைச்சுவை உணர்வு மிகுதியாக உள்ள "திரியாப் பாரை"
மற்றும் "கூடு கலைதல்" கிய கதைகளை மீண்டும் யோசித்துப் பார்க்கும் போது ஒரு இலக்கியத்தின்
தீவிரத்தை (seriousness) இவை மலினப் படுத்துகின்றனவா (trivialise) என்னும் கேள்வி
மனதில் ஓடுகிறது. இதற்கு எனக்கு அறுதியான விடை ஒன்றும் தெரியவில்லை. சித்தார்த்த சே
குவேராவின்  (பின்னர் காண்க) எழுத்துக்களில் உள்ள நிகழ்வுத் திணிப்புக்களை யோசிக்கும்போதும்
இந்தக் கேள்வி எழவே செய்கிறது.]

முத்துலிங்கத்தின் (கனடா) "கூந்தலழகி" ஒரு தம்பதியரின் பிணக்குக் கதை. முடிவில் வாசகர் எதிர்பார்க்க முடியாத யூகிக்க முடியாத ஒரு திருகு உள்ளது. நல்ல பண்பட்ட எழுத்து.

காஞ்சனா தாமோதரனின் (அமெரிக்கா) "சியாரா நேவாடா" மிகச் சிறந்த கதை. மனதின்
முடிவில்லாத தேடல்களை ஓர் அறிவியல் புனைகதையாக க்கியுள்ளார். அறிவுக்கூர்மையும் சிந்தனைக் கூர்மையும் தெறிக்கும் எழுத்து. மிக நல்ல கதை சொல்லும் உத்திகள். இத்தனையும் ஒரு ர்வத்தைக் குலைக்காத கதைச்சுவையுடன் நெய்து வைக்கிறார். இதன் கருவின் செழுமையும் காலத்தை முன்னோகிப் பார்க்கும் தன்மையும், பின்னணியின் புதுமையும் இந்தத் தொகுப்பில் தனி கம்பீரத்தை உடைய கதையாக இதை க்கியுள்ளன.

இரா.கோவர்தனன் (அமெரிக்கா) "வேப்பம்பூப் பச்சடி"யில் கடவுள் நம்பிக்கையை கருவாக எடுத்துக்
கொள்ளுகிறார். இதமாகப் படிக்க முடியும் யாதார்த்த பாணிக் கதை.

ஸ்ரீதரன், சித்தார்த்த சேகுவேரா (இருவரும் அமெரிக்கா) கியோருக்கு இந்தத்
தொகுப்பில் சிறப்பு இடம் தரப்பட்டிருக்கிறது. புலம் பெயர்ந்த படைப்புகளின் வாசக / விமர்சன
உலகுக்கு வெளியே அதிகமாக அறியப்படாத இந்த இருவரும் கவனிக்கப்பட வேண்டிய படைப்பாளர்கள் என்பதை உணர்த்துவது இந்த முக்கியத்துவ இடத்தின் நோக்கமாக இருக்கலாம். இவர்களின் படைப்பை வாசித்தபின் தொகுப்பாளர்களின் அந்த நோக்கம் நியாயம் என்றே படுகிறது.

ஸ்ரீதரனின் இரண்டு நீண்ட கதைகள் பன்முக வாசிப்புக்கும் அர்த்தப் படுத்திக் கொள்ளுவதற்கும் இடம் தருபவை. "இராமாயணக் கலகம்" என்னும் கதை இராமன் ண்ட அயோத்தியைத் தேடி நவீன கால பக்தன் ஒருவன் புறப்பட்டு நீன்ட பயணம் செய்து பல வகை வாழ்க்கை அனுபவங்களை அடைவதை பல்வேறு உணர்வுகளுடன் சொல்லுகிறது. "நெடுங்கதையாடல்" என்னும் வடிவம் அருகி வரும் இந்த நாட்களில் ஸ்ரீதரனின் இந்த நெடுங்கதை ஒரு நல்வரவாகும். அயோத்தியைத் தேடும் இந்த நெடும், நெடுநாள் பயணம் ஒரு வாழ்க்கைப் பயணம் போலவே அமைகிறது. நமது தொன்மைகளின் அர்த்தங்களைத் தேடும் ஒரு முயற்சியில் பொய்கள், போலிகள், மூட நம்பிக்கைகள், சுய நலங்கள் இவற்றைக் கண்டு, இவற்றின் ஊடேதான் ஒரு மனிதனின் வாழ்வு நடைபெற வேண்டியிருக்கிறது என இதற்கு ஒரு பொருள் கொள்ளலாம். இந்தச் சூழ்நிலைகளுடன் ஒருவன் சமரசம் செய்து கொள்ளாமல் தேடலை மிகவும் தீவிரமாக்கினால் அது துன்பத்தில்முடியும் என்ற வாழ்க்கைப் பாடமும் இதில் இருக்கிறது. இந்தப் பாடத்தை உணர்த்த மிக நுணுக்கமான, னால் எளிதாகக் காட்சி தரும் நிகழ்வுகளில் சிக்கல்கள் மிகுந்த வாழ்க்கை அனுபவங்களைக் காட்டுகிறார்.  தோய்ந்து படிக்க வேண்டிய நல்ல கதை.

"அம்பலத்துடன் று நாட்கள்" இதே பாடத்தை ஒரு மாந்திரிக யதார்த்த தளத்தில் வைத்து, முன் சொன்ன கதையில் ஒரு வாழ்நாள் முழுக்க நடந்த நிகழ்வுகளை ஒரு று நாட்களுக்குள் வைத்துச் சொல்லிவிடுகிறது. இந்த வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகள் நாம் சாதரணமாகப் புரிந்து கொள்வதற்கும் மேலான பிரபஞ்ச மர்மங்களை தங்களகத்தே கொண்டவை என்பதை இது உணர்த்துகிறது. வாழ்க்கை என்பது ஒரு கணக்குக்குள் அடங்கியதுதான். னால் அது பிரபஞ்சக் கணக்கு. அதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் கொஞ்சம் மர்மமான திக்குகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. அதை சூசகமாகக் காட்டுகிறது அடர்த்தியான நிகழ்வுகள் உள்ள இந்தக் கதை.

சித்தார்த்த சேகுவேராவை வாசிக்க, அனுபவிக்க, இறுதியாகப் புரிந்துகொள்ள ஒரு மாதிரியான மனத்
தயாரிப்புகள் வேண்டும். இங்கே ஒரு திசைகள் தெளிவில்லாத, நேரான கால ஓட்டம் இல்லாத,
வாடிக்கையாக ஒழுங்கு செய்யப்பட்ட பாதைகள் போடப்படாத குகைப் பிரதேசத்திற்குள் புகுகிறோம் என்பதை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏனப்படி புக வேண்டும் என்றால் மனித மனம் அப்படித்தான் இருக்கிறது. எழுத வேண்டும் என்றும்
பேச வேண்டும் நாம் முனையும் போது கல்வி என்றும் இலக்கிய மரபு என்றும் சமுதாய ஒழுக்கம்
என்றும் நாமாக நிர்ப்பந்தித்து ஏற்படுத்திய விதிகளுக்குள் நாம் எழுதுகிறோம், பேசுகிறோம். னால்
இந்தக் கட்டாயங்கள் இல்லாதபோது மனம் தானாகச் சிந்திக்கும்போது இப்படித்தான் சிதறிச் சிதறிச்
சிந்திக்கிறது. கண்டதைச் சிந்திக்கிறது. சம்பந்தா சம்பந்தமில்லாத இடையூறுகளைச் சந்தித்து ஏதாவது
ஒருவகையில் தன்போக்கில் சமரசப் படுத்திக் கொள்ளுகிறது.

சே குவேரா தன் மனத்தைப் பேசவிடுகிறார். மரபுகளை இரண்டாம் பட்சமாகத் தள்ளிவைத்துவிட்டு
மனத்தின் இயற்கையான ஓட்டத்திற்கு முதன்மை கொடுக்கிறார். அவர் பலவற்றையும் கண்டு கேட்டு
உண்டு உள்வாங்கி, உண்மைகளையும் (facts) உணர்வுகளையும் தன் மனக்கிடங்கில் போட்டு
வைத்திருக்கிறார். இவற்றில் பல தமிழ்ச் சமூக, இலக்கியச் சூழல்களுக்கு அப்பாற்பட்டவையும் கூட.
அவர் ஒன்றைச் சொல்ல நினைக்கும்போது மனம் பிடித்துக் கொண்டு ஓடும் ஏதாவது ஒரு இழையில்
இந்த உண்மைகளும் உணர்வுகளும் பல தாமாகக் கோர்த்துக் கொள்ளுகின்றன. அவர் அவற்றைத்
தள்ளி வைப்பதில்லை. எல்லாவற்றையும் அள்ளி வைக்கிறார்.

வாசகன் எல்லாவற்றையும் வாசித்துவிட்டுத் தானாகத்தான் அதன் உள்ளார்ந்த அர்த்தங்களைப் பிரித்து அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த "சிகை சிரைப்பு" என்ற கதையை எடுத்துக் கொள்வோமே. முடி வெட்ட இவர் நண்பனுடன் போய் முடி வெட்டிக் காசு கொடுத்துத் திரும்பி வருவதுதான் கதை. கதை நிகழ்வது அமெரிக்காவில் ஒரு நகரில். இவர் மனைவியோடும் நண்பனோடும் வீட்டிலிருந்து புறப்பட்டுப் போய் காத்திருந்து முடி வெட்டிக்கொள்கையில் என்னென்ன பார்க்கிறாரோ, என்னென்ன சிந்திக்கிறாரோ அது அத்தனையும் இந்தக் கதையில் சொல்லுகிறார். அவை ஏதாகிலும் ஒரு வகையில் முக்கியமான விஷயங்களா என்றால் இல்லை. னால் அவை எல்லாருக்கும் வெவ்வேறு விதங்களில் ஏற்படுகின்ற நிகழ்வுகளும் அனுபவங்களும்தான். முக்கியமானவை மட்டும்தானா வாழ்வில் நடக்கின்றன? முடிவெட்டிக் கொள்ளும் போது ஒடிக்கோலோன் மணப்பதும், மாட்டியிருக்கும் குஷ்பு காலண்டரும், முடி வெட்டுபவர் நம் தலையைப் பிடித்து அழுத்தும்போது ஏற்படும் எரிச்சலும், அங்கிருக்கும் அட்டை கிழிந்த சினிமா புத்தகமும், கத்தரிக்கோலின் உலோகம் உராயும் சப்தமும், மயிர் உதிரும் ஓசையும், மயிர் மற்றவர்கள் காலில் பட்டு நசுங்கும்போது உண்டாகும் கூச்சமும் முக்கியமா இல்லையா? ஓர் அமெரிக்கச் சிகையலங்காரக் கடையில் சே குவாரா கவனிக்கும் விஷயங்களைப் படிக்கும்போதுதான் நமது வாழ்க்கையில் வழக்கமாக நடக்கும் இவற்றைக் கவனிக்காமல் இருந்துவிட்டோமே எனத் தெரிகிறது.

"தோற்பை", "அறைச்சி", "காகங்கள்" கிய கதைகளிலும் இந்த அனுபவங்களே!

இந்த வகை எழுத்து "நினைவோடை உத்தி" என நாம் அறிந்திருக்கும் வகைக்கு நிகராக "நிகழ்வோடை உத்தி" எனச் சொல்லலாம். னால் இந்தப் புதிய பில்லை அதற்குப் பொருந்துமா என்பது தெரியவில்லை.

முடிவுரை:

"கண்ணில் தெரியும் வானம்" ஈறான இத் தொகுப்புகள் தமிழில் புதிய எழுத்துப் போக்குகளைப் பதிவு செய்து வைக்கும் காலப் பெட்டகங்களாக கி வருகின்றன. காலப் போக்கில் படைப்பிலக்கியத்தில் ஏற்படும் மாறுதல்க¨ளை ஒப்பு நோக்கும் முயற்சிக்கு அரிய தளவாடமாக இவை உதவும். (தமிழ்நாட்டில் நவீன இலக்கியச் சிந்தனை வெளியிட்டு வரும் ண்டின் சிறந்த சிறுகதைகள் தொகுப்புகளும் இவ்வாறானவையே.)

இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த எழுத்தாளர்களுக்குத் தாய்நாட்டின் நினைவு இன்னும் தொப்புள்கொடியாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது. கவே அங்கிருந்தவாறு பலர் இன்னும் இலங்கைக் கதைகளைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நினைவேக்கத்திலிருந்து பல அருமையான கதைகள் பிறந்துள்ளன. னால் இது ஒரு கற்பனைத்த் தேக்கம் கிவிடுகிறது. இவற்றை எழுத இலங்கையில் பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். கவே புலம் பெயர்ந்தோர் தங்கள் எழுத்தின் அடுத்த கட்டமாகப் புகலிட நாட்டில் ஏற்படும் அனுபவங்கள் பற்றி எழுதுவதில் கவனம் அதிகம் செலுத்த வேண்டும். அப்போதுதான் இந்தக் கலாச்சார நேரெதிர் மோதல்கள் அவர்களுக்கு புதிய சொல்பொருள்களைக் கொடுத்து தமிழுக்குப் புதிய க்கங்களைச் சேர்க்க முடியும். இந்தப் புதிய க்கங்களுக்கு முன்னோடிகளாக அ.முத்துலிங்கம், நா.கண்ணன், காஞ்சனா தாமோதரன் கியோரைச் சுட்டிக் காட்டுவது பொருந்தும்.

இந்தத் தொகுப்பில் அரிய கவிதைகள் உள்ளன. ஆனால் கட்டுரைகளை முற்றாக விட்டு விட்டார்கள். இது கற்பனா இலக்கியத்திற்கான இடம் மட்டுமே என வரையறுத்துவிட்டது போலத் தோன்றுகிறது. இப்படி வரையறை செய்வது சரியே என்று தோன்றினாலும், இதற்கு முன் வந்துள்ள தொகுப்புகளில் கண்ட அரிய சமுதாய, இலக்கியத்  திறனாய்வுக் கட்டுரைகளைக் காணாதது எனக்கு ஓர் பெரிய இழப்பாகவே படுகிறது.

இத்தனை பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தொகுப்பாளர்கள், இதில் இடம் பெறும் எழுத்தாளர் பற்றிய ஒரு தகவலையும் (நாடு தவிர) சொல்லாமல் விடுவது பெரும் ஏமாற்றமாக இருக்கிறது. நல்ல படைப்புகளைப் படித்து முடித்து "யார் இந்த அற்புதப் படைப்பாளர்?" என்ற விந்தை ஏற்படும்போது  அவர் முகமும் முகவரியும் தெரிவதில்லை. இந்தத் தொகுப்புகள் "காலப் பெட்டகம்" என்ற வருணனைக்கு தங்களை முற்றாக தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் எழுத்தாளர் பற்றிய விவரமான குறிப்புகள் அவசியம் தேவை.

எத்தனை மகத்தான முயற்சி!! இதன் தலைமைத் தொகுப்பாளர் பத்மனாப ஐயர் தமிழ்ப் படைப்புலகத்தின் ழ்ந்த நன்றிக்கு உரியவர்.

("Kannil Theriyuthu Vaanam" is an anthology of creative literature, carrying samples of work  by writers of the Tamil diaspora, with special empahasis on exiled Sri Lankan Tamil writers. Compiler: R. Pathmanaba Iyer. For information on availability and price email him at:
Rathina Iyer Pathmanaba Iyer <ripiyer@yahoo.com>)

 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 17:07
TamilNet
HASH(0x55f5199c69a0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 17:07


புதினம்
Thu, 28 Mar 2024 17:07
















     இதுவரை:  24713151 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6029 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com