அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 18 April 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 8 arrow ஒரு கலைஞனின் இறந்தகாலம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஒரு கலைஞனின் இறந்தகாலம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: சாந்தி ரமேஷ் வவுனியன்  
Tuesday, 10 August 2004

இன்றைய புதுவருட வாழ்த்துத் தொலைபேசி அழைப்புக்களின் தொடராகவே அந்த அழைப்பையும் எடுத்து....

கலோ வணக்கம் என்றேன்.

மறுபக்கத்திலிருந்த வந்த அந்த அழைப்பு என்னைச் சில கணம் திகைக்க வைத்தது.

என்ன ஞாபகமில்லையா.....மறந்திட்டீங்களா....?
 
இல்லை குரல் பிடிபடுகுதில்லை.....பேரைச்சொல்லுங்கோ....

ஐயோ...! இவ்வளவு கெதியிலை வயது போகுமெண்டு நான் நினைக்கவேயில்லை.....

கோபம்தான் வந்தது. இந்தத் தொலைபேசியழைப்புக்களில் சில தொல்லைபேசும் அழைப்புக்களின் தொல்லையின் ஒரு குரலாகவே அதையும் எடுத்துக் கொண்டேன். வந்த கோபத்தை குரலிலிருந்து மறைக்க என் குரலைத் தாழ்த்திக் கேட்டேன்.

யாரெண்டு தெரியேல்ல.....யாரெண்டு சொல்லீட்டுக் கதையுங்கோ....என்றேன்.

அப்ப ரகுவிட்டைக் குடுங்கோ.....
என்றது அக்குரல்.

ரகு உமக்கு ரெலிபோன்.....யார்....? தெரியேல்ல.....ஆனா பேர் சொல்லாத அழைப்பிது. தொடர்பிலிருந்தவருக்கும் கேட்கக்கூடியதாகவிருந்தது எனது பதில்.

கலோ வணக்கம் ! டேய் மச்சான் நான் பொழிலன் கதைக்கிறன்டா.....என்னடா என்ர சினேகிதிக்கு என்ர குரல் விளங்கேல்லப்போலை....

அட நீயே நானும் ஆரெண்டு யோசிச்சன். சொல்லடா.....! எப்பிடிப் புதுவருசமெல்லாம் போகுது....

அது தன்பாட்டிலை போகுது....நீ ரெலிபோனை என்ரை சினேகிதியிட்டைக் குடு....

இந்தாரும் உமக்குத்தான் உம்மடை சினேகிதன். என்றான் ரகு. றிசீவர் என் கை மாறுகிறது.

என்ன குரலை மாத்திக் கதைச்சா ஆரெண்டு கண்டுபிடிக்கிறது.....ம்.....உங்களுக்கிப்பெங்க எங்கடை ஞாபகங்கள்..... சொந்தங்களைக் கண்டவுடனும் எங்களையெல்லாம் மறந்திட்டீங்கள்.

நான் மறக்கேல்ல....நீங்கள் தான் மறந்திட்டீங்கள்....நான்தான் விசா இல்லை....ஆற்றையன் வீட்டிலையிருக்கிறன்..... நீங்கள் நல்ல வீசாக்களோடை அந்தமாதிரி இருக்கிறியள்....ஒருக்கா எடுத்து எப்பிடியடா இருக்கிறாயெண்டு கேட்டிருக்கலாம் தானே....

நானும் விட்டுப்பிடிச்சனான்....நீங்களா எடுக்கிறீங்களோண்டு....ஆனா ரகுவோடை அடிக்கடி உங்களைப் பற்றிக் கதைப்பன்.

எனக்கு லண்டன் பிடிக்கேல்லைச் சினேகிதி.....பேசாம ஊருக்குப் போகலாம் போலையிருக்கு.....ச்சே என்னண்டு 8 வருசமா வெளிநாட்டிலை இருக்கிறியளோ தெரியேல்ல.....ஒருவருசமே மனிசருக்கு வெறுத்துப் போய்க்கிடக்கு....

இப்ப விளங்குதே வெளிநாடெண்டா எப்பிடியெண்டு....

இனி விளங்கித்தானென்னேயிறது.....இது அவனது சலிப்பு.

ஏன் ஆத்துக்காறீன்ரை ஞாபகம் வந்திட்டுதோ....?

"யாம் பெற்ற துன்பம் நீங்களும் பெறுக"....என் கேலிகலந்த வார்த்தைகளுக்குப் பதிலாக....

உங்களுக்கென்னிலை பகிடிதான். தலையிடியும் காச்சலும் தனக்குத் தனக்கு வந்தாத்தான் தெரியுமாம்.
என்றான்.

கடைசியா என்ன கதையெழுதின நீங்கள் பொழிலன்.....!

கவிதையொண்டு எழுதினனான். வாசிக்கிறன் கேளும்.

வந்த காசின்னும் கட்ட வக்கில்லை....உலகம் முழுதும் ரெலிபோனடிப்பு....உது கட்டாயம் தேவைதான்.....அங்கை ஊரிலை நம்பியிருக்கிறவையைக் கூப்பிட வேணும் அவையும் இங்கினை கெதியிலை வந்திட வேணுமெண்ட நினைப்பு கொஞ்சமும் இல்லாம.....நெடுக ரெலிபோனடிப்புத்தான் இஞ்சை வேலையாக்கிடக்கு.....

அவன் கவிதைகள் என் காதை வந்தடையும் முன்னரே என் காதுகளில் வந்து விழுந்த அந்த வார்த்தைகள் என்னை ஒரு கணம் தடுமாற வைத்துவிட்டது. அவனிடம் அதுவரை துள்ளிக்குதித்த குதூகலமும் கும்மாளமான சிரிப்பும் அடங்கிப் போயிருந்ததன் அடையாளமாக......

நான் பிறகெடுக்கிறன். ரகுவுக்கும் சொல்லும். சரியென்ன.

என்றவன் தொடர்பைத் துண்டித்துக் கொண்டான்.

புதுவருட வாழ்த்துச் சொல்லத் தொலைபேசி எடுத்து இத்தனை மகிழ்ச்சியாகக் கதைத்தவனுக்கு யார் அந்தக் கருணையற்ற வார்த்தைகளைச் சொல்லியது.....? அவனது மகிழ்ச்சியெல்லாம் சில மணித்துளிகளில் காற்றள்ளிப் போகக்காரணமானவர்கள் யார்....? சிரித்தபடி கதைத்தவனின் குரல் மாறி அவன் அழுகிறான் என்பதை உறுதிப்படுத்திய அவனது விடைபெறுதலுக்குக் காரணமான அந்தக் குரல் யாருக்குரியது.....? என்னால் அறிய முடியாதிருந்தது. புதுவருடவாழ்த்துப் புளித்துப்போயிருந்தது எனக்கு.

இருள் மூடிப்பொழுது சாய்ந்து இன்னும் தொலைபேசியழைப்புக்களின் வருகைகள் குறையவேயில்லை. அடுத்து வந்த அழைப்புக்களுக்கு என்னால் சரியாக பதில் கொடுக்க முடியாது மனது குழம்பியிருந்தது.

அது எல்லோருக்கும் தூக்கத்துக்கான நேரம். ரகுவின் நெஞ்சில் தலையை வைத்தபடி து}க்கத்தைத் தொலைத்துவிட்டேன். பாதியுறக்கத்தில் போன ரகுவை என் குரல் அருட்டுகிறது.

ரகு....! ம்.....எனக்கு நித்திரை வருகுதில்லை....ஏன்.....?

பொழிலனை அங்கை யாரோ பேசினதுதான் ஞாபகத்துக்கு வருகுது....

அவன் திருப்பியெடுப்பான்....பேசாமப்படும்....

அதாராயிருக்கும் ரகு....!

அவன்ரை மச்சானாத்தானிருக்கும் மச்சான் நெடுக முணுமுணுக்கிறதாத்தான் முந்தியொருக்காச் சொன்னவன்.....

பாவமென்ன.....

என்னேயிறது....அவங்களிட்டைக் கை நீட்டி வாங்கியாச்சு....இனிப்பேசாமத்தானிருக்க வேணும்....

அதுக்காக அவேன்ரை காலுக்கை மிதிபடவேணுமே ரகு.....

"நக்கினார் நாவிழந்தார்" நீதானே அடிக்கடி சொல்றனீ.....

நாளைக்கு மத்தியானம் ஒருக்கா எடுத்துப்பாரும். என்னண்டு கேளும் அவனிட்டை.....

சரி பேசாமப்படும் நாளைக்குக் கதைப்பம்....

மீண்டும் உறங்குவதற்குத் தயாராக என் கைகளை இறுகப் பற்றி விழிகளை மூடினான் ரகு.

என் கைகளை மீண்டும் இறுகப்பற்றியபடி ரகு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். அவன் மார்பில் என் முகம் விடியலுக்குக் காத்திருந்தது. பொழிலன்தான் நினைவுக்குள் வந்து நின்றான்.
 
நானும் ரகுவும் காதலர்களாக இருந்த காலமது. பொழிலன் எனக்கு அறிமுகமானதும் அந்தக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஒரு புத்தக வெளியீட்டில். ஒரு பத்திரிகைக்காரனாக யாழ்ப்பாணத்தில் அறியப்பட்டவன் ஒரு இலக்கியக்காரனாய் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டது அன்றுதான். அந்தவெளியீட்டுக்கு வந்தவர்களில் அனேகமான வாய்கள் அவன் பெயரை உச்சரித்த போதுதான் அவனை நான் அடையாளம் கண்டு கொள்கிறேன்.

அக்காலத்தில் பிரபலமாக யாழில் வெளியான பத்திரிகையில் அவன் எழுதிவந்த தொடரின் தாக்கம் பலபேரைத் தொட்டிருந்ததையும் அந்தப் புனைபெயருக்குச் சொந்தக்காரன் இவன்தான் என்பதை நானும் அறிந்து கொண்டேன். அவனது அந்தத்தொடரை வாசிப்பதற்காகவே அந்தப்பத்திரிகையை வாங்கிய எனது விருப்புக்குரிய எழுத்தாளனை நேரில் தரிசித்ததில் எனக்குப் பெருமகிழ்வு. அவனுடன் அன்று உரையாடக் கிடைத்த சந்திப்பு பின்னர் அங்கங்கு காணுமிடங்களில் தொடர்ந்தது.

பொழிலனின் அந்தப்பரிச்சயம் பற்றி ரகுவுக்கு எழுதிய கடிதமொன்றில் எழுதிய போதுதான் அந்தச்செய்தி எனக்குக் கிடைத்தது.

அவன் என்ர மச்சான்....என்னைப்பற்றிக் கேட்டுப்பாரும் நிறையச் சொல்லுவான். என்ற ரகுவின் பதில் கடிதத்துடன்

அவனுக்கு நானும் உறவுக்காரியாக இருக்கிறேன் என்பதில் பெருமை கொண்டது மனம். ரகுவினதும் , அவனதும் ஊருக்குள்ளிருக்கும் எனக்குப்பிடிக்காத விடயங்களையெல்லாம் நினைவுபடுத்தி அவனுடன் உரையாடிக்கொள்வேன். அந்த நேரங்களிலெல்லாம் தான் பிறந்த ஊரின் பண்பாடு , வரலாறு என நிறையச்சொல்லி எனது கருத்துக்கான தனது எதிர்க்கருத்தினைச் சொல்லி என்னிடமிருந்து தப்பிவிடுவான். அத்தகையை ஒருநாளில்தான் எனக்கும் ரகுவுக்குமான உறவுபற்றிச் சொன்னேன் அவனுக்கு. எடுத்த எடுப்பிலேயே ரகுவின் குடும்பத்தினரின் குணங்களை, முகங்களையெல்லாம் விளக்கினான்.

கொஞ்சம் அவேட்டைக் காட்டுக்குணமும் இருக்கு...

ஆனா பிரச்சனையில்லாத சனம்....

ரகுவின்ரை நல்ல குணத்துக்கு 100புள்ளி போடலாம்....

நான் கேக்கிறனெண்டு கோவிக்காதையுங்கோ யாழ்ப்பாணத்தார் எங்கடை ஊருக்கு வரவே பெரிய திமிர்பண்ணுவினம். நீங்களென்னண்டு ரகுவைக் காதலிக்கிறீங்கள்....?
 
அவனது அந்த வினாவுக்கு சிரிப்பை மட்டும் உதிர்த்தேன்.

ஓமோம் விளங்குது....இதுதான் காதலெண்டு சொல்ல வாறியளென்ன....

தானே பதிலையும் சொன்னான்.

அனேகமான இளையவர்களைக் கொள்ளை கொண்ட அந்த இலக்கியக்காரன், மாவட்டத்திலேயே சிறந்த பத்திரிகையாளன் என்ற பெயரைப்பெற்ற துணிந்த அந்தப்பத்திரிகைக்காரன் இந்தளவு எளிமையாக இருப்பான் என நான் எண்ணியே இருக்கவில்லை. அதை ஒரு தரம் ரகுவுக்குச் சொன்ன போது....

"அதுதான் எங்கடை மண்ணின்ரை மகிமை" என்றான் ரகு.

எங்கள் காதல் தன்பாட்டில் வளர்ந்து ஆண்டுகள் சிலவற்றை விழுங்கிய போது ஊர் நிலமைகள் சீர் குலைந்து உலகெங்கும் தமிழினம் சிதறுப்படத் தொடங்கியது. அந்தச் சிதறலில் ரகுவும் புலம்பெயர்ந்து கடிதங்களுடன் மட்டுமான எங்களது நேசம் தொடர்ந்து கொண்டிருந்தது. அதன்பின்னர் பொழிலனின் இலக்கிய வாழ்விலும் நிறைய மாற்றங்கள். அவனும் காதலில் வீழ்ந்து ஒரு அழகியின் விழிகளில் இறங்கியிருந்தான். ஆனால் அவனை நேசித்த விழிகளோ அதிகம். காலம் அவனை ஒரு வழியில் இறக்கிவிட்டுத் தன் வழியில் போய்க்கொண்டிருந்தது.

அது நான் ரகுவிடம் ஜேர்மனி போகும்காலம். யாழ்மண்ணைவிட்டு , என்னு}ர் , உறவுகள் எல்லோரையும் விட்டு ரகுவின் சொந்தங்களை சந்தித்து கொழும்பு செல்லக்காத்திருந்த ஒரு மாலை.

உங்களைத்தேடிப் பொழிலன் வந்திருக்கிறான். ரகுவின் தம்பி வந்து சொன்னான். வீட்டுக்கு முன்னிருந்த இராணுவக்காவலரணருகில் மோட்டார் வாகனத்தை நிறுத்திவிட்டுப் பொழிலன் நின்றிருந்தான்.

என்ன வெளியிலை நிக்கிறீங்கள்.....?

உள்ளை வாங்கோ....!

நீங்க நிக்கிறீங்களோ தெரியாதெண்டுதான் வந்தனான்.

என்றபடி உள்ளே வந்தான் பொழிலன்.
 
அரிநெல்லிக்குக் கீழிருந்த பிரம்புக் கதிரையில் இருவரும் அமர்ந்தோம்.

எப்ப பயணம்....?

எங்கை இவங்கடை பாஸ் கிடைச்சாத்தான் மிச்சம்,

ஓ...இப்ப ஆமியும் பாஸ்தாறதெண்டா பெரிய அலைச்சல் குடுக்கிறதாத்தான் அண்ணையும் சொன்னவர்.

ரகு எப்பிடியாமிருக்கிறான் ? ரெலிபோனெடுக்கிறவனே....?

ம்....இருக்கிறார்.

நானும் லண்டன் போறதுக்கு யோசிச்சிருக்கிறன்.

வனிதான்ரை அக்கா, அத்தானவை உதவிசெய்யிறதா எழுதியிருக்கினம்.

வனிதாவும் தன்ரை சகோதரங்களுக்கு முன்னாலை நானும் சமனா இருக்க வேணுமெண்டு விரும்பிறாள்.

என்னேயிறதெண்டு தெரியாமக்கிடக்கு.

ஆனா என்ரை வீட்டுக்காறர் விரும்புகினமில்லை.

ஏனாம் ?

தெரியாதே அவள் யாழ்ப்பாணம் நாங்கள் இந்த ஊர். அதுதான் பெரிய பிரச்சனையிப்ப....

ஊரைப்பாத்தே இப்ப ஆமி அடிக்கிறான்....?
 
ஓ...அதுசரிதான்....ஆனா பழசுகள் குழம்புதுகள்.

அவை திமிர் காட்டுவினமாமெண்டு அம்மா நச்சரிக்கிறா. அக்காவை, அண்ணா எல்லாரும் எதிர்க்கினம்.

ஆனா அவளைத்தான் செய்யிறதெண்ட முடிவோடை நானிருக்கிறன்.

எல்லோராலும் நேசிக்கப்படுகின்ற அந்த இலக்கியவாதியிடமிருந்து வெளிவந்த அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் துயர் தோய்ந்து வழிந்தன. ஆனால் அவன் தனது பிடியிலிருந்து தளரேன் என்ற உறுதியோடு என்னிடமிருந்து விடைபெற்றுப்போனான்.

சிங்களவர் தமிழரை அழிப்பதிலும், தமிழருக்கு ஓருஅடிநிலம் கூடத்தரோமென்று கொல்கிறார்கள். ஆனால் இன்னும் தமிழர்களாகிய எம்மிடமிருந்து எம் மனவுலகிலிருந்து விடுபடாமல் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலையென்று பேதங்கள். ஊருக்குள்க்கூட அந்தக்குறிச்சியாருடன் இந்தக்குறிச்சியார் சேரமாட்டோம், இந்தக்குறிச்சியாருடன் அந்தக்குறிச்சியார் சேரமாட்டோமென எத்தனை பேதங்கள், பிடிவாதங்கள், கௌரவங்கள்.....?

அவன்போன பின்னர் என் மைத்துனன் ஒரு பெண்ணின் படத்தைக் காட்டிக் கூறிவைத்த இன்னொரு கதையிது.

இவவும் பொழிலனும் ஒண்டாப்படிச்சவை.

பொழிலனெண்டா உயிர்.

பொழிலனை இந்த அக்கா விரும்பிறா.
 
இவவும் நல்லா கவிதை எழுதுவா.
 
ஆனா பொழிலனுக்கு விருப்பமில்லை.
 
அவ பொழிலன் இல்லாட்டா தனக்குக் கலியாணமே இல்லையெண்டு இருக்கிறா.

நான் ஜேர்மனி வந்து சேர்ந்து அடுத்த ஆண்டு தனக்குத் திருமணம் என திருமண அழைப்பிதழ் அனுப்பியிருந்தான். நாட்டுப்பிரச்சனை, வீட்டுப்பிரச்சனை, இலக்கியம், தனது எழுத்துக்கள் என அவனிடமிருந்து மாதம்ஒரு கடிதம் வந்து சேரும். அந்தக்கடிதங்களுக்குள் அவனது உயிரும், உணர்வுகளும், கலந்திருக்கும். மண்ணின் அவலங்களை அனுபவித்து அவன் எழுதும் வரிகளுக்குள் விழிகள் விழுந்து அழத்தோன்றும். பலநாட்கள் அழுதும் இருக்கின்றன.

சூரியக்கதிர் சுட்டெரித்து யாழ்பூமி வனவாசமிருக்கவென விடிந்த காலையில் அதிர்ந்த குண்டுச்சத்தங்களில், ஆவிபறிந்த ஆன்மாக்களின் சாவுகளில், சாவுகள் விழுந்து துயர்தோய்ந்து அழுதவர்கள் மத்தியில் இவனும் துயரில் மூழ்கி, ஒரேயொரு செல்வக் குழந்தையையும், தன்காதல் மனைவியையும் கிளாலி கடத்தி வன்னிக்கு அனுப்பிவிட்டு தனியே தென்மராட்சியில் பத்திரிகைக்காரனின் கடன்முடிக்க இரவுகளையெல்லாம் பகல்களாக்கி கடமையில் நின்றான்.

அவனது தொடர்பும் அறுந்து போய்.....அவனும், அவனது குடும்பமும் எங்கிருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? எதுவுமறியப்படாது ஒருவருடம் ஓடியொழித்துக்கொண்டது. ஊர் நினைவுகளும், உறவுகள் நினைவுகளோடும், அவனது ஞாபகங்களும் எங்கள் உயிர்களையும், உணர்வுகளையும் ஆக்கிரமித்து.....அப்போது வாரம் 3நாள் ஐரோப்பாவில் கேட்கக்கூடியதாகவிருந்த ஒருமணித்தியால தமிழ்சேவை வானொலியின் செய்திக்காகத் தவமிருந்து வாரமொருதரம் வாசல் வந்தடையும் ஈழமுரசு பத்திரிகையின் செய்தியிலும் தான் உயிரே இருந்தது.

அப்படியே கடந்த சில ஆண்டுகளில் ஒரு ஆண்டு. அதுவும் ஒரு புதுவருடம். இரவு 12மணிக்கு வந்த 3வது தொலைபேசியழைப்பு அது அவனது அழைப்பு. கனவுலகிலா அவன் குரல் கேட்கிறது என ரகு என்னிடம் கேட்டான்.
 
டேய் விளையாடாதையடா உண்மையா லண்டனிலையா நிக்கிறாய்..... இது ரகு....

ஓம் மச்சான் இந்தா இந்த இலக்கத்துக்கு ரெலிபோனெடுத்துப்பாரன்..... இது அவன்.....

தனது தொலைபேசியிலக்கத்தைச் சொன்னான். ரகுவிடமிருந்து தொலைபேசி என்கைமாறியது.
 
என்னக்காச்சி மறந்திட்டீங்களே ? இல்லை நீங்கள்தான் தொடர்பொண்டுமில்லாம விட்டிட்டீங்கள்.....

எங்கை யாழ்ப்பாணம் இடப்பெயர்வோடை மனிசர் அலைஞ்ச அலைச்சலுக்கு சத்தியமா ஒருதற்றை ஞாபகமும் வரேல்ல.....

உங்கடை இலக்கமும் மாமீயவேட்டத்தான் வாங்கி இப்ப கதைக்கிறன்.

ஊர்ப்புதினங்களிலிருந்து அவனது இலக்கியப்புதினம் வரையும் 47நிமிடங்கள் கதைத்து முடிந்தது. அன்று அவன் விடைபெற்றுக்கொண்ட பின் ஒருவாரம் நாம் தொலைபேசியில் கதைப்போம் மறுவாரம் அவன் எடுப்பான். இப்படி விட்டுப்போன எமது உறவு தொலைபேசியூடாகத் தொடர்ந்தது.
 
அண்மைக்காலங்களாக அவனது கதைகளில் விரக்தி மேலிட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. அதை அன்றொருநாள் அவனிடம் கேட்ட எனக்குச் சொன்னான்.
 
ஏன்ரா இஞ்சை வந்தமெண்டிருக்கிது.....

பேசாம அங்கினை பத்திரிகைக்காரனா இருந்திருக்கலாம்.....

எல்லாருமே பணத்தைத்தான் எதிர்பாக்கினமிங்கை.....

எவருக்கும் மனிசரை நேசிக்கத் தெரியேல்ல.....

மனிசத்தைக் காக்கத் தெரியேல்ல......

ஊரிலை கேள்விப்பட்டிருப்பீர் மாமியார் கொடுமை அதைவிட மோசமான மச்சினி, சகலன் கொடுமையை நானனுபவிக்கிறன்......

ஒரு மனிசரோடை ரெலிபோன் கதைக்கேலாது, ஒரு சினேகிதரைப் பாக்கப்பழகேலாது....

உடனும் தோம்பவிழ்க்கத் துவங்கீடுவினம்.....

அம்மா, அண்ணா, அக்காவை உதுதான் ஊரிலையிரெண்டவைபோலை.....

கோதாரிவிழுந்த எனக்குத்தான் விளங்கேல்ல.....

தன்துயரின் சிலபக்கங்களை வாசித்துக்காட்டினான் பொழிலன். ஊரில் பெயர்பெற்ற சிறந்த பத்திரிகைக்காரன், எழுத்தாளன், கவிஞன் என்று எல்லா மனங்களிலும் இடம்பிடித்திருந்த அவனது ஆழுமை, திறமை, செயலாற்றல் எல்லாவற்றையும் லண்டன் வருகை பறித்துக் கொண்டது. அந்தப்பத்திரிகைக்காரன் இன்னொருவருக்கு சொத்துரிமையாகிவிட்டான்.
 
மறுநாள் மதியம் அவனுக்குத் தொலைபேசியெடுத்தேன். வழமைபோல் அவனது பேச்சு இல்லை.

நான் வீடுமாறுறன்.
மாறினப்பிறகு ரெலிபோன் நம்பர்தாறன்.
அதுமட்டும் இஞ்சை எடுக்காதையுங்கோ ரகுவுக்கும் சொல்லுங்கோ.

புதுவருடத்தோடு அவனது தொடர்பு மீண்டும் அறுந்து போனது.

அவனது கையிலிருந்த பேனா அவன் கைகளைவிட்டு விலகி...
யாராவது ஊரவர்களின் தொடர்பு கிடைக்கின்ற போது அவனைப்பற்றிய விசாரிப்புக்கள்.....
ஒருகாலத்தில் எத்தனையோ உள்ளங்களைக் கொள்ளை கொண்ட அந்த இலக்கியக்காரனின் எழுத்துக்கள்.... அந்தப் பத்திரிகைக்காரனின் படைப்புக்கள் எல்லாமே.....
பழைய பத்திரிகைகளில்....
பழைய வெளியீடுகளில்....
அவன்....அவனது எழுத்து....
இப்போதும் இல்லை எப்போதும் உயிர்ப்புடன்தான் இருக்கும் அவன்போல் கோளையாக ஒதுங்கி ஒடுங்கி ஓடாது.....


மேலும் சில...
யாழ்ப்பாணப் பண்பாட்டின் தெரியப்படாத பக்கங்கள்
காணாமல் போனவை

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 18 Apr 2024 19:21
TamilNet
HASH(0x55fb25361a60)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 18 Apr 2024 19:26


புதினம்
Thu, 18 Apr 2024 19:26
















     இதுவரை:  24777919 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3091 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com